murasoli thalayangam
UPA ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு கிடைத்த ‘சிறப்பு திட்டங்கள்’ என்ன? - பட்டியலிட்டு பதிலடி கொடுத்த முரசொலி !
அமித்ஷாக்கள் அறிக! - 2
உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தமிழ்நாட்டுக்கு வருகை தருவதை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வைத்த கேள்வி என்பது, ''தமிழ்நாட்டுக்காக பா.ஜ.க. ஆட்சியில் கடந்த ஒன்பது ஆண்டு காலத்தில் செய்து தரப்பட்ட சிறப்புத் திட்டங்கள் என்னென்ன? அதனை உள்துறை அமைச்சர் அவர்கள் பட்டியலிடுவாரா?" என்று தான்!
வழக்கமாக ஒரு ஒன்றிய அரசாங்கம் - ஒரு மாநில அரசுக்கு வழக்கமாகச் செய்து தரும் திட்டப்பணி களையும், நடைமுறை நிதி ஒதுக்கீடுகளையும் பட்டியலிட்டு விட்டுப் போயிருக்கிறார் உள்துறை அமைச்சர் அவர்கள்.
சிறப்புத் திட்டங்கள் என முதலமைச்சர் அவர்கள் கேட்டது, தமிழ்நாட்டுக்காகச் செய்து தரப்பட்ட சிறப்புத் திட்டங்கள் எவை என்பது ஆகும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்பது தமிழ்நாட்டுக்கான சிறப்புத் திட்டம் ஆகும். அது நிறைவேற்றப்பட்டு இருக்குமானால் பா.ஜ.க.வை மனமாரப் பாராட்டலாம். ஆனால் அது அறிவிக்கப்பட்ட தோடு எட்டாண்டுகளாக அப்படியே கிடக்கிறது. அப்படி எந்தத் திட்டத்தையாவது தமிழ்நாட்டுக்கு சிறப்பாகக் கொண்டு வந்துள்ளார்களா என்பதே நம் முன் நிற்கும் கேள்வி ஆகும்.
மத்தியில் ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், தமிழ்நாட்டின் பங்கு அதிகமாக இருந்த காரணத்தால், தமிழகத்திற்கு வளம் சேர்க்கும் திட்டங்கள் நிறைய நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய அரசிடமிருந்து பல்வேறு திட்டங்களும் அதற்கான நிதியும் தமிழ்நாட்டிற்கு நோக்கிக் குவிய ஆரம்பித்தன.
இந்தியா வளர்ச்சிப்பாதையில் செல்லுகிற மகத்தான காலகட்டத்தில், தமிழ்நாட்டிற்கு வளம் சேர்க்கும் திட்டங்களும் எண்ணிலடங்கா அளவில் நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக 2004-2009வரை நிறைவேற ஆரம்பித்தன. அத்தகைய சாதனைகளின் பட்டியலை சுருக்கமாக இப்போது காணலாம். பா.ஜ.க. ஆட்சிக்கும் தி.மு.க. தோழமை யுடன் இருந்த காங்கிரஸ் ஆட்சி ஒன்றிய அளவில் அமைந்திருந்தபோது கொண்டு வரப்பட்ட சிறப்புத் திட்டங்களையும் காணும் போது மலைப்பாக இருக்கும். சிறந்த காங்கிரஸ் எழுத்தாளரான ஆ.கோபண்ணா தனது நூலில் இதுகுறித்து விரிவாக தொகுத்து தந்துள்ளார்.
* தமிழ்- செம்மொழித் திட்டம் நிறைவேற்றப்பட்டு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் 18.08.2007 அன்று சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது.
* செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம், தேசிய அளவில் சிறந்து விளங்கும் தமிழறிஞர் ஒருவருக்கு ஐந்து லட்ச ரூபாய் விருதுத்தொகை கொண்ட தொல்காப்பியர் விருதும், அயல்நாட்டுத் தமிழறிஞர்களில் ஒரு வருக்கும், அயல்நாடுகளில் வாழும் இந்தியத் தமிழ் அறிஞர்களில் ஒருவருக்கும் ஆக, தலா ஐந்து லட்ச ரூபாய் விருதுத்தொகை கொண்டுள்ள இரண்டு குறள் பீட விருதுகளும், தலா ஒரு லட்ச ரூபாய் விருதுத் தொகை கொண்டுள்ள இளம் தமிழறிஞர்களுக்கான ஐந்து விருதுகளும் ஆண்டுதோறும் நமது குடியரசுத் தலைவரால் வழங்கப்பட ஒன்றிய அரசு அனுமதித்துள்ளது.
