murasoli thalayangam
“பெண்களை படிக்க அனுப்பலாமா என்று கேட்ட காலத்தில் போலிஸ் வேலைக்கு அனுப்புங்க” என்றார் கலைஞர்.. - முரசொலி !
பொன்விழா கொண்டாடும் பெண் காவலர்கள்!
1967ஆம் ஆண்டு கழக ஆட்சி முதன்முதலாக மலர்வதற்கு முன்பே காவலர்கள் பிரச்சினைக்காக குரல் கொடுத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.
‘உதயசூரியன்’ என்ற நாடகத்தை எழுதி அதில் தலைவர் அவர்களே நடித்தார். போலீஸ்காரர்கள் நிலைமையைச் சுட்டிக் காட்டும் வகையில் ஒரு கவிதையினை அவரே தீட்டினார்...
‘’ஆராரோ... ஆரிரரோ... ஆணழகா! கண்வளராய்!
அஞ்சுபத்து சம்பளத்தில் மிஞ்சுவதில் வளரவந்த
அஞ்சுகமே! கண்வளராய்!
போலீசு வேலைக்கென்று போகின்ற ஙொப்பனுக்கு
புத்திரனாய் வந்துதித்த தரித்திரமே கண்வளராய்.
துப்பாக்கி எடுத்துகிட்டு போகின்ற ஙொப்பனிடம்
பழம்பாக்கி கேட்டுக்கிட்டு வழிமறிக்கும் கடன்காரன்
வருகின்ற காட்சிகளைக் காணாமல் கண்வளராய்!
நாடாளும் மந்திரிகள் நலியாமல் வாழ்வதற்கு
ஓடாகத் தேய்கின்ற அப்பாவின் புத்திரனே.
குருவிக்கூடான வீட்டுக்குள்ளே தவழுகின்ற குலவிளக்கே!
கொசுக்கடிக்கு அஞ்சாமல் குவளை மலர்க் கண்வளராய்!
காக்கி உடை போட்டுக்கிட்டு சேப்பு தொப்பி மாட்டிக்கிட்டு
நாட்டைக் காக்கும் வீரனுக்கு உன்னைப் போல
நாலு வந்து பிறந்துவிட்டால்
காவி உடை வேணுமடா... கமண்டலமும் தேவையடா’’ - என்று காவலர்கள் நிலைமைகளைப் படம்பிடித்தார் தலைவர் கலைஞர். அந்தப் பாட்டுக்காகவே அந்த நாடகம் தடை செய்யப்பட்டது. ஆட்சிக்கு வந்ததும் இதனை மறந்துவிட வில்லை அவர். காவலர் நிலைமையை மேம்படுத்த ஆணையம் அமைத்தார் முதல்வர் கலைஞர்.
காவல்துறையை நவீனப்படுத்துவதற்காக 1969ஆம் ஆண்டு ஆர்.ஏ.கோபாலசாமி தலைமையில் காவல் ஆணையம் அமைத்ததும் - முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் தலைமையில் 1989 ஆம் ஆண்டு காவல் ஆணையம் அமைத்ததும் –- 2006 ஆம் ஆண்டு பூரணலிங்கம் ஐ.ஏ.எஸ். தலைமையில் மூன்றாவது ஆணையம் அமைத்ததும் கலைஞர் அவர்கள்தான். இப்போது திராவிட நாயகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நான்காவது காவல் ஆணையத்தை நீதியரசர் சி.டி.செல்வம் தலைமையில் அமைத்துள்ளார்கள். காவலர்கள் குடியிருக்க காவலர் வீட்டுவசதி வாரியத்தை அமைத்ததும் முதல்வர் கலைஞர் அவர்கள்தான்.
இந்த வரிசையில் பெண் காவலர்களை உருவாக்கியவரும் முதல்வர் கலைஞர் அவர்களே! இன்றைக்கு தமிழ்நாட்டில் 35,329 பெண் காவல் ஆளினர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றால் அதற்கான தொடக்கப்புள்ளி முதல்வர் கலைஞர் அவர்கள்தான். 1973ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெண் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் பெண் காவலர்களை காவல் பணியில் சேர்க்க வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவை அரசாணை எண் 2382, நாள் 5.9.1973-ன் மூலம் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் வெளியிட்டார்கள். முதலில் 22 பெண் காவலர்களுடன் தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு காவல்துறையில் மொத்தம் 1,21,215 பேர் பணிபுரிகிறார்கள். இதில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பெண் காவலர்கள். இந்தியாவைப் பொறுத்தவரையில் அதிக பெண் காவலர்களைக் கொண்ட ஐந்து மாநிலங்களில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளது.
