murasoli thalayangam

‘திவாலை’ பற்றி எல்லாம் பேசுவதற்கு பழனிசாமிக்கு தகுதி இருக்கிறதா? : முரசொலி கடும் தாக்கு!

முரசொலி தலையங்கம் (24-01-2025)

திவால் ஆன பழனிசாமி

திவால் ஆன பழனிசாமி, ‘தமிழ்நாடு அரசு திவால் ஆகப் போகிறது’ என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். தண்ணீரில் மூழ்கிய நரி ஒன்று, ‘உலகம் அழியப் போகிறது’ என்று கத்திக் கொண்டே போனதாம். அதைப் போல இருக்கிறது பழனிசாமியின் பேச்சுகள்.

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2011 முதல் 2021 வரைக்கும் தரை மட்டத்துக்கு இறக்கியது அ.தி.மு.க. ஆட்சி தானே? 2021 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு வெள்ளை அறிக்கையை அரசு தாக்கல் செய்தது. முந்தைய அ.தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை எந்தெந்த வகையில் எல்லாம் சீரழித்தது என்பது அதில் உள்ளது.

அதில் இருந்த மிகமுக்கியமான கருத்துகள் என்ன என்றால்...

•2011–12 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார நிலைமை உச்சநிலையில் இருந்தது. அது கடந்த (2012–21) பத்தாண்டு காலத்தில் மந்த நிலைமையை அடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக 2013 –14 ஆண்டில் இருந்து தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை மிக மோசமான நிலையை அடைந்து வருகிறது. இப்படி நெருக்கடியில் இருந்த நிலையை கொரோனா என்ற பெருந்தொற்றுப் பரவல் கூடுதலாகப் பாதித்துவிட்டது.

•2006–13 காலக்கட்டத்தில் ஏழு ஆண்டுகளில் 5 ஆண்டுகள் தமிழ்நாடு அரசு உபரி வருவாயை அடைந்திருந்தது. 2013 முதல் பற்றாக்குறை தொடர்ந்து வருகிறது.

•2017–19 காலக்கட்டத்தில் இந்தியாவிலேயே அதிகளவு வருவாய் பற்றாக்குறை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு ஆக்கப்பட்டு விட்டது.

•2016–21 அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நிதிப் பற்றாக்குறையில் வருவாய் பற்றாக்குறை விகிதம் என்பது 52.48 சதவிகிதம் ஆகும். இது முந்தைய ஆட்சியில் 2011 ஆம் ஆண்டில் 14.95 சதவிகிதமாக இருந்தது.

•அ.தி.மு.க. ஆட்சியின் உண்மையான செலவுகள் கட்டுப்படுத் தப்படவில்லை. பற்றாக்குறைகள் மறைக்கப்பட்டுள்ளது.

•ஒட்டுமொத்தமாக இன்றைய கடன் என்பது 5,70,189 கோடி ரூபாய் ஆக இருக்கிறது. 2010 இல் 16.68 சதவிகிதமாக இருந்த கடனை 2011 இல் – தி.மு.க. ஆட்சியில் – 15.36 சதவிகிதமாக குறைத்தோம். ஆனால் இன்று அது 25 சதவிகிதம் ஆகிவிட்டது. அ.தி.மு.க. ஆட்சியின் தொடக்கம் முதலே கடன் வாங்குதல் அதிகம் ஆகிவிட்டது.

•இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களைக் காட்டிலும் தற்போது அதிகளவு கடன் வாங்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இந்த அடிப்படையில் பார்த்தால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 2,63,976 கோடி ரூபாய் பொதுக்கடன் சுமத்தப்படுகிறது.

– ஒட்டுமொத்தமாகச் சொல்வதாக இருந்தால் தமிழ்நாட்டின் நிதிநிலைமை, நிலையற்ற தன்மையில் இருக்கிறது என்று அந்த அறிக்கை கூறியது. இத்தகைய நிலைமையில்தான் பழனிசாமி தமிழ்நாட்டின் ஆட்சியை ஒப்படைத்துச் சென்றார்.

இதில் இருந்து மீட்சியை உருவாக்கியதுதான் தி.மு.க. ஆட்சியின் சாதனையாகும்.

