முரசொலி தலையங்கம்

”மறைக்கப்படும் கும்பமேளா மரணங்கள் - உ.பி. அரசை காப்பாற்றும் ஒன்றிய அரசு” : முரசொலி காட்டம்!

மரணங்களைக் கூட மறைத்து தவறான கணக்கையும் காட்டி, உ.பி. அரசைக் ஒன்றிய பா.ஜ.க அரசு காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.

”மறைக்கப்படும் கும்பமேளா மரணங்கள் - உ.பி. அரசை காப்பாற்றும் ஒன்றிய அரசு” : முரசொலி காட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (05-02-2025)

மறைக்கப்படும் கும்பமேளா மரணங்கள்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற கும்பமேளாவில் 48 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அந்த மரணங்களைக் கூட மறைத்து தவறான கணக்கையும் காட்டி, உ.பி. அரசைக் ஒன்றிய பா.ஜ.க அரசு காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.

இவர்களுக்கு உண்மையான பக்தி இருக்குமானால் பக்தர்களுக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை. பக்தியை கோவிலுக்கு வெளியே அரசியலில் மட்டும் காட்டக் கூடியது தான் பா.ஜ.க. கட்சியும், அதனைச் சேர்ந்தவர்களும். அதனால்தான் அலட்சியமாக கும்பமேளாவை நடத்தி, அப்பாவி மக்களையும் பலி வாங்கி இருக்கிறார்கள்.

உலகில் அதிகமானவர்கள் கூடும் விழாக்களில் ஒன்றாக கும்பமேளா இருக்கிறது. இந்தியா முழுவதும் இருந்து கோடிக்கணக்கானவர்கள் கூடும் விழாவாக இது அமைந்து வருகிறது. உ.பி.மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் கடந்த 29 ஆம் தேதியன்று மட்டும் 9 கோடி பேர் வந்ததாக செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கங்கை கரையில் உ.பி.அரசாங்கம் வைத்திருந்த தடுப்புகள் எல்லாம் ஒரு சில நிமிடங்களில் பறந்துவிட்டது.

ஜனவரி 29 ஆம் தேதி அதிகாலை 1 மணி முதல் 2 மணி வரையில் அகாரா மார்க் பகுதியில் பெருங்கூட்டம் அலை மோதியது. தடுப்புகளையும் தாண்டிக் குதித்து பலரும் உள்ளே நுழைந்திருக்கிறார்கள். கட்டுக்குள் அடங்காத நெரிசலில் மக்கள் சிக்கினார்கள். ஒருவர் இறந்தார், இருவர் காயம் என்பது மாதிரி தான் முதலில் செய்திகள் வெளியானது. அதன்பிறகு இறந்தவர் எண்ணிக்கை முப்பது ஆனது. செய்தி நிறுவனங்களுக்கு இதனை வெளியிடக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதனால் செய்தியை வெளியே விடாமல் வைத்திருந்தார்கள். ஒருவர் மரணத்துக்கே பிரேக்கிங் ஓலமிடும் மீடியாக்கள் 30 பேர் மரணத்துக்குப் பிறகும் மவுன மாகவே இருந்தன.

உத்தரப்பிரதேச மாநில அரசாங்கம் அறிவித்தது 30தான். ஆனால் உண்மையில் இறந்து போனவர்கள் 48 பேர் என்று 'டைம்ஸ் ஆப் இந்தியா' ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது.

மருத்துவமனையில் இருந்து வெளியில் கொண்டு வரப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட உடல்களை எண்ணி, அந்த அடிப்படையில் 48 பேர் என்று அறிவித்துள்ளது 'டைம்ஸ்'

* உத்தரப்பிரதேசம் – 14

* பீகார் – 7

* மத்தியப்பிரதேசம் – 5

* கர்நாடகா – 5

* மேற்கு வங்கம் – 4

* ராஜஸ்தான் - 3

* ஜார்கண்ட் – 2

* அசாம் - 1

* உத்தரகாண்ட் - 1

* அரியானா - 1

* குஜராத் - 1

* அடையாளம் காணப்படாதவர்கள் - 4

என்ற பட்டியலை பெயர், வயதுடன் வெளியிட்டுள்ளது. ஆனால் உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் யோகி அரசாங்கம் சொல்வது 30 தான். இந்த 30 பேரும் கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி இறக்கவில்லை, அவர்களுக்கு பல்வேறு நோய்கள் இருந்தது, அதனால் இறந்ததாக உ.பி.மாநில அதிகாரி விஜய் கிரண் ஆனந்த் சொல்லி இருக்கிறார்.

