murasoli thalayangam

“பொய் மூட்டைகளின் களஞ்சியமாக இருக்கிறது மோடியின் உரைகள்” : நெறி தவறிய பிரதமருக்கு முரசொலி கடும் கண்டனம்!

நெறி தவறிய - விதி மீறிய உரைகள்

மோடியின் உரைகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகும் என்று தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. தேர்தல் தொடங்கியது முதல் நெறி தவறி, முறை தவறித்தான் பிரதமர் மோடி பேசி வருகிறார். அவரது உரைகள் அனைத்தும் விதிமீறிய உரைகள்தான். சொந்தமாகச் சொல்லிக் கொள்ள எந்தச் சாதனைகளும் இல்லாததால் அவதூறுகளின் மூலமாக தேர்தல் களத்தை திசை திருப்பி வருகிறார் பிரதமர் மோடி. தமிழ்நாட்டிலும் அதே அவதூறுகளைத்தான் செய்தார். தமிழ்நாடு அரசுக்கு நிதி ஒதுக்கவில்லை என்கிறார்கள். நான் நேரடியாக மக்களுக்குக் கொடுத்துவிட்டேன் என்று பச்சைப் பொய்யைச் சொன்னார்.

* என்னுடைய சாதனைகளை அச்சிடவிடாமல் நாளிதழ்களைத் தமிழகத்தில் உள்ள தி.மு.க. அரசு தடுக்கிறது. மக்களிடம் சென்று அடையாமல் தொலைக்காட்சிகளையும் தமிழக அரசு கட்டுப்படுத்துகிறது - அவரது உரைகள் அனைத்து நாளிதழ்களிலும் பக்கம் பக்கமாக வெளியாகத்தான் - என்று அடுத்த அவதூறை அள்ளி வீசினார். செய்தது. அவரது அனைத்துப் பொதுக்கூட்டங்களையும் தமிழ்த் தொலைக்காட்சிகள் நேரலை செய்யத்தான் செய்தன. யாரைத் தடுத்தார்கள்? ஏதோ தனக்கு எதிராக ஏதோ சதி நடப்பதைப் போல அவரே தன்னைப் பெரிதாக நினைத்துக் கொண்டார். செங்கோல் வைத்தேன். அதனை இவர்கள் வாழ்த்தவில்லை என்றார். ராமர் கோவிலுக்கு வரவில்லை என்றார்.

* ஜெயலலிதாவை சட்டசபையில் தி.மு.க. அவமானப்படுத்தியது என்றார். சட்டமன்றத்தில் நடந்தவை குறித்து தவறான தகவலை பொதுவெளியில் மோடி பேசியதே அவை உரிமை மீறல் ஆகாதா? அப்படி நடந்ததற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? ஜெயலலிதாவே நடத்திய நாடகம் என்பதை அப்போது அவருடன் இருந்த திருநாவுக்கரசர், தமிழ்நாடு சட்டமன்றத்தில் பதிவு செய்திருக்கிறாரே? தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்பட தி.மு.க.வும் காங்கிரசும்தான் காரணம் என்றார். 2019ஆம் ஆண்டு பேசும் போது ஜெயலலிதாவும் சோனியாவும்தான் காரணம் என்றார்.

* தேர்தலுக்குத் தேர்தல் ஆட்கள் பெயரை மாற்றிக் கொண்டு தப்பாட்டம் ஆடுவது மோடியின் வழக்கம். 'தி.மு.க.வை இனி பார்க்க முடியாது. இனி தி.மு.க. எங்குத் தேடினாலும் கிடைக்காது' -- என்று மிரட்டினார். அப்புறம் பாண்டி பஜாரில் சில நூறு பேர்களுக்கு 'ரோட் ஷோ' காட்டிவிட்டு களைத்துப் போன மோடி, இதே அவதூறுகளை வட மாநிலங்களில் தொடங்கி விட்டார்.

