murasoli thalayangam

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கென தொண்டாற்றும் திராவிட மாடல்! : முரசொலி தலையங்கம்!

விளிம்புநிலை மக்களுக்கான ஆட்சியாக 'திராவிட மாடல்' ஆட்சியை நடத்தி வருகிறார் முதலமைச்சர். அனைவருக்குமான அரசு என்பதன் உள்ளடக்கத்தில் அனைத்து மக்களும் இருக்கிறார்கள் என்பதை தனது ஒவ்வொரு திட்டங்களின் மூலமாகவும் மெய்ப்பித்துக் காட்டிவருகிறார் முதலமைச்சர் அவர்கள்.

கடந்த 25 ஆம் தேதியன்று சென்னை, சோழிங்கநல்லூர், கண்ணகி நகரில், மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் / மனம் சம்பந்தப்பட்ட மறுவாழ்வு சேவைகள் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை திறந்து வைத்துள்ளார்கள் முதலமைச்சர் அவர்கள். இது யாருக்கான அரசு என்பதன் அடையாளம்தான் 'விழுதுகள்' மையம் ஆகும்.

மாற்றுத்திறனாளிகள் என்ற சொல்லை உருவாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அவரது ஆட்சிக் காலத்தில் தான் அந்த விளிம்பு நிலை மக்கள் அடையாளம் காணப்பட்டார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது ஆட்சியில் முழு வாழ்க்கையை நோக்கி அவர்கள் நகர்த்தப்பட்டு வருகிறார்கள். மாற்றுத்திறனாளிகள் நலனுக்கென 2021-2022 ஆம் நிதியாண்டில் ரூ.813.63 கோடி அளவில் நிதி ஒதுக்கீடு செய்து சிறப்பாக பல திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தினார் முதலமைச்சர் அவர்கள்.

2022-23 நிதியாண்டில் ரூ.838.01 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டங்களைத் தீட்டினார்கள். பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் காத்திருப்போர் பட்டியலில் உள்ள அனைவருக்கும் ரூ.1500 மாதம் வழங்க உத்தரவிட்டார்கள். மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டம் உலக வங்கி உதவியுடன் 6 ஆண்டு காலத்திற்கு ரூ.1702.00 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

« மூன்று சக்கர மிதிவண்டிகள், சக்கர நாற்காலிகள், காதுகளுக்கு பின்புறம் அணியும் காதொலிக்கருவிகள், மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள், பேட்டரி பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகள் ஆகிய 5 வகை உபகரணங்களின் 36 மாதிரிகளில் 7,219 உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

« நகரப் பேருந்துகளில் (White Board Bus) மாற்றுத் திறனாளிகள் துணையாளர் ஒருவருடன் கட்டணமில்லாமல் சென்று வர அரசு ஆணை வெளியிடப்பட்டது. UDD Card வழங்குவதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு 9 லட்சத்து 30 ஆயிரத்து 909 பயனாளிகள் பதிவு செய்யப்பட்டு இதுவரை 5 லட்சத்து 68 ஆயிரத்து 67 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இடஒதுக்கீட்டில் அரசு மற்றும் தனியார் துறைகளிலும் வேலை வாய்ப்பு வழங்கவும், பொதுக் கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற தடையற்ற சூழல்களை அமைக்க சமவாய்ப்பு கொள்கை "(Equal Opportunity Policy) அனைத்து தனியார் தொழிற்கூடங்கள் மற்றும் நிறுவனங்களில் நடைமுறைப்படுத்திட வலியுறுத்தப்பட்டுள்ளது.

« அரசு துறை கட்டிடங்களில் முக்கியமாக வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறைக்குச் சொந்தமான 790 கட்டடங்களில் ரூ.4.74 கோடி செலவிலும், 200 சுற்றுலா இடங்களில் ரூ.1.20 கோடி செலவில் தடையற்ற சுழல் அமைக்க தணிக்கை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

« அரசு வேலைவாய்ப்புகளில் Group A மற்றும் Group B பிரிவுகளில் 559 பணியிடங்கள் கண்டறியப்பட்டு, 1096 பின்னடைவு காலி பணியிடங்களை தனி சிறப்பு நேர்வாக (Special Drive) தமிழ்நாடு பணியாளர் தேர்வுவாரியம் (TNPSC) ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மாநில ஆட்சேர்ப்பு பணியகம் (SRB) மாவட்ட ஆட்சேர்ப்பு பணியகம் (DRB) மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலமாக நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

« கடுமையான இயலாமை - கடுமையான அறிவுசார் குறைபாடு - தசைச்சிதைவு மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்பு உதவித்தொகையாக வழங்கப்பட்டு வந்த ரூ. 1,500/- லிருந்து ரூ.2,000/- ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. செவித்திறன் குறைபாடுடைய மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர்கல்வியில் பி.காம். பி.சி.ஏ. பாடங்கள் பட்டங்- கள் படிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

« மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் புரிய கடன் உதவி வழங்கும் திட்டத்தினை அறிவுசார் குறைபாடுடையோர், புறஉலக சிந்தனையற்றோர், தசைச்சிதைவு நோயினால், பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோருக்கும் நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

« மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் திருமண நிதியுதவி திட்டத்தின் மூலம் தற்போது வழங்கப்பட்டு வரும் நிதி உதவியினை பாதித்தொகை ரொக்கமாகவும், மீதமுள்ள தொகையினை தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கும் முறையினை மாற்றி முழுத்தொகையும் ரொக்கமாக வழங்கப்படும் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.

« மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிந்து வாழ்வில் முன்னேறுவதற்கு, தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இதற்கு தற்போது உள்ள வயது உச்ச வரம்பினை 45 லிருந்து 60 ஆக நீட்டித்து உள்ளோம்.

« அரசுப் பள்ளி விடுதிகளில் தங்கிப் பயிலும் 1053 மாணாக்கர்களுக்கு தன் சுத்தம், உடல்நலம் பராமரிப்பதற்காக வழங்கும் சோப்பு, தேங்காய் எண்- ணெய் வழங்குவதற்கான இதர செலவீனம் ரூ.30/-லிருந்து ரூ.50/- ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

« பொது கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாகப் பயன்படுத்தப்படும் வகையில் தடைகளற்ற சூழலை ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு நிறுவனம், தனியார் நிறுவனத்திற்கு ரூ.1.60 இலட்சம் செலவில் 2 மாநில விருதுகள் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

« மாற்றுத்திறனாளிகள் மெரினா கடற்கரையில் கடலுக்கு அருகில் சென்று கடலைக் கண்டு ரசிக்கும் வகையிலான சிறப்பு நடைபாதையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களது முயற்சியால் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாகத்தான் 'விழுதுகள்' மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அமையப் பெறவுள்ள 273 ஒருங்கிணைந்த சேவை மையங்களில் முதலாவது மையமாக சென்னை, சோழிங்கநல்லூர், கண்ணகி நகரில் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்பட இருக்கின்றன. முதலமைச்சர் அவர்களின் கருணை வழிப்பாதையில் அரசு செயல்பட்டு வருகிறது.

Also Read: “நீங்கள் எனக்கு அளிக்கப்போகும் மிகப்பெரிய பிறந்தநாள் இதுதான்...” - துணை முதலமைச்சர் உதயநிதி வேண்டுகோள்!