murasoli thalayangam

”மாநிலத்தை மட்டுமல்ல, மக்கள் மனங்களையும் ஆள்வார்” : முரசொலி தலையங்கம் புகழாரம்!

முரசொலி தலையங்கம் (07-05-2025)

மாநிலத்தையும் .... மனங்களையும்...!

ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது திராவிட நாயகன் – மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு. ஆறாவது முறை திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் அமர வைத்தவர் அவர். ஏழாவது முறையும் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் அமர வைக்கப் போகிறவரும் அவரே!

அவரே தலைவர்! தலைவர்களுக்கு எல்லாம் தலைவராக 2018 முதல் தலைநிமிர்ந்து நிற்கிறார்!

அவரே முதல் அமைச்சர்! முதலமைச்சர்களுக்கு எல்லாம் முதலமைச்சராக 2021 முதல் தன்னையும் உயர்த்தி -தமிழ்நாட்டையும் உயர்த்திக் காட்டி விட்டார்!

அவரைக் கலைஞர் அல்ல என்றார்கள். இவர் பெரியாரை பேசமாட்டார் என்றார்கள். அண்ணா இல்லை இவர் என்றார்கள். கலைஞரைப் போல சமாளிக்க முடியாது என்றார்கள். ஆட்சிக்கு வர முடியாது என்றார்கள். அவருக்கு கட்டம் சரியில்லை என்றார்கள். அவரால் ஆட்சி செய்ய முடியாது என்றார்கள். மோடி நசுக்கி விடுவார்கள் என்றார்கள். அமித்ஷாவை எதிர்கொண்டு நிற்க முடியாது என்றார்கள். பா.ஜ.க. ஆட்சி, எந்த உதவியும் செய்யாமல் நசுக்கி விடும் என்றார்கள். பா.ஜ.க.வை அனுசரித்துச் சென்றால் தான் ஆட்சி நடத்த முடியும் என்றார்கள். எதிர்ப்பு அரசியல் சாத்தியம் இல்லை, சரணாகதி அரசியல் தான் கை கொடுக்கும் என்றார்கள். நிதி இல்லை என்றார்கள். வெறும் கையில் முழம் போட முடியாது என்றார்கள். திராவிடமே இனி அவ்வளவுதான் என்றார்கள். திராவிட இயக்கத்துக்கு முற்றுப்புள்ளி என்றார்கள்.

என்றவர்கள் அனைவரும் இவரது சாதனைகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் வேதனைகளையும் எண்ணிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பழனிசாமி பதவியை விட்டு இறங்கும் போது, ‘ஆமாம்! தரையோடு தரையாக ஊர்ந்து கொண்டுதான் இருந்தது தமிழ்நாடு’. இதைச் சொன்னால் அவருக்கு கோபம் வருகிறது. கோபம் வரத்தான் செய்யும். சசிகலாவுக்கு ஒழுங்காக கப்பம் கட்டுவதாக நடித்து பதவியைப் பெற்று, அவரது காலையே வாரி – பா.ஜ.க.வின் பாதம் தாங்கியாக மாறி - – தமிழ்நாட்டைச் சூறையாடி - – தரைமட்டத்துக்கு தாழ்த்தியதுதான் பழனிசாமியின் சாதனை.

பழனிசாமியின் சாதனையை அன்றைய (7.12.2020) ‘இந்தியா டுடே’ என்ன சொன்னது தெரியுமா...?

* உள்கட்டமைப்பில் 20 வது இடம் ,

* ஐந்து ஆண்டுகளின் செயல்பாட்டில் 19 வது இடம்,

* விவசாயத்தில் 19 ஆவது இடம்,

* சுற்றுலாவில் 18 ஆவது இடம்,

* உள்ளடக்கிய வளர்ச்சியில் 18 ஆவது இடம்,

* தொழில் முனைவோர் முன்னேற்றத்தில் 14 ஆவது இடம்,

* ஆட்சி நிர்வாகத்தில் 12 ஆவது இடம்,

* தூய்மையில் 12 ஆவது இடம்,

* சுகாதாரத்தில் 11 ஆவது இடம்,

* கல்வியில் 8 ஆவது இடம்,

* பொருளாதார வளர்ச்சியில் 8 ஆவது இடம்

* சுற்றுச்சூழலில் 6 ஆவது இடம்,

* சட்டம் ஒழுங்கில் 5 ஆவது இடம் - இதுதான் பழனிசாமியின் தமிழ்நாடு. மொத்தமே 20 மாநிலங்களை மட்டும் வைத்து எடுத்த அளவுகோலில் பெரும்பாலும் பழனிசாமி 19 ஆவது இடம். இத்தகைய தமிழ்நாட்டை தூக்கி நிறுத்தியதுதான் முதலமைச்சரின் மகத்தான சாதனை.

தமிழ்நாடு 9.69 விழுக்காடு உண்மையான பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி 6.5 விழுக்காடுதான். இதை வைத்துப் பாருங்கள். உண்மை புரியும். தமிழ்நாட்டின் வளர்ச்சியானது எத்தகையது என்பதை அறியலாம்.

