murasoli thalayangam
வள்ளுவர் தொடங்கி.. சனாதனத்துக்கு எதிரான போராட்டத்தின் இன்றைய வடிவம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : முரசொலி!
முரசொலி தலையங்கம் (05-09-2023)
சனாதனமும் சனாதனிகளும்
சனாதனம் - என்பது என்ன? வேறுபாடும் - பாகுபாடும் காட்டுவதுதான் சனாதனம். உயர்ந்த ஜாதி – தாழ்ந்த ஜாதி என்ற பேதத்தை உருவாக்குவது சனாதனம். ஜாதியில் மட்டுமல்ல ஆண் உயர்ந்தவன் – பெண் தாழ்ந்தவள் என்ற பேதத்தை உருவாக்குவதுதான் சனாதனம்.
சனாதனிகள் - என்பவர்கள் யார்? இந்த பாகுபாட்டையும் வேற்றுமையையும் காப்பாற்றுபவர்கள். அவர்களது மொழியில் தாழ்ந்தவர்களாக அடையாளம் காட்டப்படுபவர்களையும் - பெண்களையும் முன்னேறவிடாமல் தடுப்பவர்கள்தான் சனாதனிகள். ஒட்டுமொத்த இந்துப் பெண்களையும், பெரும்பான்மை இந்து ஆண்களையும் இழிவுபடுத்தும் கொள்கைதான் சனாதனம். மனுஸ்மிருதியின் ஒவ்வொரு சூத்திரமும் இதனைத்தான் சொல்கிறது.
இத்தகைய சனாதனத்துக்கும் – சனாதனிகளுக்கும் எதிரான போராட்டம் தமிழ்ச் சமூகத்தில் பல்லாண்டுகளாக நடந்து வருகிறது. அதில் முதலாமவர் வான்புகழ் வள்ளுவர். அடுத்து வருகிறார் அருட்பிரகாச வள்ளலார். இதனை அரசியல் இயக்கமாக ஆக்கியவர் தந்தை பெரியார். இதுதான் இன்றுவரை ஒலித்துக் கொண்டு இருக்கிறது.
சங்க காலத்திலேயே துளிர் விட்டு - நிலப்பிரபுத்துவ காலத்தில் வேர் பதித்து - அன்னியப் படையெடுப்புகளால் ஆதிக்க சக்தியாகவே மாறி - காலனியக் காலத்திலும் அவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்தும் அச்சுறுத்தியும் பணிய வைத்து - விடுதலை பெற்ற இந்தியாவிலும் அந்தச் சிந்தனைகளை முழுக்க முழுக்க விதைத்து சனாதனமும் - சனாதனிகளும் தங்களது ஆட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள் என்பது உண்மைதான்.
இத்தகைய சனாதனத்தையும் - சனாதனிகளையும் தொடக்கக் காலத்தில் இருந்து அம்பலப்படுத்தியதில் பெரும் பங்கு வகித்தது திராவிட இயக்கம். அதனால்தான் திராவிட இயக்கத்தின் மீது அவர்களுக்கு அடங்காத கோபம். ‘சனாதன – வர்ணாசிரமத்தில்’ மட்டும் கை வைக்காமல் இருந்திருந்தால் மற்ற இயக்கத்துக்குள் ஊடுருவியதைப் போல திராவிட இயக்கத்துக்குள்ளும் அவர்கள் ஊடுருவி இருப்பார்கள். இயக்கத்தையே அழித்திருப்பார்கள். சிதைத்திருப்பார்கள்.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்கு ஆறறிவும் கடந்த பகுத்தறிவு இருந்தது. பட்டறிவு இருந்தது. அதனால்தான் இயக்கத்தின் நோக்கத்தைச் சரியாக வரையறுத்தார். மேல் கட்டுமானத்தை மாற்றினால் போதாது, அடிக்கட்டுமானத்தை சரியாக உருவாக்க வேண்டும் என்றார். அவரால் உருவாக்கப்பட்ட இயக்கத்துக்குள் ஆரிய சக்திகள் - சனாதன சக்திகளால் ஊடுருவ முடியவில்லை.
அரசியல் இயக்கம் கண்டாலும், ‘ஆரிய மாயை’ உணர்ந்தவராக பேரறிஞர் அண்ணா அவர்கள் இருந்தார்கள். ‘நான் மிக மிக மிக பிற்படுத்தப்பட்டவன், எத்தனை மிக மிக மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள்’ என்றார் தமிழினத் தலைவர் கலைஞர். ‘ஆரியத்தை வீழ்த்த வந்த திராவிடத்தின் வாரிசுகள் நாங்கள்’ என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்லி வருகிறார் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள். ‘சனாதனத்தை எதிர்க்க முடியாது, ஒழிக்கத்தான் முடியும்’ என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார் மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவர் வாக்கின் இன்றைய வடிவம்தான் மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் உரையாகும். ஈராயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வரும் போராட்டத்தின் இன்றைய வடிவம் இது.
