murasoli thalayangam

“கச்சத்தீவை மீட்க பா.ஜ.க. அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” - ஆளுநர் ரவிக்கு முரசொலி கேள்வி!

இந்திய மீனவர்கள், இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவது குறித்து - இலங்கைக் கடற்படைக்கு கண்டனம் தெரிவிக்கத் தெரியாத ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு - பா.ஜ.க. அண்ணாமலையே பதில் சொல்லி விட்டார்.

இலங்கை அரசையோ - கடற்படையையோ கட்டுப்படுத்தவோ, விமர்சிக்கவோ தைரியம் இல்லாத ஆளுநர் ரவி, கச்சத்தீவு விவகாரத்தைச் சொல்லி ஒன்றிய பா.ஜ.க. அரசைக் காப்பாற்ற முயற்சித்திருக்கிறார்.

சமூக வலைதளத்தில் ஆளுநரால் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "ராமேஸ்வரத்துக்கு இன்று (02.03.2025) நான் சென்றிருந்தபோது, துன்பத்தில் உழலும் நமது மீனவச் சமுதாயத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளைச் சந்தித்தேன். அவர்களின் நிலை மீது நான் ஆழ்ந்த இரக்கம்கொள்கிறேன். நமது மீனவர்களின் வாழ்வாதார கவலைகளுக்கு காரணம் கடந்த 1974ஆம் ஆண்டு அநியாயமான ஒப்பந்தம்தான். கச்சத்தீவு சுற்றுவட்டார கடல் பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பறித்ததன் மூலம் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் அப்போது ஆட்சியில் இருந்த அரசுகள் பெரும் பாவத்தை இழைத்தன. அன்றிலிருந்து இன்றுவரை நமது மீனவச் சமூகம் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வருகிறது.

இலங்கை அரசால் அவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்த நீடித்த பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். இந்தப் பிரச்சினையை அரசியலாக்குவதற்குப் பதிலாகவும்,மத்திய அரசைக் குறை கூறுவதற்குப் பதிலாகவும், ஆக்கபூர்வமான அணுகுமுறையை மாநில அரசு மேற்கொண்டால் அது பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு பெரிதும் உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக, 1974இல் நடந்த தவறுக்கு சம பொறுப்பு, அன்றைய மத்திய ஆட்சி கூட்டணியில் இருந்த இன்று மாநிலத்தை ஆளும் கட்சிக்கும் உள்ளது" எனக் குறிப்பிட்டார்.

அதாவது இன்றைய பிரச்சினைக்கான காரணம் என்ன என்று சொல் வதற்கும், அதற்குத் தீர்வு காண்பதற்கும் முயற்சிக்காமல் காங்கிரஸ் கட்சியையும் - தி.மு.க.வையும் குறை சொல்வதிலேயே குறியாக இருக்கிறார் ஆளுநர்.

ஆனால் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், ஆளுநருக்கு பதில் சொல்லப்பட்டுள்ளது. "இலங்கையில் புதிய அதிபர் வந்த பிறகு கைதுகள் அதிகரித்துள்ளது. மீனவப் பிரச்சினையை சட்டம் ஒழுங்காகவோ, எல்லை பிரச்சினையாகவோ அணுகாமல் மனிதாபிமான பிரச்சினையாக அணுக வேண்டும், என்றே இந்திய அரசு இலங்கை அரசிடம் வலியுறுத்தி வருகிறது. மீனவர் பிரச்சினை தொடர்பாக நான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்திற்கு, அவர் எழுதிய பதில் கடிதத்தில் இந்தியா -- இலங்கை கூட்டு பணிக்குழு விரைவில் நடைபெறும், என அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்"என்று சொல்லி இருக்கிறார் அண்ணாமலை.

இலங்கை அரசுதான் மீனவர்களை கைது செய்கிறது, இந்திய - இலங்கை பேச்சை தொடங்க வேண்டும் என்று அண்ணாமலையே சொல்லி இருக்கிறார்.

இப்போதைய மீனவர் பிரச்சினை என்பது கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கச் சென்றார்கள், செல்கிறார்கள் என்பது அல்ல. இந்திய எல்லைக் கடலுக்குள் போனாலே அவர்களுக்கு இலங்கைக் கடற்படையால் தொல்லைகள் ஏற்படுகின்றன. அதுதான் உண்மை. மொத்தத்தில் இந்திய மீனவர்களை கடலுக்குள் வரவிடாமல் விரட்டுகிறார்கள். இதனை யார் தடுக்க வேண்டும்? ஒன்றிய அரசுதானே தடுக்க வேண்டும்? இலங்கை அரசோடு அவர்கள்தானே பேச்சுவார்த்தை நடத்தி மீன் பிடி உரிமையைப் பெற்றுத் தர வேண்டும்.

இந்தியா -- இலங்கை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாக வேண்டும். அதுதான் நிரந்தரத் தீர்வாக அமைய வேண்டும். தமிழ்நாட்டு ஆளுநராக இருக்கிற ரவிக்கு உண்மையான அக்கறை இருக்குமானால் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்து அந்தப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

'பா.ஜ.க. அரசு அமைந்தால் ஒரு மீனவன் கூட தாக்கப்பட மாட்டான்'என்று சொன்னவர் நரேந்திர மோடி. அவரது பத்தாண்டு கால ஆட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்வதும் விடுவிக்கப்படுவதும் தொடர் கதையாக இருக்கிறது.

'இலங்கை நாட்டால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பிரச்சினை. பாகிஸ்தான் நாட்டால் குஜராத் மீனவர்களுக்கு பிரச்சினை. இரு மாநில மீனவர்களும் இது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுத்து செயல்படுவார்கள்'என்று 2014 தேர்தலுக்கு முன்னதாக ராமநாதபுரத்தில் மோடி பேசினார். பத்தாண்டு காலத்தில் இப்படி ஒரு பேச்சுவார்த்தை நடந்ததா?

"2016 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை மீனவர் இடையே அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. ஒவ்வொரு மூன்று மாதத்துக்கு ஒருமுறை மீனவர்கள் சந்திப்பது என்றும், ஒவ்வொரு ஆறு மாதத்துக்கு ஒருமுறை இருநாட்டு அமைச்சர்கள் சந்தித்து பேசுவது என்றும் முடிவெடுக்கப் பட்டது. இருநாட்டு கடற்படை அதிகாரிகளும் இதில் இடம் பெறுவார்கள் என்று சொல்லப்பட்டது. இந்தக் குழுவின் முதல் கூட்டம் 2017 ஜனவரி 2 ஆம் நாள் கொழும்புவில் நடைபெற்றது.

மீனவர்கள் மீது எந்த வன்முறையும் செலுத்தக் கூடாது, உயிர் இழப்புகள் ஏற்படக் கூடாது என்று இக்கூட்டத்தில் மீனவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை இலங்கை அரசாங்கமும் ஏற்றுக் கொண்டது. ஆனாலும் இலங்கைக் கடற்படையால் அடக்குமுறை தொடர்ந்தே வருகிறது. ஏன் இந்த பேச்சுவார்த்தை தொடரவில்லை?" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இதற்கு ஆளுநர் பதில் என்ன?

கச்சத்தீவு பற்றி இவ்வளவு அக்கறையோடு பேசும் ஆளுநர் ரவி, 'பத்தாண்டு காலத்தில் கச்சத்தீவை மீட்க பா.ஜ.க. அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?' என்றல்லவா கேட்டிருக்க வேண்டும்?!