murasoli thalayangam

புகழுக்குரியவரைப் போற்றும் புகழுக்குரியவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! : முரசொலி புகழாரம்!

“தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் இட்ட பணியை சட்டசபையில் தட்டாது செய்து முடிப்பதே எனது ஒரே வேலை” என்ற வாழ்ந்து மறைந்தவர் கொள்கைக் குன்றம் ஏ.கோவிந்தசாமி அவர்கள். “மாற்றார்கூட குறை சொல்ல முடியாத அளவுக்கு மிக நேர்மையோடு, ஒழுக்கத்தோடு, நாணயத்தோடு நடந்து கொண்டவர்” என்று தந்தை பெரியார் அவர்களால் பாராட்டப்பட்டவர் அவர்.

“எல்லாராலுமே ஒருமுகமாக ‘நல்லவர்’ என்று பாராட்டப்பட்ட ஓர் அபூர்வமான மனிதர் ஏ.கோவிந்தசாமி. ‘நல்லவர்’ என்று பெயர் எடுப்பது கடினம். அதிலும் அதிகாரப் பீடத்துக்கு வந்த பின்னும் ஒரு அரசியல்வாதி நல்லவர் என்ற பட்டத்தை இழக்காதிருந்தால் அது குறிப்பிடத்தக்கது ஆகும். ‘அதிகார சக்தி சித்தத்தைக் கெடுக்கும்’ என்ற பழமொழியைப் பொய்ப்பித்தவர் ஏ.கோவிந்தசாமி” என்று அவரைப் பாராட்டியவர் மூதறிஞர் இராஜாஜி அவர்கள்.

“ஏ.கோவிந்தசாமி அவர்கள் எல்லோருடனும் சுமூகமாகப் பழகும் பண்புள்ளவர். எடுத்துக் கொண்ட காரியத்தை முயற்சியுடனும் எவ்வளவு சிரமம் இருந்தாலும் செயல்படுத்திக் காட்டக் கூடியவர் அவர்” என்று போற்றினார் பெருந்தலைவர் காமராசர் அவர்கள். அத்தகைய பெருந்தகையாளரான ஏ.கோவிந்தசாமி அவர்களை பேரறிஞர் அண்ணா அவர்களும், தமிழினத் தலைவர் கலைஞரும் தங்கள் அமைச்சரவையில் வைத்து அழகு பார்த்தார்கள்.

“திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதும் ஓர் உழவர் பெருங்குடி மகனை வேளாண்மைத் துறை அமைச்சராக அமர்த்தினோம்” என்றார் முதலமைச்சர் அண்ணா அவர்கள். “எளிய குடும்பத்தில் பிறந்து, தொண்டுள்ளத்தோடு நாட்டுப் பணியாற்றி உழைப்பால் உயர்ந்தார். இந்த மாநிலம் வாழ - மக்கள் வாழ - கழகம் வாழ - கட்சியின் கட்டுப்பாடு தழைக்க தமது கடைசி மூச்சு வரை வாழ்ந்தவர். அவருக்கு நாம் செய்யும் மரியாதை அவர் விட்டுச் சென்ற பணியை ஒழுங்குற நிறைவேற்றுவதுதான்” என்றார் முதலமைச்சர் கலைஞர் அவர்கள். இப்படி தமிழ்நாட்டின் தனிப்பெரும் தலைவர்கள் அனைவராலும் போற்றப்பட்டவர் ஏ.கோவிந்தசாமி.

அவரது மிக முக்கியமான சாதனை என்பது இம்மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது ஆகும். அத்தகைய ‘தமிழ்நாடு’ பெயர் மீட்பருக்கு விழுப்புரத்தில் மாபெரும் சின்னம் அமைத்து தமிழ்நாட்டு மக்களின் நன்றியை வெளிப்படுத்தி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

அதன் அருகிலேயே மற்றுமொரு சின்னமும் எழுந்துள்ளது. 21 சமூக நீதிப் போராளிகளுக்கு நினைவு மண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட வன்னிய சமுதாய மக்கள் தங்கள் சமூகநீதி உரிமையைக் கேட்டு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் போராடியபோது சுட்டுக் கொல்லப்பட்டார்கள். 1987 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் இது நடந்தது.