நிலையான விலைமதிப்பின் படி தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GSDP) ரூ.17 லட்சத்து 23 ஆயிரத்து 698 கோடியாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் 24- – 25 ஆவது ஆண்டில் ரூ.3.58 லட்சம் ஆகும். இது தேசிய சராசரியான ரூ.2.06 லட்சத்தை விட 1.74 மடங்கு அதிகம் ஆகும். உயர் கல்வியில் தமிழ்நாட்டின் சேர்க்கை விகிதம் 47 விழுக்காடாக உயர்ந்து விட்டது. நிதி ஆயோக் வெளியிட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான குறியீட்டில் தமிழ்நாடு 788 புள்ளிகளுடன் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

தமிழ்நாடு வறுமை ஒழிப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பெற்றுள்ளது. வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் 1.43 விழுக்காடு மக்கள்தான். வறுமைக் கோட்டுக்கு கீழ் இந்தியாவில் வாழும் மக்கள் தொகை 11.2 விழுக்காடு ஆகும். மருத்துவமனைகளை நோக்கி மக்கள் வருவதை மாற்றி மக்களைத் தேடி மருத்துவம் செல்லும் காலத்தை உருவாக்கி இருக்கிறது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டமானது ஐ.நா. அமைப்பின் விருதைப் பெற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 2.25 கோடி மக்கள் பயனடைந்து வருகின்றனர். 5.35 இலட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் வரப்பெற்ற தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 47 விழுக்காடாக ஆகி இருக்கிறது.

காற்றாலை உற்பத்தி, சூரிய சக்தி, புத்தாக்க நிறுவனங்கள் உருவாக்கம், ஏற்றுமதி தரக் குறியீடுகள், மின்னணு சாதன ஏற்றுமதி ஆகிய அனைத்திலும் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது இடத்துக்கு வந்துவிட்டது தமிழ்நாடு.

முதலமைச்சர் அவர்களே சொன்னது மாதிரி பாம்பு , நரி , அகழி , தடுப்புச் சுவர்களுக்கு இடையில் செய்யப்பட்ட சாதனைகள் தான் இவை. பாம்பின் கொடுக்கு முறிக்கப்பட்டது. விஷமுறிவு மருந்துகள் ( சமூகநீதி – -மாநில உரிமைகள்) நிறைய கை வசம் பல்லாண்டுகளாக இருப்பில் உள்ளன. நரித் தந்திரங்களின் நாடகங்கள் அனைத்தையும் மாண்புமிகு முதலமைச்சர் ஐம்பது ஆண்டுகளாக அறிந்தவர். அகழியையும் பார்த்தவர், ஆழ்கடலையும் பார்த்தவர். புயல்வீசும் காலத்தில் கலம் செலுத்துபவனே மிகச் சிறந்த படகோட்டி என்பதை மிசா காலம் முதல் அறிந்தவர். தடுப்புச் சுவர்களை உடைத்துத்தான் அரைநூற்றாண்டு கால அவரது அரசியலே இருக்கிறது.

ஏச்சும், பேச்சும், கேலியும், கிண்டலும் அவருக்கு உரமாய், அரணாய் இருந்து வளர்த்துள்ளது. களைகளைக் களைவதில் கூட களைப்படையாதவர். எதிரிகளை வீழ்த்திய எண்ணிக்கையை மனதுக்குள் வைத்திருப்பார்.

கொள்கை, அவருக்கு ரத்தத்தால் ஊட்டப்பட்டது. இயக்கம், அவரை இளமைக் காலத்திலேயே அணைத்துக் கொண்டது. தியாகம், தன்னைத்தானே சோதித்துக் கொண்டது. உழைப்பு அவரது உடம்புக்குள் குடியேறிவிட்டது. நிர்வாகத் திறமை, அனுபவங்களால் வாய்த்தது. சமூக அக்கறை பெரியார் கொடுத்தார். பொறுமையை அண்ணா வழங்கினார். நினைத்ததை முடிக்க கலைஞர் கற்றுக் கொடுத்தார்.

அவர் பல்லாண்டுகளாக படித்த பாடத்தில் பாதியைத்தான் நான்காண்டுகள் நாட்டுக்கு கொடுத்திருக்கிறார். அடுத்த ஆண்டும் ஆள்வார். அடுத்தடுத்த ஐந்தாண்டும் ஆள்வார். மாநிலத்தை மட்டுமல்ல, மனங்களையும்!

தேர்தலே வைக்காமல் அவரை முதலமைச்சராக தேர்வு செய்து வைத்திருக்கிறார்கள் மக்கள். வாக்களிக்காமலேயே வாகை சூடி வைத்துள்ளார்கள் மக்கள்!

Also Read: சாதிவாரி கணக்கெடுப்பு பீகாருக்காக மோடி நடத்தும் நாடகம் : உண்மையை உரக்க சொன்ன முரசொலி!