முரசொலி தலையங்கம்

ஒற்றை செங்கலோடு எய்ம்ஸ்.. எந்த தைரியத்தில் இவர்கள் இங்குவந்து மேடை போட்டு பேசுகிறார்கள்? -முரசொலி கேள்வி!

ஒற்றை செங்கலோடு எய்ம்ஸ்.. எந்த தைரியத்தில் இவர்கள் இங்குவந்து மேடை போட்டு பேசுகிறார்கள்? -முரசொலி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (13.6.2023)

அமித்ஷாக்கள் அறிக! -1

உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தமிழ்நாடு வந்து சென்றுள்ளார். இனி அவர்கள் அடிக்கடி வருவார்கள். ஏனென்றால் தேர்தல் வரப்போகிறது! 2024 ஆம் ஆண்டு -–- அதாவது அடுத்த ஆண்டு தேர்தலைச் சந்திக்கப் போகிற கட்சி பா.ஜ.க. 2014 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கிற கட்சி அது. ஒருமுறையல்ல இரண்டு முறை தொடர்ச்சியாக ஒன்றியத்தை ஆளும் வாய்ப்பைப் பெற்ற கட்சி அது. இந்தப் பத்தாண்டு காலத்தில் இந்தியாவுக்குச் செய்த சாதனைகளைச் சொல்லி உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பேசி இருந்தால் பாராட்டி இருக்கலாம். சாதனைப் பட்டியல் அதிகமாக இருந்தால், நாமும் மலைத்துப் போயிருக்கலாம். ஆனால் அப்படி எந்தப் பட்டியலையும் அவரால் போட முடியவில்லை. இருந்தால் அல்லவா சொல்வதற்கு? ‘சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்’ என்பது தமிழ்நாட்டுச் சொலவடை!

உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தருவதற்கு முந்தைய நாள் சேலம் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘இந்த ஒன்பது ஆண்டு காலத்தில் பா.ஜ.க. ஆட்சி மூலமாக தமிழ்நாட்டுக்குச் செய்து தரப்பட்ட சிறப்புத் திட்டங்கள் என்ன?’ என்ற கேள்வியை எழுப்பினார்கள். ஒன்பது ஆண்டுகளாக ஒற்றைச் செங்கலோடு நிற்கிறது எய்ம்ஸ் மருத்துவமனை. இந்தக் கேள்விக்காவது உள்துறை அமைச்சர் அவர்கள் முறையான பதிலைச் சொன்னாரா என்றால் இல்லை.

ஒற்றை செங்கலோடு எய்ம்ஸ்.. எந்த தைரியத்தில் இவர்கள் இங்குவந்து மேடை போட்டு பேசுகிறார்கள்? -முரசொலி கேள்வி!

‘‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் பகுதி 1, 2 பணிகள் தொடங்கி விட்டது. கோவையில் ரூ.1,500 கோடி செலவில் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட உள்ளது” என்று பதில் அளித்துள்ளார் உள்துறை அமைச்சர். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என்று அறிவித்தீர்களே ஏன் கட்டவில்லை என்று கேட்டால், கோவையில் இ.எஸ்.ஐ. வரப்போகிறது என்கிறார் உள்துறை அமைச்சர். புளி இருக்கா என்று கடைக்காரரிடம் கேட்டால், ‘உப்பு இருக்கிறது’ என்று சொல்வதைப் போல இருக்கிறது.