பெண் காவலர்கள் இன்று இருப்பது பலருக்கு சாதாரணமானதாக இருக்கலாம். ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் பெண் காவலர்கள் என்பது மிகமிக அதிர்ச்சிக்குரியதாக இருந்தது. பெண்களை படிக்க அனுப்பலாமா என்ற காலமாக இருந்தது. அந்த நேரத்தில் ‘போலீஸ் வேலைக்கு அனுப்புங்கள்’ என்று சொன்னவர், முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.
முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியாக திலகவதி அவர்கள் தேர்வு பெறவும் இதுவே ஊக்கம் அளித்தது. தமிழ்நாட்டின் முதல் பெண் டி.ஜி.பி.யாக லத்திகா சரண் பெருமை பெற்றார். சென்னை காவல்துறையின் முதல் பெண் ஆணையராக லத்திகா சரணை நியமித்தவரும் முதல்வர் கலைஞர் அவர்கள் தான்.
இன்றைக்கு 1,498 காவல் நிலையங்களில் 503 காவல் நிலையங்களுக்கு சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர்களாக பெண் இன்ஸ்பெக்டர்கள் இருக்கிறார்கள். 228 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. இவை அனைத்தும் பெண்ணினத்தை சரிநிகர் சமமாக உயர்த்தக் காரணமாக அமைந்துள்ளது.
பெண்கள் வீட்டைவிட்டு வெளியில் வரக்கூடாது, பள்ளிக்குப் போகக் கூடாது, பேசக் கூடாது, யாரையும் எதிர்த்துப் பேசக் கூடாது, கல்லூரிக்குள் வரத் தடை, வேலைகளுக்குச் செல்லத் தடை... என்றெல்லாம் இருந்த சமூகத்தில் சீர்திருத்த விதை ஊன்றிய திராவிடச் சிந்தனைகளின் விளைவே இவை.
‘’பெண்கள் உடல் வலிமையிலும் சிறப்படைய வேண்டும். தேகப்பயிற்சி, ஆயுதப் பயிற்சி முதலிய பழக்கங்களைப் பெற்றிருக்க வேண்டும்” என்று 17.7.1932 அன்று எழுதி இருக்கிறார் தந்தை பெரியார். பெண்களுக்கு உரிமை வேண்டும் என்று பெரியார் மாநாடு போட்ட போது, ‘உரிமை வேண்டாம்’ என்று பெண்களை வைத்தே மாநாடு போட வைத்தார்கள். ‘நிபந்தனையற்ற பெண் விடுதலை வேண்டும்’ என்றார் பெரியார்.
1946 ஆம் ஆண்டு ஒரிசா மாநில அரசு, ‘போலீஸ் தவிர மற்ற வேலைகளில் பெண்களை ஈடுபடுத்துவோம்’ என உத்தரவிட்டது. ‘ஏன் போலீஸ் வேலையை மட்டும் ஒதுக்குகிறீர்கள்?’ என்று அறிக்கை வெளியிட்டார் பெரியார்.
‘’போலீஸாருக்கு பொதுமக்கள் அஞ்சுகிறார்கள் என்றால் அவர்களுக்கு இருக்கும் தனிப்பட்ட வலுவினால் அல்ல. அவர்கள் கையில் இருக்கும் குண்டாந்தடி அல்லது துப்பாக்கிக்கும், அவர்களுக்குள்ள அதிகாரத்துக்குமே அஞ்சுகிறார்கள். எனவே பெண்கள் கையிலும் துப்பாக்கியைக் கொடுக்க வேண்டும். இரஷ்யாவில் பெண் போலீஸ் திறமையாக வேலை செய்கிறது. இந்த நாட்டிலும் போலீஸ் வேலை செய்யும் துணிவும் திறமையும் ஆசையும் உள்ள பெண்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். பெண்கள் படிப்பதே பெரிய அதிசயமாகவும், சைக்கிள் விடுவதை வேடிக்கையாகவும் கருதப்பட்டது போலவே, போலீஸ் உத்தியோகமும் சில ஆண்டுகள் வரையில் அதிசயமாகத் தோன்றலாம். பிறகு நாளடைவில் அதுவும் இயற்கைக் காட்சியாகவே போய்விடும்” ( விடுதலை, 18.11.1946) என்று எழுதினார் தந்தை பெரியார்.
இன்று எங்கெங்குக் காணினும் பெண் காவலர்கள். சமூக வளர்ச்சியின் அடையாளமாக இருக்கிறது இந்தப் பொன்விழா!
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!