1989 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தலைவர் கலைஞர் அவர்கள், “தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று தனி ஒதுக்கீடு வழங்க வகை செய்வோம்” என்று வாக்குறுதி கொடுத்தார். ஆட்சிக்கு வந்த 43 ஆவது நாளில் 20 விழுக்காடு ஒதுக்கீட்டை வன்னியர் சமூகம் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு வழங்கினார் முதலமைச்சர் கலைஞர் அவர்கள். இதற்காக உயிர்நீத்த குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கினார் கலைஞர். அவர்தம் குடும்பத்துக்கு மாதம் தோறும் உதவித்தொகை வழங்கவும் உத்தரவிட்டார் கலைஞர்.

கல்வி – வேலை வாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்து மக்கள் கடந்த 36 ஆண்டுகளாக படித்து, வேலைக்குப் போய் முன்னேற, முத்தமிழறிஞர் கலைஞர் இட்ட அந்தக் கையெழுத்துதான் காரணம்.

கோனேரிக்குப்பத்தில் நடந்த வன்னியர் சங்க வெள்ளிவிழா மாநாட்டில் தலைவர் கலைஞரை மேடையில் வைத்துக் கொண்டு டாக்டர் ராமதாஸ் சொன்னார்:

“1987 ஆம் ஆண்டு முதல் இட ஒதுக்கீட்டுக்காக நாங்கள் போராடினோம், போராடினோம், 21 உயிர்களைப் பலி கொடுத்ததைத் தவிர ஒன்றும் நடக்கவில்லை. அன்றிருந்த அ.தி.மு.க. முதல்வரைப் பார்க்க 7 ஆண்டு காலம் மனுப்போட்டேன் பார்க்க முடியவில்லை. ஆனால் கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்தார். வந்தவுடன் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். என்னைக் கூப்பிட்டு இடஒதுக்கீடு தந்த கலைஞர் அவர்களே உங்களுக்கு என் நன்றி!

இந்த சமுதாயம் என்றென்றும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் மட்டும் 20 சதவீதம் இட ஒதுக்கீடு தரவில்லை என்றால், இங்கே மத்திய அமைச்சர் சொன்னதைப் போல, கூலி வேலை செய்து கொண்டு வோட்டு மட்டும் போடுகின்ற ஒரு சமுதாயமாக இந்த ஒடுக்கப்பட்ட சமுதாயம் இருந்திருக்கும். அதை மாற்றிய பெருமை, அதற்கு வழி வகுத்த பெருமை, கலைஞர் அவர்களையே சாரும்.” என்றார். அத்தகைய சாதனையைச் செய்த இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

இச்சாதனைகளின் தொடர்ச்சியாக இருக்கிறார் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ஆறாவது முறையாகக் கழக அரசு அமைந்ததும், 1987 சமூகநீதிப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியான 21 சமூகநீதிப் போராளிகளுக்கு 4 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவித்தார்.

சொன்னபடி இதோ மணிமண்டபம் கட்டித் திறக்கப்பட்டுள்ளது. தலைநகரை நோக்கி வரும் சாலையில் விழுப்புரத்தில் இரண்டு சின்னங்கள் கம்பீரமாக எழுந்துள்ளன. இரண்டுமே தியாகத்தின் சின்னங்கள் ஆகும். நன்றி அறிவித்தலின் சின்னங்கள் ஆகும். இவை இரண்டையும் கட்டி எழுப்பியதன் மூலமாக புகழுக்குரியவரைப் போற்றும் புகழுக்குரியவராக உயர்ந்து நிற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

Also Read: ”மக்கள் மத்தியில் சிதைந்து வரும் மோடி பிம்பம்” : C-Voter நடத்திய ஆய்வில் தகவல்!