2015 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அப்போதைய ஒன்றிய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அவர்களால் அறிவிக்கப்பட்டது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை ஆகும். இப்போது 2023 ஆம் ஆண்டு நடக்கிறது. இந்த எட்டாண்டு காலத்தில் என்ன செய்தீர்கள் என்பதுதான் கேள்வி. பகுதி 1 என்பது ஃபைல் போடுவது மட்டும்தானா? பகுதி 2 என்பது ஒரே ஒரு செங்கலை வைப்பது மட்டும்தானா? இமாச்சல பிரதேசம் பிலாஸ்பூரில் 2017 அக்டோபரில் மோடி அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் கட்டி முடிக்கப்பட்டு, 2022 அக்டோபரில் திறந்தும் வைத்துவிட்டார். 2015 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பஞ்சாப் பதிண்டா எய்ம்ஸ் 2019-–ம் ஆண்டே செயல்பட ஆரம்பித்துவிட்டது. மதுரையிலோ இன்னும் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளே தொடங்கவில்லை. இதைத்தான் ஏன் என்று கேட்கிறோம்.ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூட தமிழ்நாடு தகுதி பெற்ற மாநிலம் இல்லையா? 2015 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சொல்லி- – 2019 ஆம் ஆண்டு பிரதமர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இன்று வரை ஒற்றைச் செங்கலோடு இருக்கிறது என்றால் தமிழ்நாட்டை பா.ஜ.க. எப்படியெல்லாம் அவமானப்படுத்துகிறது என்பதை இதன்மூலமாக அறிந்து கொள்ளலாம். இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உருவாக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எல்லாம் இந்திய அரசு பணம் தருமாம். ஆனால் தமிழ்நாட்டில் அமையும் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு மட்டும் ஜப்பான் நாடு நிதி ஒதுக்க வேண்டுமாம். ஜப்பான் நிதி வரவில்லை என்றால் பணம் ஒதுக்க மாட்டார்களாம்.

ஒற்றை செங்கலோடு எய்ம்ஸ்.. எந்த தைரியத்தில் இவர்கள் இங்குவந்து மேடை போட்டு பேசுகிறார்கள்? -முரசொலி கேள்வி!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரைக்கு வந்த பா.ஜ.க. தேசியத் தலைவர் நட்டா, ‘எய்ம்ஸ் மருத்துவமனையின் 95 சதவிகித கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்டது’ என்று சொன்னார். வடிவேலு சொல்வாரே, ‘கிணத்தைக் காணும்யா’ என்பது மாதிரி இருந்தது இது. 95 சதவிகித பணிகள் முடிந்தது என்றால் வெள்ளை அடிக்க வேண்டியதுதான் பாக்கி என்பதைப் போல நட்டா கப்ஷா விட்டார். இப்போது அமித்ஷா பகுதி 1, 2 என்று சொல்கிறார். ஒரு வேளை நடக்காமல் போனால் எப்படி எல்லாம் தினுசு தினுசாக பொய் சொல்ல வேண்டி இருக்கிறது! மதுரை மாவட்டம் தோப்பூரில் 224 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 5 ஆண்டுகளாகியும் 5 கோடி ரூபாயில் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. மாநில அரசிடமிருந்து 224.24 ஏக்கர் நிலம் ஒன்றிய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படவில்லை என்றாலும், 2021 ஆம் ஆண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு, மாணவர் சேர்க்கை நடைபெற்று ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதன்பிறகாவது கட்டடம் கட்டித் தர முன் வந்தார்களா என்றால் இல்லை.

* தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யுங்கள் என்று முதன்முதலாக 19.6.2014 அன்று தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியது.

* இரண்டு இடங்களைத் தேர்வு செய்து 31.10.2014 அன்று தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியது.

* 28.2.2015 அன்று மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை

அமையும் என்று சொன்னார்.

* 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய நான்கு மாத காலக்கெடுவை நீதிமன்றம் விதித்தது.

* 2018 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார் என்று தேதியே குறித்தார்கள். அடிக்கல் நாட்டப்படவில்லை.

* 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்ததால், 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார் பிரதமர்.

* அதன்பிறகு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.

* 2023 ஆம் ஆண்டும் அப்படியேதான் கிடக்கிறது.

எந்த தைரியத்தில் இவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து மேடை போட்டு

பேசுகிறார்கள் என்பதுதான் நமக்குப் புரியவில்லை.

- தொடரும்

banner

Related Stories

Related Stories