murasoli thalayangam
7 ஒப்பந்தத்தில் ஏன் கச்சத்தீவு இல்லை? : பிரதமர் மோடிக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!
முரசொலி தலையங்கம் (08-04-2025)
ஏழு ஒப்பந்தத்தில் ஏன் இல்லை கச்சத்தீவு?
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.
*இந்தியா - இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை.
*இந்தியா - இலங்கைக்கு இடையிலான எரிசக்தி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி புரிந்துணர்வு ஒப்பந்தம்.
* இந்தியா- இலங்கைக்கு இடையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
* இந்தியா - இலங்கை - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய மூன்று நாடுகளுக்குஇடையில் திருகோணமலை எரிசக்தி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
*கிழக்கு மாகாணம் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை
*இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் சுகாதாரம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்
* இந்தியாவின் மருத்தக நிறுவனம் மற்றும் இலங்கை தேசிய மருந்தாக்கல்கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை. ஆகிய ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகி இருக்கிறது. இந்த ஏழு ஒப்பந்தத்தில் ஏன் இல்லை கச்சத்தீவு?
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திடீரென்று கச்சத்தீவைப் பற்றி இந்தியாவின் பிரதமர் பேசினார். உள்துறை அமைச்சர் பேசினார். வெளியுறவுத் துறை அமைச்சர் பேசினார். பாதுகாப்புத் துறை அமைச்சர் பேசினார். நிதி அமைச்சர் பேசினார். இவர்கள் அனைவரும் பேசியதைப் பார்க்கும் போது கச்சத்தீவுக்காக இலங்கை மீது இந்தியா படையெடுக்கத் திட்டமிட்டிருக்கிறதோ என்ற அச்சம் ஏற்பட்டது. அந்தளவுக்கு பேசினார்கள்.
ஆனால் இலங்கைக்குச் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், அங்கே ‘கச்சத்தீவு' என்ற வார்த்தையே பயன்படுத்தவில்லை. எப்போது சொல்லி இருக்க வேண்டுமோ அப்போது சொல்ல வில்லை.
இந்திய பிரதமர்களில் இலங்கைக்கு மிகமிக நெருக்கமான பிரதமராக தன்னைக் காட்டிக் கொள்ளக் கூடியவர் இன்றைய பிரதமர் நரேந்திர மோடிதான்.
இந்த பத்தாண்டு காலத்தில் நான்கு முறை இலங்கைக்குச் சென்றிருக்கிறார். தன்னுடைய நட்புறவை நெருக்கமாகக் காட்டுவதில் துடியாகத் துடிக்கிறார் மோடி. இந்தியப் பிரதமர் ஆனதும் 2015 ஆம் ஆண்டே இலங்கைக்குச் சென்றார் மோடி. 2017 ஆம் ஆண்டும் சென்றார். 2019 ஆம் ஆண்டும் சென்றார்.
இப்படி அவர் செல்லும் பயணத்தில் இது நான்காவது முறை.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் இலங்கைக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கிய முதல் நாடாக இந்தியா இருந்தது. 2022-ஆம் ஆண்டில், இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது, 4 பில்லியன் டாலர் வழங்கியது. இப்படி தன்னுடைய நல்லெண்ணத்தை பிரதமர் மோடி வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார்.
இதையெல்லாம் மனதில் வைத்துத் தான் பிரதமர் மோடிக்கு அந்த நாட்டின் அதி உயர் விருதான ஸ்ரீலங்கா மித்திர விபூஷண விருது வழங்கப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதனை வழங்கி இருக்கிறார். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது இலங்கை அரசு அவரை பெருமைக்குரியவராக, மதிப்புக்குரியவராக, கௌரவத்துக்குரியவராக நினைப்பதாகவே தெரிகிறது. இந்த நல்ல சூழலைப் பயன்படுத்தி கச்சத்தீவுக்கு ஒரு ஒப்பந்தம் போட்டிருக்கலாமே? அப்படி எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை.
இதை விடக் கொடுமை என்ன என்றால்... இந்தியப் பிரதமர் மோடியும், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்கள். “இலங்கை மற்றும் இந்திய மீனவப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை எட்ட நடவடிக்கை எடுக்குமாறு நான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்தேன்” என்று இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.
