murasoli thalayangam

“கட்சியையும் ஆட்சியையும் களத்தில் இறக்கி மக்களைக் காத்த முதலமைச்சர்” : முரசொலி தலையங்கம் பாராட்டு !

இடுக்கண் களைந்த முதல்வர்

'மிக்ஜாம்' புயல் ஏற்படுத்திய பாதிப்பை இன்னும் முழுமையாக அளவிடவில்லை. ஒன்றிய அரசிடம் நாம் கேட்ட பணம், பத்தில் ஒரு பங்குதான் வந்துள்ளது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் உதவித் தொகையை அறிவித்து விட்டார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உதவி என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துள்ளார் வான்புகழ் வள்ளுவர்!

உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு – என்பதே அவரது குறள். இடுப்பில் கட்டப்பட்ட வேட்டி அவிழ்கிறது என்று தெரிந்ததும் கை எப்படி உடனே அந்த இடத்துக்குச் சென்று பிடிக்கிறதோ, அது போல துன்பம் அடைந்தவர்க்கு உடனடியாக உதவ வேண்டும் என்கிறார் பண்பாட்டின் இலக்கணம் வகுத்த வள்ளுவர். அத்தகைய கருணை மிக்கவராக மாண்புமிகு முதலமைச்சர் இருக்கிறார்கள். அதனால்தான் உடனடியாக உதவித் தொகைகளை அறிவித்துவிட்டார் முதலமைச்சர்.

புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படும் என்ற முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அனைவரும் மனம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

* மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இவை பாதிக்கப்பட்டவர் குடியிருக்கும் நியாய விலைக் கடைகளின் மூலம் பணமாக வழங்கப்படும்.

* உயிர் இழந்தவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும்.

* சேதம் அடைந்த குடிசைகளுக்கு ரூ.8 ஆயிரம் வழங்கப்படும்.

* பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17 ஆயிரம் வழங்கப்படும்.

* பல்லாண்டு பயிர்கள், மரங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.22

ஆயிரத்து 500 வழங்கப்படும்.

* மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8500 வழங்கப்படும்.

* எருது, பசு உயிரிழந்து இருந்தால் ரூ.37 ஆயிரத்து 500 வழங்கப்படும். ஆடு உயிரிழந்து இருந்தால் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்.

* கட்டுமரங்கள் முழுமையாக சேதம் அடைந்திருந்தால் ரூ.50 ஆயிரமும், பகுதி அளவு சேதம் அடைந்திருந்தால் ரூ.15 ஆயிரமும் வழங்கப்படும்.

* வல்லம் வகை படகுகளுக்கு ரூ.1 லட்சமும், இயந்திரப் படகுகளுக்கான இழப்பீடாக ரூ.7.50 லட்சமும், வலைகளுக்கு ரூ.15 ஆயிரமும் வழங்கப்படும்.

- என்று எந்தத் தரப்பும் விடுபடாமல் மறுவாழ்வுத் தொகை அறிவிப்பை முதலமைச்சர் செய்துள்ளார்கள்.

'மிக்ஜாம்' புயல் மழையினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி வளாகங்களை சுத்தம் செய்ய ஒரு கோடியே 90 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரிகளைச் சுத்தம் செய்ய ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதான் கருணை உணர்வு மிக்க அரசின் அடையாளம் ஆகும்.

பாதிப்பு நடந்து பல மாதங்கள் கழித்து உதவித் தொகைகள் அறிவிக்கப்பட்ட நிலைமைகளை எல்லாம் மாற்றி உடனடியாக அறிவித்தார் முதலமைச்சர் .

மக்களோடு மக்களாக களத்தில் இருந்தார் முதலமைச்சர் . பாதிக்கப்பட்ட பெரும்பாலான இடங்களுக்குச் சென்று பார்வையிட்டார். உதவிகளை வழங்கினார். மொத்த அமைச்சரவையும் சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில்தான் இருந்தது. அனைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் மக்களோடு இருந்து பணியாற்றினார்கள். அரசு இயந்திரம் இங்கேயே குவிக்கப்பட்டது. திரும்பிய பக்கம் எல்லாம் மீட்புப் படையினர் காணப்பட்டார்கள்.

