murasoli thalayangam

”கருணை வடிவிலான அரசு என்பதை உலகுக்கு அறிவிக்கும் நிதிநிலை அறிக்கை” : முரசொலி பாராட்டு!

முரசொலி தலையங்கம் - (18-03-2025)

பொருளாதார ஆய்வறிக்கையும் நிதிநிலை அறிக்கையும் - 2

தமிழ்நாடு அரசின் வலுவான அடித்தளத்தை உணர்த்துவதாக பொருளாதார ஆய்வறிக்கை அமைந்திருந்தது என்றால், தமிழ்நாடு அரசின் அன்பான அக்கறையை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை.

அதற்கு வரி குறைப்பு, இதற்கு வரி ஏற்றம் என்பதுதான் ஒரு காலத்தில் நிதிநிலை அறிக்கையாக இருக்கும். ஆனால் ‘திராவிட மாடல்' ஆட்சி அமைந்த பிறகு தாக்கல் செய்யப்படும் நிதி நிலை அறிக்கை அனைத்தும் வளர்ச்சிக் குறியீடுகளின் ஏற்றமாகவும், தளர்ச்சிக் குறியீடுகளின் இறக்கமாகவும் அமைந்திருப்பதுதான் சிறப்புக்குரியதாகும்.

‘எல்லார்க்கும் எல்லாம்' என்ற நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றுவதாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. ‘இதில் எதுவுமில்லை' என்று சிலர் சொல்வது எல்லாம் அவர்களது நெஞ்சு அடைப்பின் வெளிப்பாடே தவிர வேறல்ல. 'இதில் தமிழ்நாடே இல்லை' என்று ஒருவர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவர் பர்மா பட்ஜெட்டை பார்த்து எழுதிய அறிக்கையாக அது இருக்கலாம். சென்னையைத் தாண்டிய எந்த ஊரையும் தெரியாததன் விளைவாகவும் இருக்கலாம்.

மாதம் தோறும் மகளிர் பெறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக 13 ஆயிரத்து 887 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை உரிமைத் தொகை பெறாத மகளிருக்கும் தகுதி அடிப்படையில் வழங்கப்பட இருக்கிறது. புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் 4.06 லட்சம் மாணவிகள் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள். இதே போல் மாணவர்களும் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள். இதே போன்ற திட்டம் மூன்றாம் பாலினத்தவருக்கும் வழங்கப்பட இருக்கிறது. 18 ஆயிரம் புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட உள்ளது. தோழி விடுதிகள் புதிதாக 18 இடங்களில் தொடங்க இருக்கிறார்கள். வேலைக்கு போகும் பெண்களுக்கு உருவாக்கியதைப் போல மாணவியருக்கும் தோழி விடுதிகள் திறக்கப்பட இருக்கிறது.

5 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட இருக்கிறது. வேளாண்மை, சிறுகுறு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், கல்வி ஆகியவற்றுக்காக கல்வி ஆகிய துறைகளில் வங்கிகள் கடன் வழங்க 9.5 லட்சம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு அருகில் 2 ஆயிரம் ஏக்கரில் புதிய நகரம் அமைய இருக்கிறது. இது தலைநகர் சென்னையின் நெருக்கடியை நீக்கும். மாநிலப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் உருவாக இருக்கிறது. இராமேஸ்வரத்தில் புதிய விமானநிலையம் வரப்போகிறது.

தமிழ்நாட்டின் பத்து இடங்களில் புதிய கலைக் கல்லூரிகள் அமையப் போகின்றன. 190 கோடியில் அறிவியல் மையம் அமையப் போகிறது. 2676 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்க இருக்கிறார்கள். 6,198 கி.மீட்டருக்கான சாலைகள் மேம்படுத்தப்பட இருக்கிறது. 2,200 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் உருவாக்கப்பட இருக்கிறது. 3 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க இருக்கிறார்கள்.

