murasoli thalayangam
”தத்ரூபமாக புலிவேஷம் போடும் நயினார் நாகேந்திரன்” : முரசொலி தலையங்கம்!
முரசொலி தலையங்கம் (19-04-2025)
வளர்ச்சியான மாநிலங்களே...
மாநில சுயாட்சி கேட்டால், அதனைப் பிரிவினைவாதம்' என்று ‘புதிய நயினார்' புலம்புகிறார். புலியை விட புலிவேஷம் போடுபவர் தத்ரூபமாக ஆடுவார்கள் என்பதை நயினார் நாகேந்திரன் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
மாநில சுயாட்சி இன்று ஏன் தேவை என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
1. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இருக்கும் மாநிலப் பட்டியல் என்பதை மதிப்பதே இல்லை. அதில் இருக்கும் பொருள்கள் குறித்தும், அவர்களே சத்தமில்லாமல் சட்டமியற்றிக் கொள்கிறார்கள். சட்டமியற்றும் அதிகாரத்தை முடக்குவதன் மூலமாக மாநிலங்களின் கை, கால் அசைக்க முடியாத நிலையை உருவாக்கப் பார்க்கிறார்கள்.
2. கல்வி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி, நகர்ப்புற மேம்பாடு என அனைத்தையும் மாநிலங்கள்தான் முன்னெடுத்துச் செல்கின்றன. ஆனால் மாநிலங்கள் நினைப்பதைச் செய்ய முடியாத தடையை ஏற்படுத்துகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
3. நிதி உரிமையைப் பறிக்கும் வகையில் வரி உரிமைகளைப் பறித்தார்கள். இழப்பீடு தருவதாக நடித்தார்கள். அந்த இழப்பீட்டையும் சில காலத்தில் நிறுத்தினார்கள். இப்போது, மாநில அரசுகள், ஒன்றிய அரசை நோக்கி பிச்சைப் பாத்- திரம் ஏந்தி நிற்கும் காட்சியைத்தான் பார்க்கிறோம். ஒரு மாநிலத்துக்கு ஆக்ஸிஜனாக இருப்பது நிதி உரிமையே. இதனைப் பறிப்பது, மூச்சற்ற நிலையை உருவாக்குவதே ஆகும்.
4. மொழி, இன, பண்பாடு ஆகியவற்றின் தனித்தன்மைகளை உறுதிசெய்யும் வண்ணம் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டியது இன்றியமையாததாகும்.
5. ‘நீட்' தேர்வானது மருத்துவக் கல்விக் கனவைச் சிதைப்பதாக இருக்கிறது. ஏராளமான மாணவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள். இந்தத் தேர்வு ‘மோசடியானது' என்பதை சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையே சொல்கிறது. உச்சநீதிமன்றத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தேர்வு இந்தத் தேர்வு. கோச்சிங் சென்டர்கள் கோடிகளைச் சம்பாதிக்க உருவாக்கப்பட்டதே இந்தத் தேர்வு என்று தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். ஆனால் அதனை நீக்க மறுக்கிறார்கள்.
6. 'மும்மொழிக் கொள்கை' என்ற போர்வையில் இந்தி மொழியைத் திணித்து, இந்தி பேசாத மக்களை இந்திய நாட்டில் இரண்டாம் தர மக்களாக மாற்றும் சூழ்ச்சி ஆகும்.
7. ஒன்றிய நிதிக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மாநிலங்களுக்குப் பகிரப்படும் நிதியானது தமிழ்நாடு போன்ற பொருளாதாரத்தில் முன்னேறியுள்ள மாநிலங்களின் பங்களிப்பிற்கு ஈடாகத் தரப்படுவது இல்லை. நாம் பங்களிக்- கக் கூடிய ஒரு ரூபாய் வரியில் 29 பைசா மட்டுமே நமக்கு நிதிப்பகிர்வாக அளிக்கப்படுகின்றது.
8. இயற்கைச் சீற்றங்களினால் தமிழ்நாடு பாதிக்கப்பட்ட போதெல்லாம்கூட, உரிய இழப்பீடுகள், தகுந்த ஆய்வு மற்றும் அளவீடுகள் செய்த பின்னரும், பல முறை வலியுறுத்தியும், வழங்கப்படவே இல்லை.
9. தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கச் சதி செய்கிறார்கள். 39 பேர் இருக்கும் போதே அவர்களது பேச்சுகள், ஒன்றிய அரசின் மூடிய காதுகளைத் திறக்கவில்லை. 31 என ஆனால் என்ன ஆகும் எனச் சொல்லத் தேவையில்லை.
