murasoli thalayangam

ஜி.யு.போப் - நேசமணி - காமராசர் : இம்மூன்று பேரையும் போற்றும் தி.மு.க அரசு - முரசொலி!

முரசொலி தலையங்கம் (04-01-2021)

ஜி.யு.போப் - நேசமணி - காமராசர்

“திருவள்ளுவர் சிலைக்கு மூன்று படகுகள் விடப்படும்” என்று அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அந்த மூன்று படகுகளும் யார் யார் பெயரில் அமைந்திருக்கும் என்பதையும் அறிவித்துள்ளார்கள். ஐரோப்பியத் தமிழறிஞர் ஜி.யு.போப், தென் தமிழகப் போராட்ட வீரர் மார்ஷல் நேசமணி, பெருந்தலைவர் காமராசர் ஆகிய மூவர் பெயரைச் சூட்டி உள்ளார் முதலமைச்சர் அவர்கள்.

தமிழுக்குத் தொண்டாற்றிய ஜி.யு.போப் அவர்கள் பெயரும் - தமிழின ஒற்றுமைக்குப் பாடுபட்ட மார்ஷல் நேசமணி பெயரும் – தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பெருந்தலைவர் காமராசர் பெயரும் சூட்டப்பட்டுள்ளதன் மூலமாக இம்மூன்றையும் முக்கியமானதாகக் கருதும் அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்துள்ளது.

இம்மூவர் தொண்டும் போற்றத்தக்கது. பாராட்டத்தக்கது. தலைவணங்கத் தக்கது.

தமிழ் நிலத்தில் அச்சுப் பயன்பாடு உருவான காலத்தில் வலம் வந்த ஐரோப்பிய அறிஞர்கள் பலரும் தமிழ் மொழியில் தங்களது புலமையை வளர்த்துக் கொண்டு தமிழுக்குத் தொண்டாற்றத் தொடங்கினார்கள். சமயப் பணிக்காக இம்மண்ணுக்கு வந்தவர்களாக இருந்தாலும் அவர்களைத் தமிழ் வென்றெடுத்தது. அதில் அண்ட்ரிக், நொபிலி, வீரமாமுனிவர், சீகன்பால்கு, ஜி.யு.போப், கால்டுவெல், மெக்கன்சி, எல்லீஸ் ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

அதிலும் குறிப்பாக ஜி.யு.போப், தமிழ் இலக்கியத்துக்கும் இலக்கணத்துக்கும் அருந்தொண்டாற்றினார். திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் இவர். 19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கணத்தை மாணவர்களுக்குக் கற்பித்தவர்களில் முக்கியமானவர் போப். இலக்கணத்தை கேள்வி – பதில் பாணியில் அறிமுகம் செய்தவர் அவர். 1859 ஆம் ஆண்டு முக்கியமான அறநெறிப் பாடல்களைத் தொகுத்து ‘செய்யுட் கலம்பகம்’ தயாரித்துத் தந்தார். சென்னையிலும், நெல்லையிலும் தஞ்சையிலும் சமயப் பரப்புரை செய்ய வந்த அவர், முதலில் முறையாகத் தமிழ் கற்றுக் கொண்டார். உதகை பள்ளியில் ஆசிரியராகவும் தலைமையாசிரியராகவும் இருந்தார். பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ், தெலுங்கு ஆசிரியராகவும் இருந்தார். அவரது தமிழ்ப் பணிக்காக 1906 ஆம் ஆண்டு ஆசியச் சங்கம், தங்கப் பதக்கம் வழங்கியது. தனது கல்லறையில் ‘தமிழ்த் தொண்டன்’ என்று எழுதச் சொன்னவர் போப்.

‘குமரித் தந்தை’ என்றும், மார்ஷல் என்றும் போற்றப்படுபவர் நேசமணி அவர்கள். கேரளாவின் ஆளுகைக்குள் இருந்த தமிழர் பகுதியான தென் திருவிதாங்கூரை தமிழ்நாட்டுடன் இணைக்கப் போராடிய போராட்டத்துக்குச் சொந்தக்காரர் நேசமணி அவர்கள். 1948 –- 1955 ஆகிய காலக் கட்டத்தில் அவர் வெளியிட்ட நான்கு புத்தகங்கள் புரட்சியை உருவாக்கின. Inside Travancore Tamilnad - 1948, தென்குமரி எல்லை மாநாடு வரவேற்புரை –1950, Rule of steel and Fire in Travancore – 1954, Debates of parliament – 1955 ஆகியவை அந்த நூல்கள்.

தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை ஆகிய பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டம்தான் தென் எல்லைப் போராட்டம். இப்போது படித்தாலும் இரத்தத்தைச் சூடாக்கும் ஆவணங்கள் அவை. ‘தோக்கும் வாளும் கோலோச்சும் திருவிதாங்கூர்’ என்ற இவரது நூலை திருவிதாங்கூரில் எந்த அச்சகமும் அச்சிட்டுத் தரவில்லை. நேசமணி அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததால் அந்தத் தொடர்பை வைத்து டெல்லியில் அச்சிட்டுக் கொண்டு வந்தார். டெல்லியில் அச்சிடப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தரப்பட்ட இரண்டு மணி நேரத்தில் திருவனந்தபுரத்தில் தடை செய்யப்பட்டது. இத்தகைய தென்குமரியின் தந்தையாக வலம் வந்த மார்ஷல் நேசமணி அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டியவர் அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள். இன்று அவர் பெயரால் படகுப் போக்குவரத்தைத் தொடங்கி இருக்கிறார் இன்றைய முதலமைச்சர்.

தேசிய இயக்கத்தின் தலைவராக வளர்ந்து வாழ்ந்தாலும் பெருந்தலைவர் காமராசரை ‘பச்சைத் தமிழர்’ என்று போற்றியவர் தந்தை பெரியார் அவர்கள். முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள காமராசர் அவர்கள் தயங்கியபோது அவரை தயங்காமல் ஏற்றுக் கொள்ள வைத்தவர்கள் தந்தை பெரியாரும், சேலம் வரதராஜுலுவும்.

‘உங்கள் ஆட்சிக்கு காப்பாளனாக நான் இருப்பேன்’ என்றவர் பெரியார். குலக்கல்வி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, இனக்கல்வி ஆட்சியைத் தொடங்கி வைத்தவர் காமராசர். அவர் உருவாக்கிய பள்ளிகளும், மதிய உணவுத் திட்டமும் தமிழ்நாட்டுக்குள் கல்வி மறுமலர்ச்சியை உருவாக்கின.

‘குழந்தைகளைப் படிக்க வை என்றால், ‘அவன் அப்பன் படித்தானா?’ என்று கேட்கிறார்கள். அப்பனையும் பாட்டனையும் போல இவனும் அப்படியே இருக்க வேண்டுமானால் அரசாங்கம் எதற்கு? மந்திரிகள் எதற்கு?’ என்று கேட்டவர் அவர். ‘சுதந்திரம் வாங்கி பதினேழு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஏழை ஏழையாகவே இருக்கிறான், பணக்காரன் மேலும் பணக்காரனாகி வருகிறான். இதற்குத்தானா சுதந்திரம் வாங்கினோம்?’ என்று கேட்டவர் அவர். ‘கல்வியைப் பரப்ப வேண்டாம் என்றால் நான் முதலமைச்சர் பதவியை விட்டு விலகத் தயார்’ என்று அறிவித்தவர் அவர்.

காங்கிரஸை தி.மு.க. கடுமையாக எதிர்த்து வந்த அந்தக் காலத்திலேயே - – குடியாத்தம் இடைத் தேர்தலில் பெருந்தலைவர் காமராசர் போட்டியிட்ட போது அவரை ஆதரித்தவர் பேரறிஞர் அண்ணா. எதிர்த்து வேட்பாளரை நிறுத்தவில்லை கழகம். பெருந்தலைவர் மறைந்தபோது, கொட்டும் மழையில் ஒரு மகனைப் போல இறுதிச் சடங்கு ஏற்பாடுகளைச் செய்தவர் தலைவர் கலைஞர். பெருந்தலைவர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்ததும் கழக ஆட்சியே. இன்று அவர் பெயரால் படகுப் போக்குவரத்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போற்ற வேண்டியவரைப் போற்றுவதன் மூலமாக போற்றத்தக்க அரசாகச் செயல்பட்டு வருகிறது திராவிட முன்னேற்றக் கழக அரசு.

Also Read: ”மன்னிப்புக் கேட்கவே 20 மாதங்கள் - கூச்சமே இல்லாமல் பேட்டி தரும் பா.ஜ.க முதல்வர்” : முரசொலி!