இன்றைக்கு தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக மாறி வருகிறது. தொழில்கள் பெருகி இருக்கிறது. தொழிற்சாலைகள் அதிகமாகி இருக்கிறது. புதிய வேலை வாய்ப்புகள் அதிகம் ஆகி இருக்கின்றன. புதிய புதிய திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. அனைத்துக்கும் தாராளமாக நிதி ஒதுக்கப்படுகிறது. அறிவிக்கப்படும் திட்டங்களின் எண்ணிக்கை அதிகம். அதற்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதிகள் அதிகம். அதனை பட்டியலிட்டுப் பார்க்கட்டும் பழனிசாமி. இத்தனைக்கும் ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைக்கு மத்தியில் தான் இத்தனை திட்டங்களைத் தீட்டி வருகிறோம்.

தமிழ்நாட்டின் நிதி வளத்தை மொத்தமாகச் சுரண்டிக் கொழுக்கிறது ஒன்றிய அரசு. ஜி.எஸ்.டி. வரி விதிப்பானது மாநில அரசின் பங்கை தட்டிப் பறிக்கும் காரியம் ஆகும். ஜி.எஸ்.டி. – வரி விதிப்பு என்பதே மாநில அரசின் நிதிமூச்சுக்காற்றை நிறுத்தும் செயல் தான். இதனையும் தாக்குப் பிடித்து தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. ஜி.எஸ்.டி. நிதி பகிர்வில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு 40 விழுக்காடு நிதி தரும் ஒன்றிய அரசானது தமிழ்நாட்டுக்கு 15 விழுக்காடு தான் தருகிறது.

இது வரை நடந்த இரண்டு இயற்கைப் பேரிடர்களுக்கு ரூ.37 ஆயிரம் கோடி நிதி கேட்டோம். ஆனால் ரூ.776 கோடியை மட்டும் – வழக்கமாகத் தரும் நிதியை மட்டும் – கொடுத்துள்ளது ஒன்றிய அரசு. பள்ளிக் கல்வித் திட்டத்துக்காகத் தர வேண்டிய ரூ.2000 கோடியை ஒன்றிய அரசு தரவில்லை. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு மாநில அரசு தான் 60 விழுக்காடு நிதியைத் தருகிறது. மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகளுக்கான தொகையை தமிழ்நாடு அரசு தான் செய்து வருகிறது. ஆனால் ரயில்வே துறையை அவர்கள் வைத்துள்ளார்கள்.

கடந்த ஆண்டு ஒன்றிய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு என்ற பெயரே இல்லை. ஆந்திராவின் பெயர் ஐந்து இடத்தில் இருந்தது. பீகாரின் பெயர் ஐந்து இடத்தில் இருந்தது. மேற்கு வங்கம் ஒரு இடத்தில் வந்தது. நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாடு என்ற பெயரே இல்லை. இத்தகைய சூழலில்தான் மாநில அரசை நடத்தி வருகிறோம்.

ஆந்திர தலைநகர் அமராவதி மேம்பாட்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி. பீகாரில் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ரூ.26 ஆயிரம் கோடி, பீகார் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ.11,500 கோடி. தமிழ்நாட்டுக்கு ஏதுமில்லை. முன்பாவது ஒரு திருக்குறள் இருக்கும். அதுவும் இல்லை. ஒண்ணே முக்கால் அடி திருக்குறளைக் கூட ‘துண்டித்து’விட்டார்கள். இத்தகைய சூழலில்தான் மாநில அரசை நடத்தி வருகிறோம்.

இதையெல்லாம் பேசுவதற்கு பழனிசாமிக்கு முதுகெலும்பு இல்லை. ‘திவால் ஆகிறது அரசு’ என்று பேசி இருக்கிறார். நின்ற தேர்தலில் எல்லாம் தோற்று – சொந்தக் கட்சிக்காரர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டு – அவரது தலைமையை நிராகரித்து மூன்று அ.தி.மு.க. செயல்படும் இந்தக் காலத்தில் ‘திவாலை’ பற்றி எல்லாம் பேசுவதற்கு அவருக்குத் தகுதி இருக்கிறதா?

Also Read: இப்படி ஒரு விதி இருப்பதே ஜனநாயக விரோதம் அல்லவா? : வெளுத்து வாங்கிய முரசொலி!