murasoli thalayangam
“இந்தி என்பது தேசிய மொழியும் அல்ல, இந்த தேசத்தின் மொழியும் அல்ல...” - ஒன்றிய அரசுக்கு முரசொலி பதிலடி!
முரசொலி தலையங்கம்
19.02.2025
இந்தி, இந்திய தேசத்தின் மொழியா?
"உங்களுக்கு நான் பணிவன்போடு தெரிவித்துக் கொள்வேன். இதுமொழிப் பிரச்சினை அல்ல இது ஆதிக்கப் பிரச்சினையே தவிர மொழி பிரச்சினைஅல்ல... நாம் எந்த அளவிற்குப் பணியத் தயாராக இருக்கிறோம் என்பதைக்கண்காணிப்பதற்காக அளவிடுவதற்காக, அரசியல் ஆதிக்கக்காரர்கள், அரசியல்சூழ்ச்சிக்காரர்கள், ஏகாதிபத்திய வெறி கொண்டவர்கள், தங்களுடையமொழியைத் திணித்து 'இதைத்தான் நீ ஆட்சி மொழியாகக் கொள்ளவேண்டும். இதிலே தான் பாடங்கள் நடக்கும். இதி லேதான் தேர்வுகள் நடக்கும். இதிலேதான் சட்டங்கள் இயற்றப்படும். இந்த மொழியில்தான் நாடாளுமன்றத்தில் பேசுவார்கள். இது தெரிந்தால் இங்கெல்லாம் வா இது தெரியாவிட்டால் நீலகிரித் தோதுவர்களைப் போல், குருவிக்காரர்களைப் போல், ஆப்பிரிக்க நாட்டு நீக்ரோக்களைப் போல், நீயும் உன்னுடைய நாட்டோடு, கூட்டோடு, இரண்டாந்தரக் குடிமகனாய், மட்டரகமான மனிதனாய், ஏனோ தானோவாய், எடுப்பார் கைப்பிள்ளையாய் அடங்கிக் கிட' என்பதுதான் இதன் உட்பொரு ளாகும்" என்று - பேரறிஞர் அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். அதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
'நாம் எந்த அளவுக்கு அடிபணியத் தயாராக இருக்கிறோம்' என்பதை அளவிடுவதற்காகத்தான் இந்தியைத் திணித்துத் திணித்துச் சோதனை செய்து வருகிறார்கள். இந்தித் திணிப்பை எதிர்த்து எதிர்த்து நாமும் நம் மொழிக் காப்புப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
இந்தியைத் திணிக்கும் போதெல்லாம் அதனை நாம் எதிர்க்கும் போதெல்லாம் இந்திக்கு ஆதரவாக வைக்கப்படும் வாதம் என்பது - ‘இந்திதான் இந்திய நாட்டின் மொழி, இந்த தேசத்தின் மொழி, தேசிய மொழி' - என்று சொல்லப்படுகிறது. அப்படி எங்கு எதில் இருக்கிறது என்பதுதான் நம்முடைய கேள்வி ஆகும்.
இந்திய நாட்டுக்கு அலுவல் மொழி உண்டே தவிர, தேசிய மொழி என்பதுகிடையாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 343 ஆவது பிரிவின் படி இந்திய அளவில் இந்தி என்பது அலுவல் மொழியாகும். (official languages of the indian union). அது மட்டுமே தனித்த, ஒரே ஒரு அலுவல் மொழி அல்ல. இந்தியுடன், ஆங்கிலமும் கூடுதல் அலுவல் மொழியாகும்.
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் அந்த மாநிலத்துக்கான அலுவல் மொழியைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றுள்ளன. இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் இல்லாத மொழிகளைக் கூட மாநிலங்கள் தங்கள் அலுவல் மொழியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்ற அனுமதியையும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கி இருக்கிறது.
இந்தியை மட்டுமே அலுவல் மொழியாக ஆக்குவதற்கு எதிர்ப்பு இருந்ததால்தான் ஆங்கிலமும் அலுவல் மொழியாக ஆக்கப்பட்டது. இந்தியை தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், திராவிட இயக்கமும், தமிழறிஞர்களும் மட்டுமே எதிர்க்கவில்லை. இந்தி ஆட்சி மொழியாக ஆகி விடாமல் தடுக்கவும், ஆங்கிலமும் அலுவல் மொழியாகவும் டி.டி.கிருஷ்ணமாச்சாரியாரும், என்.கோபாலசாமி ஐயங்காரும், என்.ஜி.ரங்காவும், எஸ்.வி.கிருஷ்ணமூர்த்தி ராவும் முயற்சித்தார்கள்.
