murasoli thalayangam

டங்ஸ்டன் சுரங்கம்; பணிந்தது ஒன்றிய அரசு - தமிழ்நாடு மக்களுக்கு கிடைத்த வெற்றி : முரசொலி தலையங்கம்!

பணிந்தது ஒன்றிய அரசு

முரசொலி தலையங்கம் (25-01-2025)

‘டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மாட்டோம்’ என்று அடிபணிந்து விட்டது ஒன்றிய அரசு. சட்டமன்றத்தில் தி.மு.க. அரசு நிறைவேற்றிய தீர்மானத்துக்குக் கிடைத்த வெற்றி இது. போராடிய மக்களுக்குக் கிடைத்த வெற்றி இது.

மதுரை மாவட்டம் – மேலூர் வட்டம் – நாயக்கர்பட்டி கிராமத்தில், டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கு அனுமதியை ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு வழங்கியுள்ளது. ‘இன்றியமையாத மற்றும் முக்கியக் கனிமங்களுக்கான உரிமங்களை மாநில அரசின் அனுமதி இன்றி ஒன்றிய அரசு ஏலம் விடக்கூடாது’ என்று தமிழ்நாடு அரசு 3.10.2023 அன்று ஒன்றிய அரசுக்கு வலியுறுத்திச் சொல்லி இருந்தது. இதனை மீறி ஏலம் விட்டது பா.ஜ.க. அரசு. ‘இதனை அனுமதிக்க மாட்டோம்’ என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். பிரதமருக்குக் கடிதம் அனுப்பினார் முதலமைச்சர்.

மதுரை வட்டாரத்தில் போராட்டம் நடத்திய மக்களிடம் மாண்புமிகு அமைச்சர் மூர்த்தியை அனுப்பி, ‘எந்தச் சூழலிலும் தமிழ்நாடு அரசு அனுமதி தராது’ என்று சொல்ல வைத்தார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். சட்டமன்றத்தில் இதற்கான தீர்மானத்தையும் நிறைவேற்றி, ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தது தமிழ்நாடு அரசு.

அப்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மிக உறுதியாக ஒரு வாக்குறுதியை அளித்தார்கள்.

• ஒன்றிய அரசு இந்த விஷயத்தில் ஏலம் விட்டுவிட்டதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசைப் பொறுத்தவரையில், நிச்சயமாகச் சொல்கிறேன். ஒன்றிய அரசு ஏலம் விட்டாலும், நிச்சயமாக, உறுதியாக இந்த அரசு அதற்குரிய அனுமதியைத் தருவதற்கான வாய்ப்பே கிடையாது. அதிலே திட்டவட்டமாக இருக்கிறோம். இதுதான் முடிவு.

• திரும்பத் திரும்ப ஒன்றைத் தெளிவாகச் சொல்கிறேன்; நான் முதலமைச்சராக இருக்கிற வரையில் நிச்சயமாக ஒன்றிய அரசு இந்தத் திட்டத்தைக் கொண்டுவர முடியாது! வந்தால் அதைத் தடுத்தே தீருவோம்!

• திரும்பத் திரும்பச் சொல்கிறேன். நான் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக இருக்கின்ற வரையிலே, நிச்சயமாக நாங்கள் அனுமதிக்க மாட்டோம்; அனுமதிக்க மாட்டோம்; அனுமதிக்க மாட்டேன்.

• எந்தக் காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டிற்குள் ஒன்றிய அரசால் போடப்படக்கூடிய இந்தத் திட்டம், நிச்சயம் வரக்கூடிய வாய்ப்பு இருக்காது, அதைத் தடுத்து நிறுத்துவோம். அப்படி ஒரு சூழல் வந்தால் இந்தப் பொறுப்பில் நான் இருக்க மாட்டேன்; முதலமைச்சர் பொறுப்பில் இருக்க மாட்டேன் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.

– என்று சொன்னார்கள். இந்த உறுதியானது மேலூர் வட்டாரத்து மக்களை மகிழ்ச்சி அடைய வைத்தது. இதனை மீறி இத்திட்டத்தைச் செயல்படுத்த முடியாது என்ற சூழலை ஒன்றிய அரசுக்கும் முதலமைச்சரது உறுதிமொழி உணர்த்தியது. உடனடியாக பா.ஜ.க. அண்ணாமலை மூலமாக ஒரு நாடகத்தை ஆடினார்கள்.

