murasoli thalayangam
நிதிக்குழுவால் என்ன பயன்? : ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முரசொலி கேள்வி!
“ஒன்றிய அரசு பகிர்ந்தளிக்கும் வரியில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை 16 ஆவது நிதிக்குழுவிடம் மாநிலங்கள் பதிவு செய்யலாம்” என்று அருள் பாலித்திருக்கிறார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
“மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் வரி வருவாய் கணக்கீடுகளை ஒன்றிய அரசு முடிவு செய்வதில்லை. இவை நிதிக்குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையிலே முடிவு செய்யப்படுகின்றன” என்றும் நிர்மலா சீதாராமன் சொல்லி இருக்கிறார். இது எல்லாம் நம்பும் படியாக இருக்கிறதா?
“வரிப் பகிர்வு சதவீதத்தை மாற்றியமைக்கக் கோரும் தென் மாநிலங்கள் நிதிக்குழுவிடமே தங்கள் கோரிக்கைகளை முன் வைக்க வேண்டும்” என்று சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர். எல்லாவற்றையும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றால் இவருக்கு என்னதான் வேலை?
மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு பகிர்ந்தளிக்கும் வரி வருவாயை 32 விழுக்காட்டில் இருந்து 42 விழுக்காடு ஆக்க 14ஆவது நிதிக்குழு பரிந்துரை செய்தது. இதனை 41 விழுக்காடாக 15 ஆவது நிதிக்குழு பரிந்துரைத்தது. இதனை 50 விழுக்- காடு ஆக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 16 ஆவது நிதிக்குழுவிடம் கோரிக்கை வைத்து இருந்தார்.
“கடந்த 15-வது நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கக் கூடிய வரி வருவாய்ப் பங்கினை 41 விழுக்காடாக உயர்த்தினார்கள். ஆனால் இந்தப் பரிந்துரைக்கு மாறாக கடந்த 4 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் 33.16 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் இணைந்து செயல்படுத்திடும் திட்டங்களுக்கான மாநில அரசின் பங்குத்தொகை தொடர்ந்து உயர்ந்து வருவதும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் நிதி நிலையை மேலும் பாதிக்கின்றது. ஒருபுறம் ஒன்றிய அரசிடமிருந்து வரவேண்டிய வரிப் பகிர்வு குறைவதால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள். மறுபுறம் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிக நிதி என இரண்டுமே மாநில அரசுகளுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்துகின்றன. எனவே, ஒன்றிய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிர்வின் பங்கு 50 விழுக்காடு உயர்த்தப்படுவதுதான் முறையானதாக இருக்கும்” என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள். ஆனால் அதனை 16 ஆவது நிதிக்குழு ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.
நிதிக்குழுவிடம் போய் உங்கள் குறைகளைச் சொல்லுங்கள் என்று சொல்லும் நிதி அமைச்சர், நிதிக்குழு சொன்ன 41 விழுக்காட்டை ஒழுங்காகக் கொடுத்தாரா? என்றால் இல்லை. மாநிலங்களுக்கு 33.16 விழுக்காடு நிதிதான் பகிர்ந்தளிக்- கப்பட்டுள்ளது. நிதிக்குழு உத்தரவிட்ட 41 விழுக்காட்டை வழங்காதது யார் குற்றம்? அதையும் நிதிக்குழுவிடம் போய் தான் கேட்க வேண்டுமா?
