murasoli thalayangam

மொழிக் கொள்கையில் சமரசமில்லாத முதலமைச்சர்! - கொள்கை பிடிப்பு குறித்து முரசொலி நாளிதழ் விளக்கம்!

மும்மொழித் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் விவாதம் வந்த போது, “தமிழும் ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை. இது மொழிக் கொள்கை மட்டுமல்ல, நமது வழிக் கொள்கையும் விழிக் கொள்கையும் இதுதான். எந்தப் பழிச் சொல் சொன்னாலும் இந்த உயிர்க் கொள்கையில் விட்டுத் தர மாட்டோம். விட்டு விலக மாட்டோம்” என்று உறுதிபடச் சொல்லி இருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.

“இந்தியை ஏற்காவிட்டால் பணம் தர மாட்டோம் என்று மிரட்டினாலும், பணமே வேண்டாம் - தமிழ் மொழி காப்போம்” என்ற உறுதியை அளித்த முதலமைச்சர் அவர்கள், “இது பணப்பிரச்சினை அல்ல, நம் இனப்பிரச்சினை. நம் தமிழை, தமிழினத்தை, தமிழ்நாட்டு மாணவக் கண்மணிகளை, இளைய சமுதாயத்தைக் காக்கும் பிரச்சினை ஆகும். இவர்கள் நிதி தரவில்லை என்பதற்காக இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெறும் கொத்தடிமை ஆட்சியல்ல இது. தடைக்கற்கள் உண்டு என்றால் அதை உடைத்து எரியும் தடந்தோள்கள் உண்டென்று சொல்லும் திராவிட மாடல் ஆட்சி இது” என்றும் உணர்ச்சி பொங்கக் குறிப்பிட்டுள்ளார்கள்.

தமிழும் ஆங்கிலமும் என்ற இருமொழித் திட்டத்தால்தான் நம்முடைய தமிழ்நாடு இந்தளவுக்கு வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதில் மும்மொழித் திட்டம் என்ற பெயரால் சதி செய்யப் பார்க்கிறது பா.ஜ.க. தலைமை. இந்தியை நுழைப்பதற்கான சதித் திட்டம் தான்,'மும்மொழித் திட்டம்' ஆகும். முதலில் மும்மொழி என்று சொல்வார்கள். பிறகு அதில் இருந்து ஆங்கிலத்தை அகற்றுவார்கள். பின்னர் அதில் இருந்து தமிழை அகற்றுவார்கள்.

இறுதியாக மிஞ்சி இருக்கப் போவது இந்தி மட்டும்தான். இறுதியாக அது இந்தி என்ற ஒரு மொழிக் கொள்கையாக மாறி விடும். 'இந்தியாவை ஹிந்தியா' ஆக்கும் சூழ்ச்சிதான் இது. இந்தி மொழி வழியாக தமிழ் மொழியை அழிக்கும் சதி இது. அதனால்தான் இது, 'இனப்பிரச்சினை' என்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.1938 பிப்ரவரியில் காஞ்சியில் நடந்த மாநாட்டில் பேசும்போதுதான், 'இதுமொழி திணிப்பு மட்டுமல்ல, கலாச்சார படையெடுப்பு.

வடநாட்டாரின் ஆதிக்கப்படையெடுப்பு' என்றார் பெரியார். 'இது அரசியல் போராட்டம் அல்ல, கலாச்சாரப் போராட்டம்' என்றுதான் பெரியார் வலியுறுத்திச் சொன்னார். 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழக்கம் எழுப்பினார். "ஓ தமிழனே, தமிழ் அன்னை உன் கடமையைச் செய்ய அழைக்கிறாள். ஆரியக் கொடுமையிலிருந்து தன்னை விடுவித்து விடும்படி ஓலமிட்டுக் கொண்டிருக்கிறாள். தாய் நன்றி கொன்றமகனும் தாய்ப்பணிக் கடமை கொன்ற மகனும் மனிதனாவானா?" என்று கேட்டார்.

தமிழ்த்தாயின் துகிலை இராஜாஜி உருவுவது மாதிரியும், ஒரு கையில் தொல்காப்பியத்தையும் இன்னொரு கையில் திருக்குறளையும் வைத்துள்ள பெண்ணை இராஜாஜி கத்தியால் குத்துவது மாதிரியும், இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்ட தமிழ்த்தாயை இந்தி பாம்பு கடிப்பதாகவும் கருத்துப்படங்கள் போட்டார்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் திணித்தால் அந்த மொழிக்கு அனைத்துத் தகுதியும் தானாகக் கிடைத்துவிடும், எனவேதான் இந்தியை ஒரு மொழிப்பாடமாகக் கூட திணிக்க அனுமதிக்கக் கூடாது என்றார் பேரறிஞர் அண்ணா. இந்தியா முழுவதும் ஒரே பொதுவான எழுத்தை, தேவநாகரி வடிவ எழுத்தை பயன்படுத்த வேண்டும் என்று அண்ணல் காந்தியடிகள் சொன்னதை குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் வலியுறுத்தினார். இதனைக் கடுமையாக எதிர்த்தார் பேரறிஞர் அண்ணா.

“ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழ் மொழிக்கு என தனி ஒரு எழுத்து வடிவமும், பெரிய நூல்களும் இருந்து வருகிறது. தமிழ் மொழியிலுள்ள திருக்குறளையோ, தொல்காப்பியத்தையோ தேவநாகரி எழுத்தில் எழுதிப் படிக்கச் சொன்னால் திருக்குறள் என்ற ஒரு நூல் தமிழ் மொழியில் கிடையாது என்று கூறக்கூடியஅளவுக்கு அதன் பொருட்செறிவும் அமைப்பும் அற்று இல்லாதொழியும்” என்றார் அண்ணா.

தமிழனுடைய பண்பாட்டை அழிக்க, அவனது கலாச்சாரத்தை அழிக்க, தமிழ் மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள புத்துணர்ச்சியை ஒழிக்கவே இந்தியைத் திணிக்கிறார்கள் என்றார் அண்ணா. இது வெறும் மொழிப்போராட்டமல்ல, தமிழனின் பண்பாட்டைக் காக்கும் போராட்டம் என்றார் அண்ணா. “தமிழர்களைச் சூத்திரர்கள் ஆக்கிய சமஸ்கிருதம் தாம் இந்தி ஆதிக்கமாக வருகிறது” என்றார் தமிழினத் தலைவர் கலைஞர்.

“இந்தி எதிர்ப்புப் போர் என்பது மொழிப்போர் மட்டுமல்ல; இது இன உரிமைப் போர். மொழி ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர். இதில் வெற்றி தோல்வி எந்தப் பக்கம் தாவினாலும் மானத்தைக் காப்பாற்ற ஒரு போர் நடந்தது என்பது மட்டும் சரித்திரத்தில் இடம் பெற்றால் போதும். வருங்காலச் சந்ததியினருக்கு அந்த வரிகள் வேல்களாகும். படை முழக்கமாகும்” என்று பேசினார் கலைஞர். இவை அனைத்தையும் வழிமொழியும் வகையில்தான், ‘இது இனப் பிரச்சினை’ என்று சொல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Also Read: ”இந்தியாவையே தாங்கி கொண்டிருக்கும் தமிழ்நாடு” : நாடாளுமன்றத்தில் மோடி அரசுக்கு பாடம் எடுத்த திமுக MP!