murasoli thalayangam

ஜெகதீப் தன்கர் பேசுவது சட்டப்பூர்வமானது அல்ல : நீதித்துறைக்கு அதிகாரம் இருக்கிறது - முரசொலி!

முரசொலி தலையங்கம் (21-04-2025)

தன்கர் பேசுவது சட்டப்பூர்வமானது அல்ல!

தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பு ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க.வை நிலைகுலைய வைத்துள்ளது. அவர்கள் நேரடியாக உச்சநீதிமன்றத்தை விமர்சிக்க முடியாமல், குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை இறக்கி விட்டுள்ளார்கள்.

"மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்திருப்பது கண்டிக்கத்தக்கது. நீதிமன்றங்கள் குடியரசுத் தலைவரை வழிநடத்தும் சூழ்நிலை ஜனநாயகத்தில் இருக்க முடியாது. நீதிமன்றங்கள் குடியரசுத் தலைவருக்கு எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது” என்று பேசி இருக்கிறார் துணை குடியரசுத் தலைவர்.

“குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது” என்று எதன் அடிப்படையில் சொல்கிறார் தன்கர்? இப்படிச் சொன்னவர், இப்படிச் சொல்கிறது அரசமைப்புச் சட்டம் என்று சொல்லி இருந்தால், அதனை எடுத்துப் படித்துப்பார்த்து விட்டு தன்கரை பாராட்டலாம். ஆனால், தன்கர் தான் யோசித்ததை எல்லாம் பேசத் தொடங்கி இருக்கிறார்.

இந்தியாவின் குடியரசுத் தலைவருக்கு யாரும் உத்தரவு போட முடியாது என்று அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிறதா? இந்தியாவின் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று அரமைப்புச் சட்டத்தில் இருக்கிறதா? இரண்டுக்கும் பதில், 'இல்லை' என்பதுதான். பிறகு எதை வைத்துக் கொண்டு, ‘குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது' என்று சொல்கிறார் தன்கர்?

குடியரசுத் தலைவர் தனக்கு முன்னால் வரும் சட்ட மசோதாக்களை மூன்று மாதங்களுக்குள் முடிவெடுத்துச் சொல்லவேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பர்த்திவாலா, மகாதேவன் அமர்வு சொன்னதில் என்ன குறையைக் கண்டீர்கள்? ‘மூன்று மாதம் என்பது குறைவானது, ஆறு மாதம் வைத்துக் கொள்ளுங்கள்' என்று கேட்டால் கூட அதில் நியாயம் இருக்கலாம். ஆனால் கால நிர்ணயம் செய்யவே கூடாது என்று சொல்வது என்ன சட்டம்? நியாயம்? நீதி?

இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதி விசாரணைக்கு உட்பட்ட அதிகாரங்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் 124 முதல் 147-இன் கீழ் எழுதப்பட்டுள்ளன. தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பு ஆகும். எவரின் அடிப்படை உரி- மைகள் மீறப்பட்டாலும் அதில் தலையிடும் உரிமை உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு. அரசமைப்புச் சட்டப் பிரிவு 131 இன் கீழ், இந்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டால், மாநிலங்களுக்கு இடையில் பிரச்சினை எழுந்தால் அதன் மீது முடிவெடுக்கும் அதிகாரம் தரப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டத்தை ஆய்வு செய்யும் அதிகாரம், அதனை வரையறுத்தல், விளக்கம் அளித்தல் ஆகியவை உச்ச நீதிமன்றத்துக்கு இருக்கிறது. எந்த உயர்நீதிமன்றத்தின் எந்தத் தீர்ப்புக்கும் மேல்முறையீடு செய்யப்பட்டால் அதனை விசாரிக்கும் அதிகாரம் நீதித்துறைக்கு இருக்கிறது.

குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் தேர்தலை விசாரிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு உள்ளது. பிரிவு 143 இன் கீழ் ஒன்றிய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் உச்ச நீதிமன்றம் பல்வேறு காலக்கட்டங்களில் அறிவுரைகள், வழிகாட்டுதல்கள் வழங்கி உள்ளது.