“மாநில அரசின் பட்டியலில் இடம் பெற்றுள்ள இனங்களின் கீழ் நிறைவேற்றப்படும் நலத்திட்டங்களுக்கு 75 சதவீத பங்களிப்பை ஒன்றிய அரசு வழங்க வேண்டும். மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியினை 2026-27 ஆம் ஆண்டு காலகட்டத்- தில் 50 சதவீதமாக உயர்த்தி, 98:10 என்ற அளவில் ஒன்றிய - மாநில நிதிப் பங்கீட்டில் வழங்க வேண்டும். பரிந்துரை காலத்தில் செயல்படுத்துவதற்கான நிதி அளவுகளில் ஆண்டுக்கு 5 சதவீதம் என்ற அளவிலிருந்து 10 சதவீதம் என்ற அள- வில் உயர்த்தப்பட வேண்டும்.” - என்றெல்லாம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கோரிக்கை வைத்திருந்தார்கள். அதற்கு 16 ஆவது நிதிக் குழுவின் நிலைப்பாடுகள் என்ன?
“சமச்சீரான வளர்ச்சியையும், திறமையான நிர்வாகத்தையும் இந்த வரிப் பகிர்வு முறையில் சமக்குறிகோள்களாகக் கருதி இந்த நிதிக் குழு தனது பரிந்துரைகளை வழங்கும் என்று நம்புகிறோம். நாட்டின் சமச்சீரான வளர்ச்சியை எதிர்- நோக்கும் வகையில் வளர்ச்சி குன்றிய பகுதிகளுக்குத் தேவையான நிதியை வழங்குவது அவசியம் என்றாலும் அதே வேளையில், பல்வேறு வகையிலும் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்குத் தேவையான நிதி ஆதாரங்களை அளிப்ப- தன் மூலமாகவே அவற்றின் வளர்ச்சியைத் தக்கவைப்பதுடன் அந்த மாநிலங்களின் வளர்ச்சிப்பாதைக்கும் வழிவகுக்க முடியும், என்பதையும் நிதிக்குழு கவனத்தில் கொள்ள வேண்டும். சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கான நிதி- யைக் குறைத்து வளர்ச்சியை எதிர்நோக்கும் பகுதிகளுக்கு நிதி ஆதாரங்களை மடைமாற்றுவதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுவது மட்டுமின்றி, வளர்ச்சி குன்றிய மாநிலங்களுக்கு இறுதியாகக் கிடைக்கும் வரிப்ப- கிர்வும் குறைந்துவிடும் என்பதே உண்மை” என்று நிதிக்குழுவிடம் மாண்புமிகு முதலமைச்சர் சொன்னது அவர்களது இதயத்தை திறப்பதாக அமைந்திருந்தது.
தமிழ்நாடு முதலமைச்சரின் வாதங்களைக் கேட்ட 16ஆவது நிதிக்குழுவின் தலைவர் அரவிந்த் பனகாரியா, "தமிழ்நாடு அரசின் சார்பில் Masterclass Presentation செய்யப்பட்டிருக்கிறது” என்று பாராட்டினார். "இதுவரை 12 மாநிலங்க-ளுக்குச் சென்றுள்ளோம். ஆனால் தமிழ்நாடு அரசு எங்களுக்கு அளித்த விளக்கம்தான் இதுவரை அளிக்கப்பட்ட விளக்கங்களில் மிகச் சிறந்தது” என்று அரவிந்த் பனகாரியா சொன்னார். நிருபர்கள் கூட்டத்தில் பாராட்டினார். ஆனால் அவரது அறிக்கையில் இதனைச் சேர்ப்பாரா எனத் தெரியவில்லை.
குடியரசுத் தலைவரால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிதிக்குழு அமைக்கப்படுகிறது. மொத்த வரி வருவாயை ஒன்றிய அரசும் மாநில அரசும் பகிர்ந்து கொள்வது தொடர்பாகவும், மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒதுக்க வேண்டிய நிதி தொடர்பான பணிகளை நிதிக்குழு கவனித்து வருகிறது. இந்தக் குழு நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று மாநிலங்களின் கருத்தைப் பெற்று அதனை அறிக்கையாக வழங்க வேண்டும். ஆனால் அதனை ஒன்றிய அரசு மதிப்பது இல்லை என்பது தான் கடந்த கால அனுபவம். அப்படியானால் நிதிக்குழுவால் என்ன பயன்?
Also Read
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!