‘ஒழித்தல்’ என்றால் சனாதன எண்ணங்களை ஒழித்தலே தவிர, சனாதனிகளை ஒழித்தல் ஆகாது. 100 ஆண்டுகளாக இயக்கம் நடத்திய பெரியார் அவர்கள் எந்தக் கோவிலையும் இடிக்கவில்லை. எந்த எதிரியையும் அழிக்கவில்லை. பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் எழுதியதற்காக - பேசியதற்காக கைது செய்யப்பட்டு சிறை இருந்திருக்கிறார்களே தவிர வன்முறைகளில் அல்ல. அது திராவிட இயக்கத்தின் பாணியும் அல்ல. கொள்கை வரலாறு உண்டே தவிர, கொலை வரலாறுகள் கிடையாது.
‘அழித்தொழித்தலின் வரலாறு’ சுதந்திர இந்தியாவில் மகாத்மா காந்தியில் தொடங்குகிறது. அதனைச் செய்தது யார்? ‘இனப்படுகொலையின் வரலாறு’ 2002 குஜராத்தில் நடந்தது. அதனைச் செய்தது யார்? மசூதியை கடப்பாரையைக் கொண்டு தகர்த்தது யார்? குடியுரிமைச் சட்டத்தின் நோக்கமும், பொது சிவில் சட்டத்தின் நோக்கமும் இனச் சுத்திகரிப்பு அல்லாமல் வேறென்ன?
“சனாதனக் கோட்பாட்டைத்தான் நான் விமர்சித்தேன். எதுவுமே மாறக்கூடாது என்று சனாதனிகள் சொல்கிறார்கள். எல்லார்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது நமது நோக்கம்” என்று மிகமிகச் சரியாக தீர்மானப் பதிலளித்து விட்டார் கொள்கை வாரிசான மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள். இதற்கு பதிலளிக்க நினைப்பவர்கள், சனாதனம் என்பது அனைவருக்கும் பொதுவானதுதான் என்று வாதிட்டால் வரவேற்கலாம். அது அவர்களால் முடியாது.
‘சனாதனத்தை’ வரிவரியாய் உரித்து தொங்க விட்டவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். ‘சமூக உரிமைச் சட்டங்களிலேயே மிகக் கொடூரமான சட்டமே மனுதான்’ என்றவர் அவர். “இந்த சதுர்வர்ண முறையை நான் அறவே வெறுக்கிறேன். எனது முழு இயற்கையும் அதை எதிர்த்து எழுகிறது. வெறும் உணர்ச்சியின் அடிப்படையில் மட்டும் நான் இதனை எதிர்க்கவில்லை. ஒரு சமூக அமைப்பு என்ற முறையில் சதுர்வர்ணம் நடைமுறை சாத்தியமற்றது. தீமை நிறைந்தது. இழிந்த தோல்வியை கண்டது. சதுர்வர்ண முறை என்பது மிகக் கொடூரமான முறையாகும்” என்றார் அண்ணல் அம்பேத்கர். எனவே சனாதனத்துக்கு பொய் புனுகு பூசி எடுத்து வர சனாதனிகள் முயற்சிக்கிறார்கள்.
பத்தாண்டு கால ஆட்சியில் சொல்லிக் கொள்வதற்கு எந்தச் சாதனையும் செய்யாத பா.ஜ.க., எதிர்க்கட்சிகள் சொல்லும் கருத்துகளில் இருந்து ஏதாவது ஒரு வார்த்தையை எடுத்து –திரித்து அதன் மூலமாக திசை திருப்பப் பார்க்கிறது. ‘சனாதனத்தை ஒழித்தல்’ என்பதை இன அழிப்பு என்று அவர்களாக - அவர்களது புத்திக்கு ஏற்ப திரித்துக் கொள்கிறார்கள்.
வோட்டு வாங்க பா.ஜ.க.விடம் சொல்வதற்கு எதுவும் இல்லை. அதனால் பொய்யை எடுத்து வருகிறார்கள். ‘பேச நா இரண்டுடையாய் போற்றி போற்றி’ என்று எழுதியவர் பேரறிஞர் அண்ணா!
Also Read
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
-
#சங்கி_பழனிசாமி : சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஷ்டாக்!