அரசமைப்பை பாதுகாக்கும் அதிகாரமும் பொறுப்பும் உச்சநீதிமன்றத்துக்கு இருக்கிறது. அதனால்தான் நீதிபதிகள் பல்வேறு காலக்கட்டங்களில் அரசமைப்பு சட்டத்தின் பக்கத்தில் நின்று கேள்வி கேட்கிறார்கள். நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ, உயர்நீதி மன்றங்களிலோ சட்ட முரணான தீர்ப்புகள் வழங்கப்பட்டால் அதனை விசாரிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு இருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப் படாத அதிகாரங்களை நாடாளுமன்ற மானது உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கலாம்.

இந்த வரிசையில் உள்ள முக்கியமான அதிகாரம்தான் பிரிவு 142 ஆகும்.

“அரசமைப்புச் சட்டம் 142 ஆவது பிரிவின்படி உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களை ஒப்புதல் தரப்பட்டவையாக நாங்கள் அறிக்கிறோம். நீண்ட காலமாக மசோதாவை நிலுவையில் வைத்திருந்த ஆளுநர், அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததன் மூலமாக நேர்மையற்ற செயல் செய்துள்ளார். இது போன்று பஞ்சாப் அரசு தாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்- றம் ஒரு தீர்ப்பை தந்தது. அன்றைய தினம், குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு ஆளுநர் திருப்பி அனுப்பி இருக்கிறார். எனவே, மசோதாக்கள் மறுபரிசீலனைக்கு எப்போது தமிழ்நாடு அரசால் அனுப்பி வைக்கப்பட்டதோ, அந்த நாளில் இருந்தே அவை ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றன”என்று உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் ஜே.பி.பார்த்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வு தீர்ப்பு அளித்தது.

“அரசியல் சாசனம் பிரிவு 142 இன் படி முழுமையான நீதியை வழங்குவதற்குத் தேவையான எந்தத் தீர்ப்பையும் அல்லது உத்தரவையும் உச்சநீதிமன்றம் வழங்கலாம்.” என்று உச்ச நீதிமன்றத்தின் அந்த அமர்வு சொன்னது. இது பா.ஜ.க.வின் சதி அரசியலை ஆட்டம் காண வைத்துள்ளது.

தமிழ்நாடு அரசால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அரசமைப்பு சட்டத்துக்கு தான் உச்ச நீதிமன்றம் பாதுகாப்பு தருகிறது. அதுகூட பொறுக்கவில்லை தன்கருக்கு.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், "மக்களாட்சியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தான் அரசை நடத்த வேண்டும், அலங்கார நியமனப் பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள் அல்ல. எந்தத் தனிநபரும், அது எத்தகைய உயர் பொறுப்பில் இருப்பவரானாலும் அவர் சட்டத்துக்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும். இதைத்தான் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.”என்று மிகச் சரியாகச் சொல்லி இருக்கிறார்கள்.

ஆளுநர்களும் குடியரசுத் தலைவரும் அமைச்சர்கள் குழுவின் ‘உதவி மற்றும் ஆலோசனை'யின் பேரில்தான் செயல்படுகிறார்கள். செயல்பட வேண்டும் என்பதுதான் இந்திய அரசமைப்புச் சட்டம் ஆகும். சட்டமன்றங்களால் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்டத்தை, ஆளுநர்கள் நிறுத்தி வைப்பதைப் போல, நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை குடியரசுத் தலைவர் நிறுத்தி வைத்தால் என்ன ஆகும்? நிறுத்தி வைக்க அனுமதிப்பார்களா ஒன்றிய ஆட்சியாளர்கள்?

Also Read: ”தத்ரூபமாக புலிவேஷம் போடும் நயினார் நாகேந்திரன்” : முரசொலி தலையங்கம்!