murasoli thalayangam

மோடியின் கள்ள மவுனம்! : எல்லைகள் தாரைவார்க்கப்படுவது குறித்து விளக்கிய முரசொலி!

முரசொலி தலையங்கம் (6.4.2024)

சீனாவை அடக்க முடியாத பலவீனமான பிரதமர் மோடி!


கடந்த மாதம் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் மோடி வந்தபோது அமைச்சர் பெயரில் வெளியான நாளிதழ் விளம்பரத்தில், ராக்கெட் படத்தில் சீன நாட்டுக் கொடி தவறுதலாக இடம்பெற்றிருந்தது. ‘தெரியாமல் நடந்த தவறு’ என்று அமைச்சர் விளக்கம் அளித்தார்.

ஆனால், பிரதமர் மோடியோ, “விளம்பரத்தில் சீன நாட்டின் கொடியுடன் கூடிய ராக்கெட் படத்தைப் போட்டிருக்கிறார்கள். தி.மு.க.வின் நாட்டுப்பற்றைப் பார்த்தீர்களா?’’ என கேள்வி எழுப்பினார்.

ஆனால் இன்றைக்கு அருணாச்சலப் பிரதேசத்தில் 30 இடங்களுக்கு சீன மொழியில் பெயர்களையே வைத்து விட்டது சீனா!

தவறுதலாக வந்த விளம்பரத்திற்குச் சீற்றம் கொண்ட மோடி, பெயர் வைத்த விவகாரத்தைக் கண்டிக்காமல் ஏன் கள்ள மெளனத்தில் இருக்கிறார்? 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கச்சத்தீவுக்கு கர்ஜிக்கிறார்.

நேற்றைக்கு நடந்த சீன ஆக்கிரமிப்புக்கு ஒரு மறுப்புத் தலையாட்டல் கூட இல்லையே! எதனால்?
அருணாச்சலப் பிரதேசத்தின் பகுதிகளுக்குச் சொந்தம் கொண்டாடி பெயர்களைச் சூட்டுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறது சீனா.

2017 ஆம் ஆண்டு 6 பகுதிகளுக்குப் பெயர் வைத்தது சீனா.
2021 ஆம் ஆண்டு 15 பகுதிகளுக்குப் பெயர் வைத்தது சீனா.
2023 ஆம் ஆண்டு 11 பகுதிகளுக்குப் பெயர் வைத்தது சீனா.
2024 ஆம் ஆண்டான இப்போது 30 பகுதிகளுக்குப் பெயர் வைத்துள்ளது சீனா.

கடந்த ஆண்டு இதே ஏப்ரல் 1 ஆம் நாளில்தான் அருணாச்சலப் பிரதேசத்தின் 11 பகுதிகளுக்கு பெயர்களைச் சூட்டியது சீனா. இந்தாண்டு அதே ஏப்ரல் 1ஆம் நாளில்தான் 30 இடங்களுக்குப் பெயர்களை வைத்திருக்கிறது. ஏப்ரல் மாதம் என்றாலே சீனாவுக்கு ‘பெயர் சூட்டும் மாதமாக’ மாறிவிட்டது.

தொடர்ந்து அருணாச்சலப் பிரதேசத்தை சொந்தம் கொண்டாடி வருகிற சீனா, அருணாச்சலப் பிரதேசத்துக்கு வைத்துள்ள பெயர் ‘ஷாங்னான்’ என்பது ஆகும். தெற்கு திபெத்தின் ஒரு பகுதி இது என்றும், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது.

2017 முதல் இதுவரை நான்கு முறை அருணாச்சலப் பிரதேசப் பகுதிகளுக்கு சீனா பெயர் வைத்துள்ளது. இப்போது வெளியாகி இருப்பது சீனாவின் நான்காவது பெயர்ப் பட்டியல் ஆகும். சீன வெளியுறவுத் துறை அமைச்சகத் தளத்தில் இப்பெயர்கள் வெளியாகி உள்ளன.

“சீனாவின் பகுதிகளுக்கு உரிமைகள் கோருதல் மற்றும் இறையாண்மை உரிமைகளுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்தில் அந்நிய நாட்டு மொழிகளில் உள்ள இடங்களின் பெயர்கள் நேரடியாக மேற்கோள் காட்டப்படவோ அல்லது அங்கீகாரமின்றி மொழிபெயர்க்கப்படவோ கூடாது” என்பது சீனாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் 13 ஆவது பிரிவாம்.

அந்தப் பிரிவின்படி இந்தப் பெயர் மாற்றத்தை அந்த நாடு செய்கிறதாம். மே 1 முதல் இந்தப் பெயர்கள் நடைமுறைக்கு வருமாம். இதைத் தடுக்க வேண்டிய கண்டிக்க வேண்டிய கடமை ஒன்றிய அரசுக்கு உண்டு.

உலகம் முழுவதும் போற்றப்படும் உலகப் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பதற்காக அழைக்கப்படும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இது பற்றி ஏதாவது வாய் திறந்தாரா? இல்லை.

50 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள கச்சத்தீவுப் பிரச்சினையை இப்போது எழுப்பி முன்னாள் பிரதமர்கள் நேருவையும் இந்திராவையும் சண்டைக்கு இழுத்துக் கொண்டிருக்கிறார் மோடி. மரணமடைந்தவர்களோடு மல்லுக்கு நிற்பதுதான் அவரது பாணியாக இருக்கிறது. பாவம், நேருவும், இந்திராவும்!அவர்கள் மட்டுமல்ல; இந்திய நாட்டு மக்களும்தான்!

‘அண்டை நாடுகளுக்கு இந்தியாவைப் பற்றிய பயமே இல்லை. ஏனென்றால் இந்தியாவில் தைரியமான பிரதமர் இல்லை’ என்று கிண்டல் அடித்தார் மோடி. தைரியமானவராக நம்பி இவரை பிரதமர் ஆக்கினார்கள். இந்த தைரியமானவர் ஆட்சியில்தான், இந்தியாவின் ஒரு மாநிலத்தையே தனது வரைபடத்தில் சேர்க்கிறது சீனா. அப்போதும் தைரியமானவர் ஏதும் சொல்லவில்லை. ரௌத்திரம் வரவில்லை.

கச்சத்தீவு புரஃபஸர் ஜெய்சங்கர் என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா? ‘உங்கள் வீட்டுக்கு நான் பெயரை மாற்றுவதன் மூலம், அது எனக்குச் சொந்தமாகி விடுமா? இந்த மாநில இடங்களுக்குப் பெயரை மாற்றுவதன் மூலம் எதுவும் நடந்துவிடாது’ என்று சொல்லி இருக்கிறார்.

இதெல்லாம் சிதம்பரத்திலும் சிவகங்கையிலும் இருப்பவர்கள் சொல்ல வேண்டிய ‘டயலாக்.’ வெளியுறவுத்துறை அமைச்சர் சொல்லலாமா?

பெயர் சூட்டுவதால் அருணாச்சலப் பிரதேசம், சீனாவின் பகுதியாக ஆகிவிடாது. இது நமக்கும் தெரியும், சீனாவுக்கும் தெரியும். பெயர் சூட்டும் தைரியம் எதனால் வருகிறது? பலவீனமான பிரதமர் என்பதால்தானே!

Also Read: “பாஜக நாட்டிற்கு கேடு - ஒரே... ஒரே... என்று ஒரேயடியாக நாட்டை நாசமாக்கிவிடுவார்கள்”: முதலமைச்சர் முழு உரை!