murasoli thalayangam
திமுக ஆட்சியில் மண்ணும் மகிழ்கிறது.. ‘பசிப்பிணி போக்கும் முதல்வர்’ ஆக உயர்ந்து நிற்கிறார் மு.க.ஸ்டாலின்!
மண்ணை மகிழ்விக்கும் அறிக்கை!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையில் மலர்ந்த பிறகு நாட்டு மக்களைப் போலவே மண்ணும் மகிழ்ந்தது. பூமியும் செழித்தது. உண்மை இது. வெறும் புகழ்ச்சி அல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளில் சாகுபடி பரப்பு அதிகம் ஆகி இருக்கிறது. மொத்த சாகுபடி பரப்பானது ஒரு இலட்சத்து 93 ஆயிரம் எக்டர் அதிகரித்துள்ளது. இன்றைய மொத்த சாகுபடி பரப்பானது 63 இலட்சத்து 48 ஆயிரம் எக்டர் ஆகும். உணவு தானிய உற்பத்தியானது அதிகம் ஆகி இருக்கிறது.
கடந்த ஆண்டில் 119 இலட்சத்து 97 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு தானியம் உணவு உற்பத்தி ஆகி இருக்கிறது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 11 இலட்சத்து 73 ஆயிரம் ஆகும். குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட உற்பத்திச் சாதனை என்பது குறிப்பிடத்தக்கதாக அமைந்திருந்தது. டெல்டா மாவட்டங்களில் 5 இலட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவைச் சாகுபடி நிகழ்ந்துள்ளது. இது கடந்த 47 ஆண்டுகளில் நிகழாத சாதனையாகும்.
இவை அனைத்தும் சாதாரணமான சாதனைகள் அல்ல. மகத்தான சாதனைகள். மண்ணை மகிழ்விக்கும் சாதனைகள். மண்ணை மகிழ்விப்பதன் மூலமாக மக்களை மகிழ்விக்கும் சாதனைகள். இதற்கு மிக முக்கியமான காரணம்... கழக ஆட்சியாகும். 'நானும் ஒரு விவசாயி' என்று சொல்லி பச்சைத் துண்டைப் போட்டு ஏமாற்றிக் கொண்டு பச்சைத் துரோகங்களைச் செய்து கொண்டு இருந்தார் பழனிசாமி. விவசாயிகளை ஒழிக்கவும், வேளாண்மையை முடக்கவும் ஒன்றிய பா.ஜ.க. அரசால் கொண்டுவரப்பட்ட
1. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்,
2.விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம்,
3.விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் ஆகிய மூன்றையும் பகிரங்கமாக ஆதரித்தவர் பழனிசாமி.
'இந்த மூன்று சட்டங்களில் என்ன தவறு?' என்று பத்திரிக்கையாளர்களிடம் கேள்வி கேட்டவர் பழனிசாமி. 'இவருக்கு இந்த சட்டத்தை பற்றி இவ்வளவு தெரியும் என்றால் இவரை அழைத்துச் சென்று போராடும் விவசாயிகளிடம் பேச வையுங்கள்' என்று கிண்டலாக அன்று சொன்னார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அந்தளவுக்கு தரையில் விழுந்து படுத்து உருண்டு ஆதரித்தார் பழனிசாமி.
ஒன்றரை ஆண்டு காலம் தலைநகரில் படுத்திருந்து இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வைத்தார்கள் வீறு கொண்ட விவசாயிகள். இந்த சட்டங்களை ஆதரித்த பழனிசாமி, டெல்லிக்குப் போய் உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டாமா? அதைச் செய்யவில்லை. தனது நாற்காலியை அப்போது காப்பாற்றிக் கொடுத்த பா.ஜ.க.வுக்கு பல்லக்குத் தூக்க விவசாயிகளைப் பலி கொடுத்தார் பழனிசாமி.
அதேபோல் காவிரி பிரச்சினையிலும் அவர் எந்தத் தீர்வையும் செய்யவில்லை. ஆனால் பாராட்டு விழா மட்டும் நடத்திக் கொண்டார். விவசாயிகள் எல்லா வகையிலும் விவசாயிகள் புறந்தள்ளப்பட்ட நிலையில்தான் தி.மு.க. ஆட்சி மலர்ந்தது. 'வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும்' என்ற வாக்குறுதியை நிறைவேற்றிக் காட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து அதற்கென தனிக்கவனம் செலுத்தப்பட்டதால்தான் பாசனப் பரப்பும் அதிகம் ஆனது.
உற்பத்தியும் அதிகம் ஆனது. ஆட்சிக்கு வந்ததும் தூர் வாரியதன் காரணமாக கடைமடை வரை தண்ணீர் சென்றது. மேட்டூர் அணைத் தண்ணீர் வரையறுக்கப்பட்ட நாளுக்கு முன்னதாகத் திறந்தது அரசு. இது விவசாயிகளை மகிழ்வித்தது. ரூ.60 கோடி மதிப்பிலான குறுவைச் சாகுபடி தொகுப்புகள் வழங்கப்பட்டன. மழையும் பெய்தது. நீர் மட்டம் உயர்ந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் விவசாயத்துக்காக ஒன்றரை இலட்சம் புதிய மின் இணைப்புகள் தரப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சேர்ந்துதான் மண்ணை மகிழ்விக்க வைத்திருக்கிறது.
இடுபொருள் மானியமாக 1.82 இலட்சம் விவசாயிகள் பெற்றிருக்கிறார்கள். 6.71 இலட்சம் விவசாயிகள் காப்பீடு மானியம் பெற்றிருக்கிறார்கள். அதாவது பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனுக்குடன் மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள், “கடந்த இரண்டு ஆண்டுகளாக அறிவிக்கப்பட்டதில் ஒன்றிய அரசின் ஒப்புதல் பெற வேண்டியவை தவிர மற்ற அனைத்துக்கும் அரசாணை போடப்பட்டு செயல்படுத்தப்பட்டு விட்டது” என்று அறிவித்துள்ளார்.
இதனால்தான் இந்த சாதனையை எட்ட முடிந்தது. அறிவிப்புகள் வெறும் அறிவிப்புகளாக மட்டும் இருந்துவிட்டால் இந்தச் சாதனைகள் கிடைத்திருக்காது. செயல்பாட்டுக்கு வந்ததால்தான் சாதனைகளாக மலர்ந்துள்ளன. இந்த ஆண்டும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் ஏராளமான முன்னெடுப்புகள் செய்யப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் செயல்பாட்டுக்கு வரும் போது தமிழ்நாட்டின் வேளாண்மைப் புரட்சிக்காலமாக இது அமையும் என்பதில் சந்தேகமில்லை. உழவர் பெருமக்களை 'பசிப்பிணி மருத்துவர்கள்' என்று அழைத்தார் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் 'பசிப்பிணி போக்கும் முதல்வர்' ஆக உயர்ந்து நிற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!