murasoli thalayangam
பொள்ளாச்சி விவகாரம் : “வெட்கமில்லாமல் எப்படி அறிக்கைகள் விடுகிறார்?” - பழனிசாமியை கிழித்தெடுத்த முரசொலி!
முரசொலி தலையங்கம்
22.05.2025
பழனிசாமியை தீர்ப்பு சுடவில்லையா?
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பை தி.மு.க. ஏன் சொந்தம் கொண்டாட வேண்டும் என்று கேட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தி.மு.க. இப்பிரச்சினையைக் கையில் எடுக்கவில்லை என்றால், குற்றவாளிகளும் கைதாகி இருக்க மாட்டார்கள், வழக்கும் முறையாக நடந்திருக்காது என்பதை மனச்சாட்சி உள்ள அனைவரும் அறிவார்கள். பழனிசாமியின் அ.தி.மு.க. ஆட்சி இந்த வழக்கை மொத்தமாக மறைக்கப் பார்த்தது.
2019 பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி மூன்று பேரைக் கைது செய்து, வழக்கை முடித்து விட அ.தி.மு.க. ஆட்சி திட்டமிட்டது. “இந்த விவகாரம் பற்றி இதுவரை முதலமைச்சர் பழனிசாமி ஏன் வாயைத் திறக்கவில்லை?” என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மார்ச் 13 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டார்கள்.
“கைதானவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்வதாக அறிவித்த சில மணி நேரத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்படுவதாக ஏன் அறிவிக்க வேண்டும். அடுத்த சில மணி நேரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் பரிந்துரை செய்ய வேண்டும்? ஒரே ஒரு எப்.ஐ.ஆர். போட்டுவிட்டு, அவர்கள் மீது குண்டர் சட்டமும் போடுவது, சட்டரீதியாக சில மாதங்கள் கழித்து தப்பிப்பதற்கு அரசே வழிஏற்படுத்தித் தருவது ஆகும். உடனே விரைவு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்” என்று தி.மு.க. தலைவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்கள். தி.மு.க. தலைவர் சொன்னது போலவே, இந்த குற்றவாளிகள் 3.11.2019 அன்று குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள். இந்த லட்சணத்தில் தான் வழக்கை நடத்தியது அ.தி.மு.க. ஆட்சி.
குற்றவாளிகளைக் காப்பாற்ற அ.தி.மு.க. ஆட்சி முயற்சிப்பதைக் கண்டித்து மார்ச் 12 ஆம் தேதி பொள்ளாச்சியில் தி.மு.க. மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மகளிரணி செயலாளர் கனிமொழி கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க. அனுமதி தரவில்லை. தடையை மீறி போராட்டம் நடத்தியதாக கனிமொழி உள்ளிட்ட தி.மு.க.வினரை கைது செய்தது அ.தி.மு.க. அரசு.
'பொள்ளாச்சி பாலியல் வன்முறையும் அ.இ.அ.தி.மு.க.வின் அலறலும்' என்ற தலைப்பில் மார்ச் 14 அன்று ‘முரசொலி' நாளிதழில் தலையங்கம் தீட்டப்பட்டது. 'இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகளின் தலையீடு இல்லை' என்று எஸ்.பி.பாண்டியராஜனை வைத்து பேட்டி தர வைத்தார்கள். 'இதில் அ.தி.மு.க. மீது தி.மு.க. பழிபோடுகிறது. இந்த விவகாரத்தையே தி.மு.க. தான் தூண்டுகிறது' என்று அன்றைய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி கொடுத்தார்.
காவல் துறை வெளியிட்ட முதல் தகவல் அறிக்கையில், பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்கள் இருந்தது. இதனைக் கண்டித்து மார்ச் 14 அன்று தி.மு.க. தலைவர் வெளியிட்ட அறிக்கையில்,“இது அப்பட்டமான விதிமீறல் ஆகும். பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இனி புகார் தராமல் இருப்பதற்காக விடப்படும் மறைமுக அச்சுறுத்தல் இது. குற்றவாளிகளைக் காப்பாற்ற தனது கபட நாடகத்தை தொடர்கிறது ஆளும் தரப்பு” என்று குற்றம் சாட்டினார்.
தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பொள்ளாச்சி ஜெயராமன், தனது ஆத்திரத்தை தி.மு.க. தலைவர் மீது பாய்ச்சினார். எனவே தி.மு.க. தலைவர் சார்பாக பொள்ளாச்சி ஜெயராமனுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் மார்ச் 14 அன்று அனுப்பி வைக்கப்பட்டது.
மார்ச் 14 அன்று அ.தி.மு.க. அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாணவ, மாணவியர் போராட்டம் நடத்தினார்கள். அன்றைய தினம் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தை மகளிர் அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். 'தமிழ்நாட்டுப் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பழனிசாமியே பதவி விலகு'என்று அவர்கள் முழக்கமிட்டார்கள். அன்றைய தினம் பொள்ளாச்சியில் அ.தி.மு.க. பிரமுகர் ‘பார்’ நாகராஜன் (பொள்ளாச்சி 34 ஆவது வார்டு ஜெ.பேரவை கிளைச் செயலாளர்) என்பவரின் ‘பார்’ பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்டது. இவர்தான் புகார் கொடுத்த பெண்களின் உறவினர்களை தாக்கியவர்.
எஸ்.பி.பாண்டியராஜனை மீண்டும் பேட்டி கொடுக்க வைத்தார் பழனிசாமி. “இந்த சம்பவத்தில் வேறு நபர்களுக்கோ அரசியல் தலையீடோ இல்லை” என்று அவர் பேட்டி அளித்தார்.
மார்ச் 15 அன்று தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. “உயர்நீதிமன்றக் கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை தேவை. எந்த வகையிலும் பாலியல் கொடூரக் குற்றவாளிகள் தப்பி விடக் கூடாது” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஏப்ரல் 4 அன்று பொள்ளாச்சியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இது பற்றி விரிவாக எடுத்துரைத்தார்கள். “பழனிசாமி ஆட்சியில் நீதி கிடைக்காது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அடுத்து அமையும் தி.மு.க. ஆட்சி மூலம் நீதி கிடைக்கும்” என்று அந்தக் கூட்டத்தில் உறுதி அளித்தார் தி.மு.க. தலைவர்.
அ.தி.மு.க. ஆட்சியில் அருளானந்தம், ஹரேன்பால், பாபு ஆகியோர் காப்பாற்றப்பட்டார்கள். தொடக்கத்தில் இவர்களை அ.தி.மு.க. ஆட்சி கைது செய்யவில்லை. சி.பி.ஐ. வந்து தான் கைது செய்தது. இவர்களை சி.பி.ஐ. கைது செய்த பிறகு தான் 6.1.2021 அன்று அருளானந்தம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்படுகிறார். (பொள்ளாச்சி அ.தி.மு.க. மாணவரணியைச் சேர்ந்தவர் இவர்) இந்த விவகாரத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த யாரெல்லாம் தொடர்பில் இருந்துள்ளார்கள் என்பதை ‘நக்கீரன்' இதழ் (2025 மே 17-20) வெளிப்படுத்தி இருக்கிறது. இதற்குப் பிறகும் வெட்கமில்லாமல் பழனிசாமி அறிக்கைகள் எப்படி விடுகிறார்?
Also Read
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?