மீட்புப் பணிகளுக்குத் தேவையான டீசல் மோட்டார் பம்புசெட்டுகளும், படகுகளும், ஜே.சி.பி. இயந்திரங்களும், மரம் அறுக்கும் கருவிகளும் தயார் நிலையில் எங்கு பார்த்தாலும் இருந்தது. மக்களை மீட்க 740 படகுகள் காத்திருந்தன. இதன் மூலமாக 26 ஆயிரம் பேர் மீட்கப்பட்டார்கள். 51 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. பிற மாவட்டங்களில் இருந்து பால் பாக்கெட்டுகள், ரொட்டிகள், தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கெட்டுகள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக வந்து சேர்ந்தது.

*20 அமைச்சர்கள்

* 50 ஐ.ஏ.எஸ்., -ஐ.பி.எஸ். அதிகாரிகள்

*4 ஆயிரம் மின் வாரியப் பணியாளர்கள்

* 2 ஆயிரம் மருத்துவப் பணியாளர்கள்

*25 ஆயிரம் தூய்மைப் பணியாளர்கள்.

*பல்லாயிரக்கணக்கான அரசு அதிகாரிகள்.

* பல்லாயிரக்கணக்கான காவலர்கள் - களத்தில் நின்று மக்களைக் காத்தார்கள். காத்து வருகிறார்கள். பேரிடர் காலத்தில் ஒரு அரசாங்கம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நிரூபித்துக் காட்டி விட்டார் முதலமைச்சர் . சென்னையில் கடந்த 9 ஆம் தேதி நிலவரப்படி 363 இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தது. மாநகராட்சி எடுத்த தொடர் நடவடிக்கைகள் காரணமாக 344 இடங்களில் தண்ணீர் அகற்றப்பட்டு விட்டது. 19 இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கி இருந்தது. 10 ஆம் தேதி நிலவரப்படி அந்த 19 இடங்களில்

15 இடங்களில் தண்ணீர் அகற்றப்பட்டு விட்டது. 4 இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கி இருந்தது. சென்னையில் மட்டும் காலையில் 23 ஆயிரம் ஊழியர்களும், இரவில் 19 ஆயிரம் ஊழியர்களும் வெள்ள பாதிப்பு நீக்கப்பணி களில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.

அனைத்து சுரங்கப்பாதைகளும் இரண்டு நாட்களில் மீட்கப்பட்டது. நான்கு நாட்களுக்குள் 98 விழுக்காடு இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. மறுநாளே போக்குவரத்து செயல்பட்டு விட்டது. அவசியமான உணவுப் பொருள் தட்டுப்பாடு உடனடியாகச் சரி செய்யப்பட்டது. அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், தி.மு.க. பொறுப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களது சொந்தப் பணத்தில் இருந்து மக்களுக்குத் தேவையான பொருட்களை வழங்கினார்கள். வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள். கட்சியையும் ஆட்சியையும் ஒரே நோக்கத்துடன் களத்தில் இறக்கி மக்களைக் காத்தார் முதலமைச்சர்.

"வரும் 16 ஆம் தேதி முதல் இதற்கான அங்கீகாரச் சீட்டு வழங்கப்படும். பத்து நாட்களுக்குள் முழுமையாகக் கொடுத்து முடித்துவிடுவோம்" என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்கள். "நாங்கள் 5 ஆயிரத்து 50 கோடி ரூபாயை ஒன்றிய அரசிடம் கேட்டுள்ளோம். ரூ.450 கோடியைத்தான் தந்துள்ளார்கள். இது கண்டிப்பாகப் போதாது" என்று சொல்லி இருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் . ஒன்றிய அரசு நிதி வழங்கும், கொடுத்த பிறகு கொடுக்கலாம் என்று காத்திருக்காமல் உதவிகளைத் தொடங்கிவிட்டார் முதலமைச்சர் . இதுவே நல்லாட்சியின் இலக்கணம். நல் முதலமைச்சரின் இலக்கணம் ஆகும்!

- முரசொலி தலையங்கம்!

Also Read: அதானிக்காக ஜனநாயகப் படுகொலையை பா.ஜ.க. பட்டவர்த்தனமாகவே நடத்துகிறது - முரசொலி விமர்சனம் !