murasoli thalayangam

“பேரறிஞர் அண்ணா கனவு திட்டத்தை தொடங்கி வைத்தவர்” - மன்மோகன் சிங் சாதனைகளை பட்டியலிட்டு முரசொலி புகழஞ்சலி!

இரண்டு முறை இந்தியப் பிரதமராக இருந்தவரும் – தலைசிறந்த பொருளாதார மேதையுமான மன்மோகன் சிங் நேற்றைய தினம் (டிசம்பர் 26) மறைந்துவிட்டார். இந்திய அரசியலில் மகத்தான மனிதர் மறைந்துவிட்டார். அவருடைய சாதனைகள் என்பவை மகத்தானவை ஆகும்.

அவர் அரசியல்வாதி அல்ல. கல்விதான் அவரை இவ்வளவு பெரிய உயரத்துக்கு அழைத்துச் சென்றது. ‘இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் தன்னிறைவான வளர்ச்சி வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் புத்தகம் எழுதினார். இது 1964 ஆம் ஆண்டு வெளியானது. டெல்லி பொருளாதாரப் பள்ளியில் வேலைக்கு வந்தார். 1971 ஆம் ஆண்டு இந்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டார்.

அடுத்த ஆண்டே நிதி அமைச்சக ஆலோசகர் ஆனார். நிதி அமைச்சகச் செயலாளர், திட்டக்குழுவின் துணைத் தலைவர், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர், பிரதமரின் ஆலோசகர் ஆகிய பொறுப்புகளில் வரிசையாக உயர்ந்தார். 1991 ஆம் ஆண்டு நிதி அமைச்சர் ஆனார். 2004 ஆம் ஆண்டு இவரை பிரதமராகவே ஆக்கியது காங்கிரஸ் கட்சி. இவை அனைத்தும் அவரது கல்வி, பொருளாதார மேதமையால் கிடைத்த பதவிகளே தவிர அரசியலால் கிடைத்தவை அல்ல. இதற்கு முன்னுதாரணம் இல்லை.

அவரும் தனது பதவிக்காலத்தில் கல்வியாளர், பொருளாதார அறிஞர், சிந்தனையாளராகவே நடந்தும் கொண்டார். அத்தகைய திட்டங்களுக்கே முன்னுரிமை கொடுத்துச் செயல்படுத்தினார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டமானது 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. கோடிக்கணக்கான கிராமப்புற மக்களுக்கு 100 நாட்கள் ஊதியத்துடன் கூடிய வேலை கிடைத்தது. ஏப்ரல் 2008 இல், இந்தத் திட்டம் ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம்’ (MGNREGA) என பெயர் மாற்றப்பட்டது. இன்று வரை கோடிக்கணக்கானவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்து வருகிறது.

அவரது ஆட்சியில் ஏராளமான சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. மகளிருக்கு எதிரான வன்செயல்களைத் தடுக்க 2005–இல் சட்டம், தகவல் அறியும் சட்டம், 6 முதல் 14 வயதுடைய அனைவருக்கும் கல்வி பெறும் உரிமைச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம், லோக்பால் அமைப்புச் சட்டம், வன உரிமைகள் அங்கீகரிப்புச் சட்டம், நிலம் கையகப்படுத்தப்பட்டால், நியாயமான இழப்பீடு வழங்கச் சட்டம், கையால் மலம் அள்ளுவதைத் தடை செய்யும் சட்டம், மறுவாழ்வுத் திட்டம் 2012 ஆகியவற்றைக் கொண்டு வந்தவர் மன்மோகன் சிங் அவர்கள்.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் அவரது ஆட்சியில்தான் நிறைவேறியது. 11–வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 8 புதிய ஐ.ஐ.டி.–கள், 7 ஐ.ஐ.எம்.–கள், 30 மத்திய பல்கலைக்கழகங்களைக் கொண்டுவரத் திட்டம் தீட்டியவரும் அவரே. உணவு தானிய உற்பத்தியை அதிகரித்தார். 140 கோடி மக்களுக்கு ஆதார் அட்டைகளை வழங்கினார். வாஜ்பாய் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ‘தங்க நாற்கரச் சாலை’ மற்றும் ‘நெடுஞ்சாலை நவீனமயமாக்கல்’ திட்டத்தை மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தொடர்ந்தது. ‘சிறப்புப் பொருளாதார மண்டல (SEZ) சட்டம் – 2005’ கொண்டு வந்தார்.

