murasoli thalayangam

“ஊழல், ஊழலோடுதானே சேரும்” - பாஜகவில் இணைந்த ‘நிலக்கரி’ ஜிண்டாலும் ‘சுரங்கம்’ ஜனார்த்தனனும்! - முரசொலி !

‘நிலக்கரி' ஜிண்டாலும் ‘சுரங்கம்' ஜனார்த்தனனும்

ஊழலை ஒழிக்கப் போகிறேன், ஊழலை ஒழிக்கப் போகிறேன் என்று பிதற்றிக் கொண்டிருக்கும் பிரதமர் மோடி அவர்கள், இரண்டு பேருக்கு பா.ஜ.க.வில் தொகுதி ஒதுக்கி இருக்கிறார். அவரது ஊழல் ஒழிப்பு என்பது பா.ஜ.க.-வுக்குள் அவர்களைச் சேர்த்துவிட்டால் முடிவுக்கு வந்துவிடும் என்பதற்கான உதாரணம் ஆகும்.

"ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பார்கள். பா.ஜ.க. பெரிய பானை என்பதால் இரண்டு சோறு பதம். மிகப்பெரிய மலை முழுங்கிகள் என்ற அடிப்படையில் நடவடிக்கைகளுக்கு உள்ளாகி விசாரணை அமைப்புகளால் வழக்குத் தொடுத்தும் - கைது செய்யப்பட்டும் இருந்தவர்களை கூச்சமில்லாமல் பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டுதான் ஊழலை ஒழிக்கப் போகிறார் மோடி. இதை இந்த நாட்டு மக்கள் நம்பத்தான் வேண்டும்.

இப்போது விசாரணை அமைப்புகளை வைத்துக் கொண்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், முதலமைச்சர் என்றுகூட பார்க்காமல் அரவிந்த் கெஜ்ரிவாலை வேட்டையாடுகிறார்களே, இவர்களால் இதற்கு முன்னால் வேட்டையாடப் பட்டவர்களை வெட்கமில்லாமல் சேர்த்துக் கொண்டு தொகுதியும் ஒதுக்குகிறார்களே, இவர்கள்தான் ஊழலை ஒழிக்கப் போகிறார்களா?

ஜிண்டால் பற்றி அறிமுகம் தேவையில்லை. இந்தியாவின் புகழ்பெற்ற தொழில் நிறுவனங்களில் ஒன்று ஜிண்டால். அதன் அதிபர்தான் நவீன் ஜிண்டால். இவர் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தார். அவரை பா.ஜ.க.வுக்கு இழுத்துக் கொண்டு அவருக்கு தொகுதியும் ஒதுக்கி இருக்கிறார்கள். 2004 ஆம் ஆண்டு அரியானா மாநிலம் குருஷேத்ரா தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சி எம்.பி.யாக வென்றவர் நவீன் ஜிண்டால். 2009 தேர்தலிலும் அவர் வென்றார். 2014 தேர்தலில் தோல்வி அடைந்தார். இவர் திடீரென்று இந்த மாதம் பா.ஜ.க. வில் சேர்ந்துவிட்டார். 'பா.ஜ.க.வுக்கு பெரிய வாஷிங் மிஷின் தேவைப்பட்டதால் நவீன் தேவைப்படலாம்' என்று கிண்டலடித்துள்ளார் ஜெயராம் ரமேஷ். நவீன் ஜிண்டாலை மீண்டும் அவரது வழக்கமான தொகுதியான குருஷேத்ராவில் நிறுத்தி உள்ளது பா.ஜ.க.

ஜிண்டால்

ஜார்க்கண்ட் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வழக்கில், ஜிண்டால் மத்திய புலனாய்வுப் பிரிவால் விசாரிக்கப்பட்டு வந்தார். 2919 ஆம் ஆண்டு நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் நவீன் ஜிண்டால் மற்றும் நான்கு பேர் மீது ஜூலை 25-ஆம் தேதி புது தில்லி நீதிமன்றம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. ஐ.பி.சி. பிரிவுகள் 120-பி (குற்றச் சதி) மற்றும் 420 (ஏமாற்றுதல்) ஆகியவற்றின் கீழ் சிறப்பு நீதிபதி பாரத் பராஷர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். நிலக்கரியின் இறுதிப் பயன்பாடு தொடர்பான உண்மைகளை ஸ்க்ரீனிங் கமிட்டியிடம் தவறாகக் காட்டி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த ஒப்பந்தத்தை கையகப்படுத்தியதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியது. குற்றம் சாட்டப்பட்டவர் நிலக்கரி அமைச்சகத்தை ஏமாற்றிவிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டார்.

எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களை பா.ஜனதா தனது கட்சியில் இணைத்துக் கொள்ளும்போது அவர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து வாய் திறப்பதில்லை அல்லவா? அப்படித்தான் இவரும் சுத்தமாகி விட்டார்.

‘இரும்புத் தாது' மாஃபியா என்று அழைக்கப்பட்டவர் ஜனார்த்தன ரெட்டி. பா.ஜ.க.வின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்த - மறைந்த சுஷ்மா சுவராஜ்தான் ரெட்டி சகோதரர்களுக்கு காப்பாளர். சுஷ்மா, பெல்லாரி தொகுதியில் போட்டியிட்டபோது முழுமையாக தேர்தல் பணியாற்றியவர்கள் இவர்கள். கர்நாடகாவில் பா.ஜ.க. காலூன்ற அடித்தளம் இட்டவர்களில் முக்கியமானவர்கள் ஜனார்த்தனன். 2006 ஆம் ஆண்டு பி.ஜே.பி. - ஜே.டி.எஸ். கூட்டணி ஆட்சி அமைந்தபோது தனது ஆதரவாளரான பி.ஸ்ரீராமுலுவை அமைச்சர் ஆக்கும் அளவுக்கு இவர்களுக்கு செல்வாக்கு வளர்ந்தது. ஜனார்த்தனன் ரெட்டிக்கு மேலவை உறுப்பினர் பதவியை வழங்கியது பா.ஜ.க.

ஜனார்த்தனன்

பின்னர் கூட்டணி இல்லாமல், தனித்து பா.ஜ.க. ஆட்சி அமைக்கவும் ரெட்டி சகோதரர்களே பெரும் பங்கு ஆற்றினார்கள். இதற்கான பரிசாக எடியூரப்பா அமைச்சரவையில் சுற்றுலா மற்றும் உள்ளாட்சி அமைச்சராக ஆனார் ஜனார்த்தனன் ரெட்டி. பெல்லாரி மாவட்டத்தின் பொறுப்பாளராகவும் ஆக்கினார்கள். 2022 ஆம் ஆண்டு பா.ஜ.க.வில் இருந்து வெளியேறி 'கல்யாண ராஜ்ய பிரகதிபஷா' என்ற புதிய அரசியல் கட்சியை ரெட்டி தொடங்கினார். கடந்த ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் கங்காவதி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

இப்போது அந்தக் கட்சியைக் கலைத்துவிட்டு பா.ஜ.க.வில் இணைந்து விட்டார். கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்த 2008-2013 காலக்கட்டத்தில் சட்டவிரோதச் சுரங்கம் தொடர்பாக சி.பி.ஐ. தொடுத்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் தான் ஜனார்த்தன் ரெட்டி. தன்னை அமித்ஷாதான் கட்சியில் இணையச் சொன்னதாக ரெட்டி சொல்லி இருக்கிறார்.

‘2006 முதல் 2011 வரை கர்நாடகாவில் இருந்து 12,228 கோடி ரூபாய்க்கு இரும்புத் தாதுவை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்தார்கள்’ என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. 2911--ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். கிட்டத்தட்ட ஓராண்டு காலம் சிறையில் இருந்த ரெட்டி, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பல்லாரி பகுதிக்குள் செல்ல தடையும் விதிக்கப்பட்டது. 2023 கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்காக ரெட்டி தாக்கல் செய்த தேர்தல் பிரமாண பத்திரத்தின் படி, அவர் மீது 20 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

20 வழக்குகளில், ஒன்பது வழக்குகள் சட்டவிரோத சுரங்க ஊழல் தொடர்பாக சி.பி.ஐ.-யால் விசாரிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு கூட இவர் மீதான வழக்கில் வெளிநாடுகளுக்குத் தகவல்கள் கேட்டு கடிதம் அனுப்பியது சி.பி.ஐ. இப்படிப்பட்டவர் பா.ஜ.க.வில் இணைய முழுத் தகுதி படைத்தவர்தான். 'பா.ஜ.க.வில் நான் இணைந்தது, தாயுடன் வந்து சேர்ந்ததைப் போல' என்று சொல்லி இருக்கிறார் ஜனார்த்தனன் ரெட்டி. ஊழல், ஊழலோடுதானே சேரும்!

Also Read: “ஆளத் தகுதியற்றவர்களால் பத்தாண்டுகளாக இந்தியா ஆளப்பட்டுள்ளது” - முரசொலி தாக்கு !