இந்தியச் சிறைகளில் இலங்கை மீனவர்கள் இருக்கிறார்களா? இலங்கை மீனவர்களை நாம் கொல்கிறோமா? சிறை வைக்கிறோமா? படகுக்கு பல கோடி அபராதம் போடுகிறோமா? வலையை அறுக்கிறோமா? படகை உடைக்கிறோமா? மீன்களைப் பறிக்கிறோமா? இது எதையும் இந்தியா செய்யவில்லை. செய்வது அந்தப் பக்கம். ஆனால் இலங்கை ஜனாதிபதி சொல்கிறார், 'இறுதித் தீர்வை எட்ட வேண்டும்' என்று. இந்திய பிரதமர் அதற்கும் தலையாட்டி விட்டு வந்திருக்கிறார்.
தடை செய்யப்பட்ட மீன்பிடி இழுவை முறைகளை நிறுத்துங்கள் என்றும், அரியவகை மீன்களைப் பிடிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் இலங்கை கோரிக்கை வைத்திருக்கிறது. அதனையும் கேட்டுக் கொண்டு வந்துள்ளார் இந்தியப் பிரதமர்.
‘மனிதாபிமான முறைப்படி நடந்து கொள்வோம்' என்று இலங்கை சொன்னதாக இந்தியப் பிரதமர் சொல்லி இருக்கிறார். மனிதாபிமான அடிப்படை என்றால் இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்கள் அனைவரையும் விடுவிப்பது அல்லவா மனிதாபிமானம்? அதைச் செய்ததா இலங்கை?
கடந்த மார்ச் 25 ஆம் தேதியன்று நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், 97 இந்திய மீனவர்கள் இலங்கைச் சிறையில் இருக்கிறார்கள் என்றும், அதில் 83 பேர் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றும் சொல்லி இருக்கிறார். அவர் சொன்ன இரண்டு நாள் கழித்து 11 பேரை கைது செய்தது இலங்கை. அப்படியானால் மொத்தமாக இலங்கைச் சிறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 188 ஆகும். இதில் 11 பேரை மட்டும் பிரதமர் மோடி சென்ற அன்று விடுதலை செய்திருக்கிறார்கள். இன்னும் 97 பேர் இலங்கை சிறையில் தான் இருக்கிறார்கள். எங்கே போனது மனிதாபிமானம்? எப்போது இவர்கள் விடுதலை ஆவார்கள் என்றாவது அறிவிக்கப்பட்டதா? இல்லை.
கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் 560 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது இந்தியாவுக்கு அவமானம் அல்லவா?
இலங்கையில் இருந்து ஹெலிகாப்டரில் ‘ராமர் பாலத்தை' பார்த்தபடி ராமேஸ்வரம் வந்த பிரதமர், ‘இந்த பத்தாண்டு காலத்தில் 3100 மீனவர்களை மீட்டுள்ளோம்' என்று பேசி இருக்கிறார். 3180 மீனவர்களை கைது செய்யும் துணிச்சல் இலங்கைக்கு யாரால் வந்தது?
'பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் ஒரு மீனவர் கூட கைது செய்யப்பட மாட்டார்” என்று 2014 ஆம் ஆண்டு பிரதமர் ஆவதற்கு முன்னால் சொன்னது யார்? இதே மோடி தான். 3100 மீனவர்கள் கைதானது யாருடைய ஆட்சி காலத்தில் அதே மோடி ஆட்சி காலத்தில் தான்.
இலங்கை பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட்டிருக்கிறார்கள். இலங்கைக்கு அச்சுறுத்தலாகத்தான் இந்திய மீனவர்கள் சொல்லப்படுகிறார்கள் என்பது மோடி அவர்கள் அறிவாரா?
இனியாவது எந்தவொரு மீனவரும் கைது செய்யப்பட மாட்டார் என்று உறுதிமொழி வாங்கி வந்துள்ளீர்களா ‘ஸ்ரீலங்கா மித்திர விபூஷணா’?!
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!