ராமருக்குக் கோவில் கட்டினேன் என்பதைத் தாண்டிய சாதனை எதுவும் இல்லை. அனுமர் பாட்டுப் பாட நாட்டில் அனுமதி இல்லை என்கிறார். எந்த நாட்டில் அனுமதிக்கப்படவில்லை என்பதைச் சொல்லவில்லை. இந்த நாட்டை ஆள்வது அவர்தான். எங்கே அனுமர் பாட்டைப் பாட அனுமதி மறுத்தார்கள்?

* 'என்னை வீழ்த்துவதற்கு அந்நிய நாடுகள் சதி செய்கின்றன' -- இது வட மாநிலங்களில் செய்த பூச்சாண்டித் தனம். இவரை எதற்காக உலக நாடுகள் வீழ்த்த வேண்டும்? அனைத்து நாடுகளின் அதிபர்களுக்கும் மோடி நண்பர் தானே? போகாத நாடு உண்டா? உலகப் பிரச்சினையைத் தீர்க்க இவரைத்தான் அணுகுகிறார்கள் என்று 'பா.ஜ.க. வாட்ஸ் அப் யுனிவர்சிட்டி' பால பாடம் சொல்லுமே? அந்நியச் சதி பீதி எடுபடவில்லை என்றதும், அடுத்து இசுலாமியர் வெறுப்பு அரசியல் கை கொடுக்குமா எனப் பார்க்கிறார்.

* “காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று சொன்னார்கள். உங்களிடம் உள்ள தங்கம் உள்ளிட்ட சொத்துக்களைப் பறித்து அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களிடம் கொடுத்து விடுவார்கள். சட்டவிரோதமாக நாட்டிற்குள் ஊடுருவியவர்களிடம் உங்கள் சொத்துக்களைக் கொடுத்து விடுவார்கள்.

* நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை அவர்களிடம் கொடுக்க வேண்டுமா? இதை நீங்கள் ஏற்பீர்களா? இதைச் செய்வோம் என்றுதான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறார்கள். தாய்மார்கள், சகோதரிகளின் தங்க நகை களைக் கணக்கெடுத்து அவற்றை உங்களிடமிருந்து பறித்து அவர்களிடம் கொடுத்துவிடுவார்கள். மன்மோகன் சிங் என்ன சொன்னார் தெரியுமா?

* நாட்டின் சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கு முதல் அதிகாரம் எனக் கூறினார். சகோதர சகோதரிகளே, இதுதான் நகர்ப்புற நக்சல்கள் சிந்தனை. என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியைப் பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை” -- இது அடுத்த எபிசோட். இதுதான் இறுதி எபிசோட்.

எல்லாச் சொத்துகளையும் இசுலாமியர்களுக்கு கொடுத்துவிடப் போகிறார்கள் என்கிறார். அப்படி யாருமே சொல்லவில்லை.

பட்டியலின, பழங்குடியின மக்களது இடஒதுக்கீடுகள் காங்கிரஸ் ஆட்சியில் இசுலாமியர்க்குப் போய்விடும் என்கிறார். அப்படி யார் சொன்னது?

இப்படி முழுக்க முழுக்க பொய் மூட்டைகளின் களஞ்சியமாக இருக்கிறது பிரதமர் மோடியின் உரைகள். இவ்வளவு அவதூறுகளான உரைகளை ஆற்றிய இந்தியப் பிரதமர்கள் இதுவரை இல்லை. வாட்ஸ் அப் மெசேஜ்களை உரைகளாக ஆக்கி வாசிப்பதன் மூலமாக, சரக்கு இல்லாத சக்கை சர்க்காரை அவர் இந்த பத்தாண்டு காலம் கொடுத்திருப்பதே திரும்பத் திரும்ப மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது.

- முரசொலி தலையங்கம்

Also Read: மோடிக்கு லைசென்ஸ் கொடுத்துவிட்டு மவுனித்து விட்டது தேர்தல் ஆணையம் - காட்டமாக விமர்சித்த முரசொலி !