murasoli thalayangam

மாணவர்களின் தனித் திறமைகளை வெளிக்கொண்டுவரும் திராவிட மாடல்! : முரசொலி புகழாரம்!

இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளை உருவாக்கும் அரசாக, தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.

“விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நான், எட்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்தேன். சிறுவயது முதல் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்பது எனது இலட்சியம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய ‘நான் முதல்வன்’ திட்டம் எனது லட்சியத்தை அடைய பயனுள்ளதாக இருந்தது. ‘நான் முதல்வன்’ திட்டத்தை உருவாக்கி அதைச் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி” என்று சொல்லி இருக்கிறார் மாணவி தீபிகா.

“ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு முதலில் நான் தனியாகப் படித்தேன். ஆனால் எனக்கு தேர்ச்சி கிடைக்கவில்லை. அதன் பிறகு ‘நான் முதல்வன்’ திட்டத்தில் சேர்ந்து படித்தேன். கடின உழைப்பால் வெற்றி கிடைத்தது” என்று சொல்லி இருக்கிறார், தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்த மாணவர் சிவச்சந்திரன்.

2024இல் நடைபெற்ற குடிமைப் பணித் தேர்வை இந்திய அளவில் 5.83 லட்சம் பேர் எழுதினார்கள். இதில் 1,009 பேர் முதன்மைத் தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 57 பேர். இந்திய குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி ஆகும்.

2014இல் குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 11 விழுக்காடு மாணவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 2017இல் இது 7 விழுக்காடாகக் குறைந்தது. 2019 ஆம் ஆண்டில் 6.69 விழுக்காடாக இறங்கியது. 2020 ஆம் ஆண்டில் 5 விழுக்காடாகத் தேய்ந்தது. 2021 இல் தி.மு.க. அரசு அமைந்த பிறகு இதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது.

அனைத்து மாணவர்களையும் தனித் திறமை கொண்டவர்களாக மாற்ற ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தை முதலமைச்ச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கினார்கள். இதில் தனிப்பிரிவாக ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி தரப்பட்டது. ‘நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவை’ 7.3. 2023 அன்று துணை முதலமைச்சர் உதயநிதி அவர்கள் தொடங்கி வைத்தார். அதன் வெற்றியைத்தான் இப்போது நாம் பார்க்கத் தொடங்கி இருக்கிறோம்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவச்சந்திரன் என்ற மாணவர் மாநிலத்தில் முதலிடமும் அகில இந்திய அளவில் 23 ஆம் இடமும் பெற்றுள்ளார். மோனிகா என்ற மாணவி இந்திய அளவில் 39 ஆம் இடம் பெற்றுள்ளார். இருவரும் தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் படித்த 134 பேர் நேர்முகத் தேர்வுக்குச் சென்ற நிலையில், 50 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். தமிழ் வழியில் தேர்வு எழுதிய காமராஜ், சங்கர பாண்டியன் உள்ளிட்டோரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அண்ணா நிருவாகப் பணியாளர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “நான் முதல்வன்” திட்டம் மற்றும் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று இந்திய குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்ற 50 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், துணை முதலமைச்சர் உதயநிதி அவர்களும் வழங்கி வாழ்த்தினார்கள்.

இது குறித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் பெருமிதத்துடன் துணை முதலமைச்சர் உதயநிதி அவர்கள் பேசினார்கள்.

“யு.பி.எஸ்.சி. (UPSC) தேர்வு முடிவுகள் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. ‘நான் முதல்வன்’ போட்டித்தேர்வுகள் பிரிவை கடந்த 2023– ஆம் ஆண்டு நாம் துவங்கினோம். சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின்கீழ் செயல்படும் இந்தப் பிரிவுக்காக முதல் –அமைச்சர் 10 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து கொடுத்தார்.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே, 47 தமிழ்நாட்டு மாணவர்கள் UPSC தேர்வில் வெற்றி பெற்றார்கள். இது முந்தைய ஆண்டுகளைவிட கிட்டத்தட்ட 30 சதவீதம் அதிகமானதாகும். அதன் தொடர்ச்சியாகத்தான், இந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து 57 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். 57 மாணவர்களில் 50 மாணவர்கள் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் ஊக்கத் தொகை பெற்றவர்கள். அவர்களில் ‘18 பேர் நான் முதல்வன்’ உறைவிடப் பயிற்சித் திட்டத்தால் பயன் பெற்றவர்கள்” என்று குறிப்பிட்டார் துணை முதலமைச்சர் அவர்கள்.

ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய குடிமைப்பணித் தேர்விற்காக தயாராகி வரும் ஆர்வலர்களில் மதிப்பீட்டுத் தேர்வு மூலம் 1,000 இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வீதம் மொத்தம் ரூ.75,000/– அரசு வழங்கி வருகிறது.

முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு, ரூ.25,000 ஊக்கத் தொகையாக அரசு வழங்கி வருகிறது.

அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் தங்கிப் பயிலும் முதன்மைத் தேர்வுப் பயிற்சி மாணவர்களுக்கு ரூ.9,000 அரசு வழங்கி வருகிறது.

டெல்லியில் நடைபெறும் குடிமைப்பணி ஆளுமைத் தேர்வில் கலந்து கொள்ளும் ஆர்வலர்களுக்கு இதுவரை 5 ஆயிரம் ரூபாய் தரப்பட்டு வந்தது. அதனை ரூ. 50 ஆயிரம் ஆக்கி உள்ளது அரசு.

மதுரை, கோவையில் பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு பயிற்சிக்காலம் இதுவரை 6 மாதமாக இருந்தது. இது 9 மாதம் என உயர்த்தப்பட்டது. அவர்களுக்கு உணவுக்காகச் செலவிடப்படும் மாதாந்திரத் தொகை ரூ.3000/–லிருந்து ரூ.4500/–ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா நகரில் 4000 சதுர அடி பரப்பில் 200 மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் குளிரூட்டப்பட்ட படிப்பகம் ‘நான் முதல்வன்’ திட்டம் வாயிலாகத் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

சென்னை செனாய் நகர் பகுதியில் 500 மாணவர்கள் தங்கிப் பயிலக் கூடிய வகையில் அனைத்து நவீன வசதிகளுடன் ஒரு பயிற்சி மையம் 40 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

இந்திய குடிமைப் பணித் தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்கள் வென்று, இந்திய ஆட்சிப் பணிப் பதவிகளைக் கைப்பற்ற முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உறுதி ஏற்றுச் செயல்பட்டு வருகிறார்கள். இது தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இளைஞர் அரசாக, அறிவின் அரசாகச் செயல்படுவதாக இளைஞர்கள் பாராட்டி வருகிறார்கள்.

Also Read: தி.மு.க ஆட்சியில் 13 புதிய தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளது : அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்!