10. இன்றைய ஆளுநர் வந்தது முதல் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குக் குழிதோண்டிக்கொண்டு இருக்கிறார். நாம் இயற்றிய சட்டமுன்வடிவுகள்மீது உரிய ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார். அவரது செயலை ‘சட்டவிரோதம்' என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்தபிறகும் அவர் திருந்தவில்லை. திருந்தமாட்டார். அவரது குணத்தை எந்தத் தீர்ப்பும் மாற்றமுடியாது. ஆளுநர் பதவியே தேவையில்லை என்பதுதான் நிரந்தரத் தீர்வாக அமையும்.
- இவைதான் மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்ற அவசர அவசியத் தேவைகளாக அமைந்திருந்தன. இதற்கு உரிய விளக்கத்தை முதலில் புதிய நயினார் விளக்க வேண்டும். அதன் பிறகு மற்ற விவாதங்களை நடத்தலாம்.
எந்தக் கேள்வி கேட்டாலும், 'அமித்ஷா தான் சொல்ல வேண்டும்' என்று சொல்லும் நயினார் அவர்கள், இதற்கான பதில்களையும் அமித்ஷாவிடம் கேட்டுச் சொல்லலாம்.
புதிய நயினார், புதிதாக இதனைச் சொல்லவில்லை. 'ஐம்பது ஆண்டுகளாக, பிரிவினைவாதம் என்ற குற்றச்சாட்டைத்தான் சொல்கிறார்கள்' என்று தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர். எஸ்.பாரதி மிகச் சரியாகச் சொல்லி இருக்கிறார். கேட்டுக் கேட்டு புளித்துப் போன பழைய புலம்பல்தான் நயினார் புலம்பல்.
"பிரிந்துபோகும் தன்மையுடன்கூடிய மாநில சுயாட்சியை நாம் கேட்கவில்லை” என்பதை (18.2.1978) தொடர்ந்து தெளிவுபடுத்தினார் கலைஞர். "தேசிய நீரோட்டமென்பது டெல்லிப் பட்டணத்தை சர்வாதிகாரக் கோட்டையாக அமைத்துக் கொண்டு மாநிலங்களின் உரிமையைப் பறிப்பது என்றால், அந்த நீரோட்டத்தில் விழுந்து, மிதந்து எங்கேயோ ஒதுங்கிவிட தி.மு.க. தயாராக இல்லை. 'வேற்றுமையில் ஒற்றுமை' காண்பதற்குப் பதிலாக 'எல்லாவற்றையும் ஒன்றாக்குகிறோம்' என்ற பெயரால் மொழி, கலை, இலக்கியம், கலாச்சாரம் போன்ற தனித்தன்மைகளை உருக்குலைப்பதுதான் தேசிய நீரோட்டமென்றால் அந்த நீரோட்டத்தில் எதிர் நீச்சலடிக்கத்தான் தி.மு.க. துணியும். நாடு, கேடுபுகக் கூடாது ஒற்றுமையின்மையால்! நமக்கு அதில் அக்கறையுண்டு! பகை நுழையத் துளி இடமும் தந்திடலாகாது. அப்படிப்பட்ட நேரத்தில் துள்ளிவரும் வேலாக, ஆவேசத்தை அள்ளிவரும் வாளாக தி.மு.க. வடிவெடுக்கும். இவைதான் தேசிய நீரோட்டமென்றால் அட்டியில்லை ஒப்புதவற்கு” என்று எழுதினார் (12.8.1977) கலைஞர்.
‘விழுதுகள் வலிவடைவதால் ஆலமரத்தின் அடிமரம் வலுவிழந்து விடுவது இல்லை. விழுதுகள் சேர்ந்துதான் ஆலமரம் பலமுள்ளதாகத் திகழ்கிறது. அதுபோல மாநிலங்கள் அதிக அதிகாரம் பெற்றுத் திகழ்வது மத்திய அரசை வலுப்படுத்தும் வகையில்தான் அமையும், அமைய வேண்டும். நாங்கள் கேட்பது சுயாட்சியே தவிர தன்னாட்சியுமல்ல, சுதந்திரமுமல்ல” என்பதை (16, 27.18.1976 முரசொலி) தெளிவுபடுத்தினார் கலைஞர்.
இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், இதனைத் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். "வளர்ச்சியான மாநிலங்களே, வலிமையான இந்தியாவை உருவாக்கும்” என்று சொல்லி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள். ஒருவிதத்தில் சொன்னால், ‘இது இந்தியாவை வலிமைப்படுத்தும் குரலே' தவிர, இந்தியாவைப் பிரிக்கும் குரல் அல்ல. பா.ஜ.க.வின் எதேச்சதிகாரம் இந்தியாவை பலவீனப்படுத்தும். முதலமைச்சரின் மாநில சுயாட்சி, இந்தியாவை வலிமைப்படுத்தும்.
Also Read
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!