* சென்னைக்கு அருகில் ஒரக்கடத்தில் ரூ.470 கோடி முதலீட்டில், ஒன்றிய அரசின் தேசிய மோட்டார் வாகனச் சோதனை மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட வளர்ச்சிக் கட்டமைப்பு மையம் (National Automotive Testing Research and Development Infrastructure Project - NATRIP) 04.11.2006 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
* தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம் தாம்பரத்தில் நிறுவப்பட்டுள்ளது.
* சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே மண்டலம் அமைக்கப்பட்டுள்ளது.
* சேலம் உருட்டாலையைச் சர்வதேச அளவுக்கு உயர்த்தி, ரூ.1,553 கோடி செலவில் புதிய குளிர் உருட்டாலை (Cold Rolling Mill) அமைக்கப்பட்டுள்ளது.
* சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியை ரூ.120 கோடி செலவில் 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவக் கல்லூரியாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டில் உள்ள 4,676 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலைகளில் 3,226 கிலோ மீட்டர் நீள சாலைகள் நான்குவழிச் சாலைகளாக மேம்படுத்தப் பட்டுள்ளன. 650 கிலோ மீட்டர் நீள மாநில நெடுஞ் சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
* கத்திபாரா சந்திப்பு, பாடி சந்திப்பு, கோயம்பேடு சந்திப்பு ஆகிய இடங்களில் ரூ.490 கோடி செலவில் மிகப் பிரம்மாண்டமான மேம்பாலங்கள் கட்டும் பணிகள் 2005இல் தொடங்கப்பட்டு, கத்திபாரா சந்திப்பு, பாடி சந்திப்புகளில் பணிகள் முடிவடைந்து, மேம்பாலங்கள் திறக்கப்பட்டுள்ளன. மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் போக்குவரத்துகள் பயன்பட்டு வருகின்றன.
* சென்னை விமான நிலையத்தின் எதிரே திரிசூலத்தில் மேம்பாலமும், தாம்பரம் இரும்புலியூர் அருகே வாகனச் சுரங்கப் பாதையும் அமைக்கப்பட்டுள்ளன.
* ரூ.1,655 கோடி மதிப்பீட்டில் சென்னை துறைமுகம், மதுரவாயில் இடையே பறக்கும் சாலை அமைத்திட அனுமதிக்கப்பட்டு, 08.01.2009 அன்று, பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டி, பணிகள் தொடங்கப்பட்டன.
* தமிழ்நாட்டில் கடந்த (2004 - 2009) ஐந்து ஆண்டுகளில் ரூ.34,102 கோடி மதிப்பீட்டிலான தேசிய நெடுஞ்சாலைகள், மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள்.
* ஆயிரத்து 605 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பிற சாலைகள் மேம்பாடு தொடர்பான ஒன்றிய அரசின் திட்டங்கள்.
* ரூ.2,427 கோடி மதிப்பீட்டில், நூறாண்டுகால கனவை நனவாக்கிடும் சேது சமுத்திரத் திட்டம்.
* கப்பல் போக்குவரத்து மற்றும் கடல்வழி வர்த்தகம் பெருகும் வகையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு துறைமுக வசதிகளை மேம்படுத்தும் திட்டங்கள். குறிப்பாக எண்ணூர் துறைமுக விரிவாக்கத் திட்டம்.
* சென்னைத் துறைமுகத்தின் இரண்டாவது சரக்குப் பெட்டக முனையம் ஏற்படுத்தும் திட்டம்.
* நாகர்கோவில்,குளச்சல் துறைமுகத்தைச் சர்வதேசப்பெட்டகங்களைக் கையாளும் துறைமுகமாக (International container Transhipment Hub Port) மேம்படுத்தும் திட்டம்.
* விளையாட்டு மற்றும் உள்நாட்டு நீர்வழிப் போக்கு வரத்து வசதிகளை மேம்படுத்தும் திட்டம் உள்பட 20 ஆயிரத்து 956 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பல திட்டங்கள் எனக் கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறைமூலம் மொத்தம் 56 ஆயிரத்து 664 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு திட்டங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழழ்நாட்டிற்கு அனுமதிக்கப்பட்டு, புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.
* நெசவாளர் சமுதாய மக்கள் பெரும்பயன் எய்திடும் வகையில், சென்வாட் வரி நீக்கப்பட்டுள்ளது.
* மதம் மற்றும் சிறுபான்மைப் பிரிவினரின் பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாகப் பின்தங்கியோர் நலன்காக்கும் தேசிய ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
* சென்னை மாநகர குடிநீர்ப் பிரச்சினை தீர ரூ.908 கோடி மதிப்பீட்டில், தென்சென்னை நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
* அடக்குமுறை பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டது.
- தொடரும்
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!