murasoli thalayangam
“ஏற்பட்ட இரு பேரிடர்களுக்கே நிவாரண நிதி தரவில்லை - இதோ! மூன்றாவது பேரிடரும் வந்து விட்டது!” - முரசொலி!
இதுவரை ஏற்பட்ட இரண்டு பேரிடர்களுக்கும் நிவாரண நிதி தரவில்லை ஒன்றிய பா.ஜ.க. அரசு. இப்போது இதோ! மூன்றாவது பேரிடரும் வந்துவிட்டது.
தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயலினால் ஏற்பட்டுள்ள தாக்கத்தினையும், அதனால் ஏற்- பட்டுள்ள கடுமையான மற்றும் வரலாறு காணாத சேதங்களையும் கவனத்தில் கொண்டு சேதமடைந்த உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரத்தை தற்காலிகமாக சீரமைக்க தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதியினை விடுவித்திடுமாறு கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.
ஃபெஞ்சல் புயல் 23, நவம்பர்- 2024 அன்று குறைந்த தாழ்வழுத்தப்பகுதியாக உருவெடுத்து, தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.தொடக்கத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்ததைத் தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது.
டிசம்பர் 1 ஆம் தேதி ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்தபோது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் காற்றின் வேகம் அதி- கம் ஆனதால் சாலைகள் மற்றும் மின் இணைப்புகள் கடுமையாக சேதமடைந்தன. தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட உள்மாவட்டங்களில் கனமழை காரணமாக மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தப் பேரிடரால் மொத்தம் 69 இலட்சம் குடும்பங்களும், 1.5 கோடி பேர்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வருத்தத்துடன் தனது கடிதத்தில் முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இந்தப் பேரழிவின் காரணமாக, 12 மனித உயிரிழப்புகளும், 2,416 குடிசைகள், 721 வீடுகள் மற்றும் 963 கால்நடைகள் இழப்புகளும் ஏற்பட்டுள்ளதோடு,2,11,139 ஹெக்டேர் பரப்பளவிற்கு விவசாய மற்றும் தோட்டக்கலை நிலங்கள்வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
புயல் வெள்ளத்தினால் 9,576 கி.மீ சாலைகள், 1,847 சிறுபாலங்கள் மற்றும் 417 குளங்கள் சேதமடைந்துள்ளதாகவும், 1,649 கி.மீ அளவிற்கு மின் கடத்திகள், 23,664 மின்கம்பங்கள் மற்றும் 997 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளதாகவும், 1,650 பஞ்சாயத்து கட்டிடங்கள் 4,269 அங்கன்வாடி மையங்கள், 205 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 5,936 பள்ளிக் கட்டடங்கள், 381 சமுதாயக் கூடங்கள் மற்றும் 623 குடிநீர் வழங்கல் பணிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
இந்தச் சேதங்கள் குறித்து, தமிழ்நாடு அரசு முதற்கட்ட மதிப்பீட்டை மேற்கொண்டு, தற்காலிக சீரமைப்பு பணிகளுக்கு ரூ.2,475 கோடி தேவைப்படுகிறது என முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இதில் முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடியை வழங்க வேண்டும் என்று கோரி இருக்கிறார்கள்.
மக்கள் எதிர்கொண்ட பேரிடரை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணருமா எனத் தெரியவில்லை. கடந்த ஆண்டில் இரண்டு முறை புயல்கள் தாக்கி, கடும் இயற்கைப் பேரிடர்களை தமிழ்நாடு சந்தித்தது. இவற்றுக்கான நிவார- ணமாக, 37 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டோம். ஆனால் ஆண்டுதோறும் வழக்கமாக வழங்கப்பட வேண்டிய ரூ.276 கோடி நிதியை அளித்துவிட்டு, ஏமாற்றி விட்டார்கள்.
தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, டெல்லி சென்று கடந்த ஜூன் 22 ஆம் தேதி நடைபெற்ற நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். "இரண்டு இயற்கை பேரிடர்களை தமிழ்நாடு சந்தித்தது. இதற்கான நிவாரண நிதியாக ரூ.37,906 கோடியைக் கேட்டிருந்தோம். ஆனால் ரூ.276 கோடியைத் தான் இதுவரை கொடுத்துள்ளீர்கள். இது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதியாகும்” என்று குற்றம் சாட்டினார். இதற்கு ஒன்றிய அரசிடம் இருந்து எந்த பதிலும் இதுவரை இல்லை.
ஆந்திர தலைநகர் அமராவதி மேம்பாட்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி. பீகாரில் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ரூ.26 ஆயிரம் கோடி, பீகார் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ.11,500 கோடி ஒதுக்கினார்கள். ஒன்றிய நிதி நிலை அறிக்கையில். அந்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கக் கூடாது என்று சொல்லவில்லை.
தமிழ்நாட்டுக்கு ஏன் ஒதுக்கவில்லை என்றுதான் கேட்கிறோம். ஆந்திராவும், பீகாரும் ஒன்றிய அரசைக் காப்பாற்றும் மாநிலங்கள் என்பதை அறியாதவர்கள் அல்ல நாம். தமிழ்நாட்டில்தான் பா.ஜ.க.வைக் காப்பாற்ற யாராவது இலவச ஆக்ஸிஜன் தர வேண்டும் என்பதும் நம்மை விட பா.ஜ.க. தலைமைக்கு நன்கு தெரியும்.
அதனால்தான் தமிழ்நாட்டை ஒதுக்கியே, தீண்டாத மாநிலமாக வைத்துள்ளார்கள். இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இன்று வளர்ந்து நிற்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.87 விழுக்காடு என்ற அளவில் தமிழ்நாடு பங்களிப்பினை வழங்குகிறது. ஆனாலும் ஒன்றிய அரசை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில்தான் வைத்துள்ளார்கள்.
“ஒன்றிய அரசால் பகிர்ந்தளிக்கப்படும் நிதியிலிருந்து குறைந்தபட்சமாக 50 சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். வரி அல்லாத வருவாய்களையும் பகிர்ந்தளிக்கப்படும் நிதிகளின் தொகுப்பில் இணைப்பதற்கு உரிய அரசமைப்புச் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். மாநில அரசின் பட்டியலில் இடம்பெற்றுள்ள இனங்களின் கீழ் நிறைவேற்றப்படும் நலத்திட்டங்களுக்கு 75 சதவீத பங்களிப்பை ஒன்றிய அரசு வழங்க வேண்டும். மாநில பேரிடர் மேலாண்மை நிதியினை 2026 - 27 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 50 சதவீதமாக உயர்த்தி, 90 :10 என்ற அளவில் ஒன்றிய - மாநில நிதிப் பங்கீட்டில் வழங்க வேண்டும்” என்ற கோரிக்கைகளை 16 ஆவது நிதிக்குழுவிடம் தமிழ்நாடு அரசு வைத்துள்ளது.
ஒவ்வொரு இயற்கை பேரிடர் வரும் போதும் ஒன்றிய அரசாங்கத்தின்செயற்கைப் பேரிடர்தான் நம் நினைவுக்கு வந்து நிலைகுலைய வைக்கிறது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!