"இந்தியாவிலுள்ள ஒரு மொழியே இந்தியாவுக்குத் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்று அரசியல் நிர்ணய அவை உறுப்பினர்கள் விரும்பினார்கள். இந்திதான் அதற்குத் தகுதி உடையது என்று அதனை தேசிய மொழி என்றார்கள். ஆனால் நடைமுறையில் இந்தி, தேசிய மொழியாக முடிய வில்லை. தேசிய அளவில் பயன்படுத்தப்படும் மொழி ஆங்கிலம் மட்டும்தான். மற்ற தேசிய இனங்கள் இந்தியைத் திணிப்பதாக அச்சப்படுகின்றன. அவைகள் தங்கள் மொழி மீது பெருமிதம் கொண்டுள்ளன. எனவே, தேசிய குறிக்கோள் என்ன என்பதையும், அது நிறைவேற்றும் வரை மொழிப் பிரச்சினையில் எந்தளவிற்குச் சுமுகமான முறையில் செயல்பட வேண்டும் என்றும் அரசியல் சட்டம் தெளிவுபடுத்துகிறது.. என்று சொன்னார் காரன் வில்லி ஆஸ்டின்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 17 ஆவது பாகம் ஆட்சி மொழிகள் பற்றிச் சொல்கிறது. 343 ஆம் பிரிவில் இருந்து 351 ஆவது பிரிவு வரை இது தொடர்பான விதிகள் இருக்கின்றன. இந்திய துணைக் கண்டத்தில் பேச்சு வழக்கில் உள்ள மொழிகளின் மொத்த எண்ணிக்கை 1652. அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் 22 மொழிகள் மட்டுமேஉள்ளன. இவை இந்தியக் குடியரசின் அட்டவணைப்படுத்தப்பட்ட மொழிகள்ஆகும். தமிழ் உள்ளிட்ட இந்த 22 மொழிகளில் இந்தியும் ஒன்று அவ்வளவுதான்.
இந்தியோடு அலுவல் மொழியாக ஆங்கிலமும் 1965 ஆம் ஆண்டு வரைநீடிக்கலாம் என்பதுதான் சட்டம் ஆகும். ஆனால் மொழிப்போர் காரணமாக 1965 ஆம் ஆண்டுக்குப் பிறகும் ஆங்கிலமே தொடர்கிறது. 1965 ஆம்ஆண்டும் இந்திக்கு முழு அலுவல் மொழி மகுடம் சூட்டப்படவில்லை. இந்தியநாடாளுமன்றத்தில் 1963 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஆட்சி மொழிகள்சட்டத்தின்படி ஆங்கிலமும் அலுவல் மொழியாகவே தொடர்கிறது.
ஆங்கிலத்தை நீக்கும் முயற்சியை அப்போது தமிழ்நாடு மட்டுமல்ல, ஆந்திராவும், கர்நாடகமும், கேரளமும், மேற்கு வங்கமும் எதிர்த்தது. இந்தியை மட்டுமே அலுவல் மொழியாக ஏற்காத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் நீடிக்கும் என்று 1967 ஆம் ஆண்டு சட்டமே கொண்டு வந்திருக்கிறார்கள். இதனை 1976 ஆம் ஆண்டைய திருத்தமும் ஏற்றுக் கொண்டுள்ளது.
எனவே இந்தி என்பது தேசிய மொழி அல்ல, இந்த தேசத்தின் மொழியும் அல்ல. ஆட்சி மொழியும் அல்ல. அது அலுவல் மொழி மட்டும்தான். அலுவல் மொழியையும் பொறுத்தவரையில் இந்தி மட்டுமல்ல, ஆங்கிலமும் அலுவல் மொழிதான். இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் பல்வேறு மொழிகளை தங்களது அலுவல் மொழிகளாக தேர்ந்தெடுத்துள்ளன. எனவே இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான அலுவல் மொழியாகவும் அதனைச் சொல்ல முடியாது. இதனைப் புரிந்து கொண்டு இந்தியைப் பற்றிப் பேச வேண்டும். பன்முக இந்தியாவை மனதில் வைத்துப் பேச வேண்டும்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!