வான்புகழ் வள்ளுவரின் திருக்குறளானது ஐக்கிய நாடுகள் அவையால் அங்கீகரிக்கப்பட்ட 193 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 500 தமிழ் இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட இருக்கின்றன. தொல்லியல் அகழ்வாராய்ச்சிப் பணிக்காக 7 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். பழந்தமிழரின் கடல்வழி வாணிக சிறப்புக்களை வெளிக்கொண்டு வரும் வகையில் தமிழகத்தின் கடற்கரைப் பகுதி களில் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட இருக்கிறது. நொய்யல் அருங்காட்சியகமும் நாவாய் அருங்காட்சியகமும் அமைக்கப்பட இருக்கின்றன. இவை அனைத்தும் தமிழாட்சி - தமிழன் ஆட்சி நடைபெறுகிறது என்பதற்காக நற்சாட்சி ஆகும்.

கொளத்தூரில் முதலமைச்சர் தொகுதியில் ‘முதல்வர் படைப்பகம்' உருவாக்கப்பட்டது. இது இளைஞர்கள், மாணவ மாணவியரிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. எனவே அனைத்து மாநகராட்சியிலும் முதல்வர் படைப்பகம் அமைக்கப்- பட இருக்கிறது. சேலம், கடலூர், நெல்லையில் நூலகங்கள் அமைக்கப்பட இருக்கின்றன. கல்லூரி மாணவர்களுக்குகைக்கணினி அல்லது மடிக்கணினி தரப்பட இருக்கிறது. சென்னை அண்ணாபல்கலைக் கழகம் 500 கோடியில் மேம்படுத்தப்பட இருக்கிறது.

அரசுப் பணிகளுக்கு 40 ஆயிரம் பேர் புதிதாக எடுக்கப்பட இருக்கிறார்கள். 2,562 ஆசிரியர்கள் விரைவில் நேரடியாக நியமனம் செய்யப்பட இருக்கிறார்கள். அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு நாட்களில் 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறலாம்.

இது போன்ற 200 விதமான அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இருக்கிறது. தொல்லியல் முதல் தொழில் துறை வரை அனைத்தும் இருக்கிறது. ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான திட்டமும் இதில் இருக்கிறது. ஒற்றை மனிதருக்கான திட்டமும் இதில் இருக்கிறது.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் தோறும் 2 ஆயிரம் ரூபாய் வழங்க இருப்பதும் - ஊர்க்காவல் படையில் திருநங்கையரை ஈடுபடுத்துவதும் - மூத்த குடிமக்களை பராமரிக்க அன்புச்சோலை மையங்களை உருவாக்கியதும் - அரசு பள்ளி மாணவர்க்கான காலை உணவுத் திட்டம் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவு செய்யப்பட்டிருப்பதும் - ஒரு லட்சம் மாணவர்க்கு கல்விக் கடன் வழங்குவதும் - இலங்கைத் தமிழர்க்கு கூடுதலாக 3000 வீடுகள் கட்டித் தருவதும் - கருப்பை வாய்ப்புற்று நோயைத் தடுக்க அதற்கான தடுப்பூசியை 14 வயதுடைய அனைத்து பெண் குழந்தை களுக்கும் வழங்க நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும் அனைத்துப் பெண்களுக்கும் அவர்களது வசிப்பிடத்துக்கே சென்று உடல் சோதனைகள் செய்யும் திட்டமும் - போன்றவைதான் இது யாருக்கான அரசு என்பதையும் எத்தகைய கருணை வடிவிலான அரசு என்பதையும் உலகுக்கு அறிவிக்கிறது.

கருணை மிகுந்தோர் கண்ணுக்கு இவை தெரியும். வன்மம் இல்லாதோர் மனதுக்கு இவை தெரியும். 'இதில் ஒன்றுமில்லை' என்போர் மண்டையில் ஒன்றுமில்லை போலும். அல்லது அறிவிப்புகளை அறிந்து கொள்ளும் அறிவுத் திறமில்லை என்று பொருள்.

Also Read: ”திராவிட மாடல் அரசின் நல்லாட்சியின் இலக்கணம்” : பொருளாதார அறிக்கைக்கு முரசொலி புகழாரம்!