1991–96ஆம் ஆண்டுகளில் இந்திய நாட்டின் நிதி அமைச்சராக இருந்த அவர், 2004–14 ஆகிய பத்து ஆண்டுகளில் இந்திய நாட்டின் பிரதமராக இருந்தார். “யாருடைய சிந்தனையையும் யாரும் தடுக்க முடியாது. உலகின் ஒரு பொருளாதார சக்தியாக இந்தியா உருவாகுவதையும் யாராலும் தடுக்க முடியாது” என்று சொல்லிவிட்டு நாடாளுமன்றத்தில் தனது உரையை 1991 ஆம் ஆண்டு தொடங்கினார் மன்மோகன். அதனைத் தனது பதவிக் காலத்தில் நிறைவேற்றிக் காட்டினார்.

மன்மோகன் சிங், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளால் இந்தியப் பொருளாதாரம் 8–9 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அடைந்தது. 2007 இல், இந்தியா அதன் அதிகபட்ச ஜி.டி.பி. வளர்ச்சி விகிதமான 9 விழுக்காட்டை அடைந்தது. உலகின் இரண்டாவது வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியது.

‘கொரோனா’ காலத்தில் மோடி அரசாங்கம் மக்களைக் கைவிட்டபோது, “முதலாவதாக, அரசாங்கம் மக்களின் வாழ்வாதாரங்களை உறுதி செய்து, பாதுகாப்பு நிலையை உறுதி செய்வதுடன், கணிசமான நேரடி ரொக்க உதவி அளிப்பதன்மூலம் அவர்களுக்குச் செலவழிக்கும் சக்தியை அளிக்க வேண்டும்” என்று அறிவுரை சொன்னவர் மன்மோகன் சிங். “அரசின் ஆதரவுடன் கூடிய கடன் உத்தரவாதத் திட்டங்கள்’ மூலம் தொழில் துறைக்கு போதிய மூலதனம் கிடைக்கச் செய்ய வேண்டும்” என்றும் கூறினார். “மனிதாபிமான நெருக்கடியால் பொருளாதாரத் தேக்கம் ஏற்படுகிறது. வெறுமனே பொருளாதார எண்கள் மற்றும் நடைமுறைகளின் அடிப்படையில் பார்க்காமல், நமது சமூகத்தின் எண்ணங்களின் அடிப்படையிலும் பிரச்சினையைப் பார்க்க வேண்டும்” என்றும் சொன்னார்.

தனது பதவிக் காலத்தில் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கெடுத்தார். அனைத்து விவாதங்களிலும் கலந்து கொண்டு பதில்கள் அளித்தார். வயது முதிர்ந்த நிலையில் சக்கர நாற்காலியிலும் மாநிலங்களவைக்கு வந்தார். இறுதி வரையும் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் தனது சிந்தனைப்படி உண்மையாகப் பணியாற்றினார்.

இவை அனைத்துக்கும் மேலாக தமிழ்நாட்டு வரலாற்றில் மன்மோகன் சிங்குக்கு தனியிடம் உண்டு. தமிழ்மொழிக்கு செம்மொழித் தகுதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது நூற்றாண்டுக் கனவு ஆகும். தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று 2004 ஆம் ஆண்டு தமிழைச் செம்மொழியாக ஒன்றிய அமைச்சரவையில் தீர்மானமாக அறிவித்தவர் பிரதமர் மன்மோகன் சிங். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் 18.08.2007 அன்று சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. சேதுசமுத்திரத் திட்டம் இன்று நிறுத்தி வைக்கப்பட்டாலும், அதனைத் தொடங்கி வைத்தவரும் அவர் தான். பேரறிஞர் அண்ணா கனவுத் திட்டம் அது.

2004–14 ஆகிய ஆண்டுகளில் ஏராளமான திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. இவை அனைத்தின் மூலமாக காலம் தோறும் நினைவுகூரப்படுவார் டாக்டர் மன்மோகன் சிங்.

Also Read: TUNGSTEN விவகாரம் : “ஒன்றிய அரசிடம் சொல்லும் துணிச்சல் அவருக்கு ஏன் இல்லை?” - பழனிசாமியை கிழித்த முரசொலி!