தி.மு.க. அரசின் முழுமையற்ற தகவல்களால் மக்கள் எதிர்த்தார்கள் என்றும், திட்டத்தைக் கைவிட ஒன்றிய அமைச்சரிடம் நானே சொன்னேன் என்றும், மக்களுக்கு எதிராக பிரதமர் செயல்பட மாட்டார் என்றும் ஒரு அறிக்கையை வெளியிட்டார் அண்ணாமலை. மேலூருக்குச் சென்று மக்களைச் சந்திக்கும் நாடகத்தையும் ஆடினார் அண்ணாமலை.அதாவது திட்டத்தை இனி செயல்படுத்த முடியாது, பின்வாங்கத்தான் வேண்டும் என்ற சூழ்நிலை வந்ததும், ‘பா.ஜ.க.வினர் சொல்லி பின் வாங்கியதாக ஒரு நாடகத்தை ஆடியது’ ஒன்றிய பா.ஜ.க. அரசு. எப்படியோ பின் வாங்கிவிட்டார்கள்.

அ.தி.மு.க. ஆதரவில் நிறைவேறிய சட்டத் திருத்த மசோதாதான், டங்ஸ்டன் சுரங்கத்தை ஏலம் விடும் அதிகாரத்தை மாநில அரசிடம் இருந்து பிடுங்கி மோடி அரசிடம் கொடுக்கக் காரணமானது. டங்ஸ்டன் உள்ளிட்ட சில அரிய கனிமங்களை ஒன்றிய அரசு மட்டுமே ஏலம் விட முடியும் என்கிற சட்டத் திருத்தத்தைத்தான் தம்பிதுரை ஆதரித்தார். இது அம்பலம் ஆனதும், ‘நான் டங்ஸ்டனை ஆதரித்து வாக்களிக்கவில்லை’ என்று சமாளிக்கிறார் தம்பிதுரை. அவர் ஆதரித்த சட்டத்தை அடிப்படையாக வைத்துத்தான் டங்ஸ்டன் ஏலத்தை ஒன்றிய அரசு நடத்த திட்டமிட்டது.எந்த ஒரு சட்டத்தையும் ஆதரிப்பது, எதிர்ப்பது என்பது அதன் விளைவுகளை வைத்துத்தான். விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் சட்டத்தை எப்படி ஆதரிக்க முடியும் அ.தி.மு.க.?

இந்தச் சட்டம் மாநிலங்களவையில் தாக்கல் (2.8.2023) ஆனபோது, ‘இதனால் மாநில உரிமைகள் பறிபோய்விடக் கூடாது’ என்று தம்பிதுரை சொன்னாராம். ‘பறிபோகாது, மாநிலங்களின் ஒப்புதல்படிதான் ஏலம் விடுவோம்’ என்று ஒன்றிய அமைச்சர் சொன்னாராம். உடனே தலையாட்டி விட்டு தம்பிதுரை ஆதரித்து வாக்களித்துவிட்டார்.

இப்படி இந்தத் திட்டம் வருவதற்கே பழனிசாமியின் கையாலாகாத்தனம்தான் காரணம். எப்போதும் மோடி அ.தி.மு.க. நடத்தும் தம்பிதுரையை பழனிசாமியாலும் ஒன்றும் செய்ய முடியாது. குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து விட்டு மாட்டிக் கொண்டதைப் போல மாட்டிக் கொண்டார் பழனிசாமி.

இதில் சிக்கிக் கொண்டவர் பழனிசாமிதான். திட்டத்தைக் கொண்டு வரும் பா.ஜ.க.வை எதிர்க்காமல், ‘திட்டத்தை எதிர்க்கவில்லை தி.மு.க.’ என்று காற்றில் கொம்பு சுற்றினார் பழனிசாமி. ‘திட்டத்தை ஒன்றிய அரசு வாபஸ் வாங்காது, இதை வைத்து தி.மு.க.வை கார்னர் பண்ணலாம்’ என்று வாய்ப்பந்தல் போட்டார் பழனிசாமி. அவரது ஆசையிலும் மண் விழுந்துவிட்டது. பழனிசாமி எந்த மேட்டர் எடுத்தாலும் ஓரிரு நாளில் முடிவுக்கு வந்து விடுகிறது. அவர் உப்பு விற்கப் போனால் மழை பெய்கிறது. பாவம்!

Also Read: ‘திவாலை’ பற்றி எல்லாம் பேசுவதற்கு பழனிசாமிக்கு தகுதி இருக்கிறதா? : முரசொலி கடும் தாக்கு!