murasoli thalayangam

”பெருங்கனவின் தொடக்கமாக அமைந்துள்ளது வெள்ளிவிழா - வாழ்க வள்ளுவம்” : முரசொலி தலையங்கம் !

முரசொலி தலையங்கம் (01-01-2025)

வான்புகழ் வள்ளுவர் - 2

முத்தமிழறிஞர் கலைஞரின் எண்ணத்துக்கு வண்ணம் சேர்த்தவர் சிற்பி கணபதி ஸ்தபதி அவர்கள்.

"சிற்பச் சித்தரான கணபதி ஸ்தபதியார் மூன்றாண்டு காலத்திற்கும் மேலாக அல்லும் பகலும் அயராது பாடுபட்டு, நமது அய்யன் வள்ளுவனுக்கு காலத்தால் அழியாத நினைவுச் சின்னத்தை என் இதயம் இறக்கைகள் பெற்று பறந்து மகிழ்கிற அளவுக்கு, என் இரத்த நாளங்களில் இன்ப அருவி பாய்ந்து பரவுகிற அளவுக்கு, என் மேனியில் சல்லி நரம்புகளும் துள்ளிச் சதிராடும் அளவுக்கு, என் சுவாசக் கோசங்கள் ஆனந்தப் பெருமூச்சால் நிரம்பிப் பிதுங்குகின்ற அளவுக்கு வடித்தெடுத்து நிலைநாட்டி விட்டார்" என்று பாராட்டினார் கலைஞர்.

அத்தகைய கணபதி ஸ்தபதி அவர்கள் தான், குமரி முனையில் 133 அடியில் எழுந்த சிலையை, 'உயிர் தரித்த உடல் போல, உருத்தரித்த வள்ளுவம்' என்று சொன்னார்.

"துண்டு கற்களாம் எழுத்துக்களைக் கோத்து, வள்ளுவர் உருவமாம் சொல்லாக்கி, வள்ளுவமாம் பொருளை வைத்து, தாளமானமாம் யாப்பைக் கொண்டு, கவினுறு உருவை (சிலையை)க் கட்டி, வள்ளுவர் பற்றிய சிறப்புச் செய்திகளை அணிகளாய்க் காட்சிப்படுத்தி இயற்றிய அழகுக் கவிதையே உடல் தரித்த வள்ளுவமாய் திருவள்ளுவர் சிலையாய்க் காட்சி தருகிறது" என்றார் அவர்.

தலைவர் கலைஞரின் சிற்பக் கலையாற்றல் குறித்து கணபதி ஸ்தபதி போற்றிப் பாராட்டி இருக்கிறார். கலைஞர் அரசியல்வாதி அல்ல, 'பெரும் கலைஞராக'வே வாழ்ந்தார் என்கிறார் கணபதி ஸ்தபதி. 'பூம்புகார் பெருந்தச்சன்' என்ற விருதை கலைஞருக்கு மாமல்லபுரத்தில் வைத்து கணபதி ஸ்தபதியார் வழங்கினார்.

"133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலைபோல கருத்தாளமுள்ள முற்றிலும் கல்லால் ஆன கட்டுமான நுட்பங்கள் செறிந்த சிலையாக எங்கணும் எவரும் கண்டதில்லை. கேட்டதுமில்லை. நினைத்துப் பார்த்ததுமில்லை. வெற்றி கண்ட இப்பணி, சிற்பக் கலை மரபுக்கு மேலுமொரு அணியாகத் திகழும் என்பதில் ஐயமில்லை. கலைகளையும், கலைகளின் சிறப்புகளையும் தொன்மையையும் உயர்வையும் பேசிடத்தக்கோர் நம் நாட்டில் ஏராளமாக இருப்பினும், கலை சார்ந்த பண்பாட்டுச் சின்னமாக பெரிய எடுப்புகளைக் கல்லால் செய்திடத் தக்கோர் இன்று குறைவே எனலாம். மேலும், இத்தகைய பணியைச் செய்திட எவருக்கும் ஆசை இருக்கலாம். வாய்ப்புமிருக்கலாம். ஆனால் செய்திட வேண்டுமென்ற உறுதியும், அதற்குரிய துணிச்சலும் அதனால் ஏற்படும் வெற்றி மீது நம்பிக்கையும் கொண்டோர் அரிதினும் அரிது. அத்தகைய துணிச்சலைப் பெற்றவர் கலைஞர் தான்" என்றார் கணபதி ஸ்தபதி.