”மறைக்கப்படும் கும்பமேளா மரணங்கள் - உ.பி. அரசை காப்பாற்றும் ஒன்றிய அரசு” : முரசொலி காட்டம்!

"போக்குவரத்து தடைகள் ஏற்படுத்துவதற்கு முன்பே கும்பமேளாவில் குழப்பமான ஏற்பாடுகள் தான் பார்க்க முடிந்தது. பலமணி நேரம் நடக்க பக்தர்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். ஜனவரி 27 ஆம் தேதி நிலைமை மிகவும் மோசமடைந்தது. வி.ஐ.பி. வருகையைக் காரணம் காட்டி பல்வேறு தடுப்புகள் அதிகரிக்கப்பட்டது. ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக மேளா

பூட்டப்பட்டது. உள் வழிகள் தடை செய்யப்பட்டு இருந்தன. இதனாலும் பக்தர்கள் பல மைல் தூரம் நடக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள். ராஞ்சியைச் சேர்ந்த 15 பேர், அலகாபாத் சந்திப்பில் இருந்து மேளா மைதானத்துக்கு 15 கிலோ மீட்டர் தூரம் தலையில் பொருட்களைச் சுமந்து கொண்டு நடந்து போனார்கள். பெண்களும், குழந்தைகளும் சிரமப்பட்டு நடந்து போனார்கள்.

மேளா நடக்கும் இடத்தில் வருவதும் போவதுமான பாதைகள் குழப்பம் ஏற்படுத்துவதாக இருந்தன. இதனால் ஆங்காங்கே தடியடி நடத்திக் கொண்டிருந்தது காவல் துறை. அனுமதிச் சீட்டு வைத்திருந்தவர்களையும் உள்ளே விடவில்லை. திடீரென அங்குள்ள சிறுவியாபாரிகளின் கடைகளை எடுக்கச் சொன்னார்கள். அதனாலும் குழப்பம் வந்தது. திடீரென்று வி.ஐ.பி. பாதையை மாற்றினார்கள். இதனால் பக்தர்களின் பாதைகளில் குழப்பம் ஏற்பட்டது. கூட்டமும் அதிகம் ஆனது. முறையான முன்கூட்டியே திட்டமிடுதல் இல்லாததுதான் இதற்குக் காரணம்" என்று 'தி வயர்' பத்திரிக்கையின் நிருபர் தான் நேரடியாக பார்த்த காட்சிகளை எழுதி இருக்கிறார்.

உலகத்தையே கும்பமேளாவை பார்க்க வாருங்கள் என்று அழைத்தார்கள், ஆனால் கள நிலவரம் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது என்று அவர் எழுதுகிறார். உ.பி.அரசாங்கம் பல்வேறு விஷயங்களில் இருந்து ஒதுங்கிக் கொண்டு தனியார் நிறுவனத்தின் வசம் பல ஏற்பாடுகளை ஒப்படைத்துள்ளது. இதனையும் ஒரு காரணமாக அந்த நிருபர் சொல்லி இருக்கிறார். சிறுசிறு வியாபாரிகளை கடை நடத்த முடியாமல் விரட்டியதற்கு அந்த நிறுவனத்தின் செயல்பாடே காரணம் என்கிறார்.

'நாங்கள் அனைத்தையும் மிகச் சரியாகச் செய்திருக்கிறோம்' என்று பத்து நாட்களுக்கு முன்னால் பேட்டி கொடுத்தார் உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். ஆனால் எதுவும் செய்யவில்லை என்பதை கும்பமேளா காட்சிகள் காட்டிக் கொடுத்து விட்டது. 17 மணி நேரத்துக்குப் பிறகு தான் உயிரிழந்தவர் எண்ணிக்கை 30 என்பதை உறுதி செய்தது யோகி அரசு.

இதைப் பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கக் கூட எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பா.ஜ.க. செய்தால், யோகிகள் ஆண்டால் எதையும் கேள்வி கேட்கக் கூடாது என்பதுதான் சங்கிகள் சட்டம்.

banner

Related Stories

Related Stories