கலைஞரே ஒரு சிற்பிதான். வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட வேண்டும் என்று திட்டமிட்டபோது கணபதி ஸ்தபதியிடம் அவரே கோடுச் சித்திரங்களை வரைந்து கொடுத்தார். திருவாரூர் தேர் போல ஒரு பகுதி அமைய வேண்டும் என்றார். கணபதி ஸ்தபதி இந்தப் பணிகளைத் தொடர்ந்து கொண்டிருந்தபோதே ஸ்தபதி எஸ்.கே.ஆச்சார் அவர்களும் இதனுள் இணைந்தார். இவர் தான், குமரியில் விவேகானந்தர் மண்டபத்தை அமைத்தவர்.

"பழைய காலத்தில் எத்தனையோ மன்னர்கள் கலையைப் பேணி வந்திருக்கிறார்கள். கோயில்களையும் மண்டபங்களையும் கட்டும்படி சிற்பிகளைத் தூண்டி இருக்கிறார்களே தவிர, யாரும் இப்படி ஒரு கல் தேரை பிரமாண்டமாக உருவாக்கும்படி கூறியது இல்லை" என்று எஸ்.கே.ஆச்சார் சொல்லி இருக்கிறார்.

வள்ளுவர் கோட்டமும், வள்ளுவர் சிலையும், பூம்புகாரும், வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையும் கலைஞரின் கலைச் சின்னங்களாக அமைந்து விட்டன. சங்க கால மன்னர் வளர்த்த கலைமரபின் நீட்சியாக அமைந்துள்ளன. அந்த வரிசையில் கீழடி ஆய்வகம், திருவாரூர் கலைஞர் கோட்டம், சென்னை கலைஞர் உலகம், மதுரை கலைஞர் நூலகம் போன்ற வரலாற்றுச் சின்னங்களை அமைத்து வருகிறார் இன்றைய முதலமைச்சர் அவர்கள்.

திருக்குறளை ஞானத் திருவிளக்கு என்றார் வீரமாமுனிவர். வடமொழித் தொடர்பில்லாதது என்றார் கால்டுவெல். மற்ற எல்லா நூல்களையும் விடச் சிறந்தது என்றார் ஜி.யு.போப். 'மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்பதுதான் இங்கர்சாலுக்குப் பிடித்த குறள். டால்ஸ்டாய் தனது கடிதங்களில் குறளை மேற்கோள் காட்டினார். தன்னிடம் இருந்த குறள் ஓலைகளை பாதுகாப்பாக வைத்திருந்தார் எல்லீஸ். வடலூரில் வகுப்பு நடத்தினார் அருட்திரு வள்ளலார். 'நான் தமிழ் படிக்க விரும்பக் காரணம், திருக்குறளை மூலத்தில் படிக்க வேண்டும் என்பதற்காகவே' என்றார் அண்ணல் காந்தி. 'வள்ளுவரை உலகுக்குத் தந்த தமிழ்நாடு' என்றார் மகாகவி பாரதி. இவை அனைத்துக்கும் மேலாக கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் சொன்னார்.

"திருக்குறளின் பெருமை அறியாதவரை நான் மதிப்பதுமில்லை, நேசிப்பதுமில்லை" என்றார் வ.உ.சி. இத்தகைய பெருமை எந்த நூலுக்கும் இல்லை. எந்த ஆளுக்கும் இல்லை. உலகப் புகழை அடைந்துவிட்டார் வள்ளுவர் என்பதில் இருந்தே அவர் யாத்த குறளின் பெருமையை உணரலாம்.

வள்ளுவருக்கு வானுயர சிலை அமைத்ததன் மூலமாக கலைஞரின் கலைத் திறமையை அறியலாம். வள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவைச் சிறப்புறக் கொண்டாடத் திட்டமிட்டதன் மூலமாக குறள் வழிச் சமுதாயம் அமைக்க விரும்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பெருங்கனவை அறியலாம்.

பேரறிவுச் சிலை என்று பேர் பெற்றுள்ளது வள்ளுவனார் சிலை.

பெருங்கனவின் தொடக்கமாக அமைந்துள்ளது வெள்ளிவிழா.

வாழ்க வள்ளுவம்!

Also Read: ’கடல் அலை நடுவே இருக்கும் தமிழ்மலை’ : விழாக் கோலம் காண்கிறது குமரி முனை - முரசொலி!