murasoli thalayangam
"‘பாரத் மாதாகீ ஜே’ என்று சொல்வதால் இந்தியாவை வளர்த்து விட முடியாது" : மோடி அரசுக்கு பாடம் எடுத்த முரசொலி!
1890 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பத்திரிகை, ‘மலையாள மனோரமா’. அவர்கள்தான் ‘தி வீக்’ என்ற ஆங்கில இதழையும் நடத்தி வருகிறார்கள்.
அன்றைய திருவிதாங்கூர் பகுதியில் திவானாக இருந்த சர்.சி.பி.ராமசாமியின் அரசியல் நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையாக எழுதியதற்காக, ‘மலையாள மனோரமா’ தனது செய்தி வெளியீட்டை நிறுத்த வேண்டிய அளவுக்கு நெருக்கடியை எதிர்கொண்டது. அதன் ஆசிரியரையே கைது செய்தார்கள். சுதந்திரத்துக்குப் பிறகுதான் அனைத்து தடைகளையும் நீக்கி, ‘மலையாள மனோரமா’ வெளிவரத் தொடங்கியது.
இன்று மாநில மொழியில் 15 லட்சம் பிரதிகளைத் தாண்டிய பத்திரிக்கையாக வலம் வருகிறது. கோட்டயம் முதல் துபாய் வரை பதிப்புகள் உண்டு. இத்தகைய புகழ்மிக்க இதழின் சார்பில் ‘இந்தியா 75 ஆண்டுகள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி மூலமாக கலந்து கொண்டு ஆற்றிய உரை இந்தியா முழுமைக்குமான பிரகடனமாக அமைந்திருந்தது.
இந்தியாவின் எதிர்காலத்துக்கு கூட்டாட்சித் தத்துவமும், சுதந்திர எண்ணமும், சமத்துவமும் சகோதரத்துவமும்தான் சிறந்தது என்பதை தீர்ப்பாகவே சொல்லி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
"75 ஆண்டு காலம் இந்தியாவை வழிநடத்தியதே
* Federalism,
* Freedom
* Forward ஆகிய மூன்று கொள்கைகள்தான். கூட்டாட்சித் தத்துவமும், சுதந்திர உரிமைகளும், அனைத்து விதமான வளர்ச்சி சிந்தனைகளும் இணைந்துதான் இந்தியாவை இந்தளவுக்கு வளர்த்துள்ளன. இன்று ஒன்றுபட்ட இந்தியாவாக நமது நாடு வலிமையோடு இருக்கக் காரணம் நமக்குள் இருக்கும் ஒற்றுமை. நமக்குள் இருக்கும் சகோதரத்துவம். ஒருவருக்கொருவர் ஒரு தாய் மக்களாக பழகும் தன்மை தான் இதற்குக் காரணம் ஆகும்” என்பதைச் சொல்லி - இந்தியாவின் முதல் தலைமை அமைச்சரான நேரு அவர்கள் எத்தகைய நெகிழ்வு தன்மையுடன் இந்திய நாட்டை வழிநடத்தினார் என்பதையும் சுட்டிக் காட்டினார் முதலமைச்சர்.
அவரது பாணியில் கூட்டாட்சியை, மாநில சுயாட்சியை, மதச்சார்பின்மையை, சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, சமதர்மத்தை, சமூக நீதியை - நாம் வலிமைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் முதலமைச்சர் அவர்கள்.
‘’இந்தியா என்பதை வெறும் எல்லைகளாக நாம் கருதக் கூடாது. இந்தியா என்பது மக்கள்தான். இந்தியா என்பது ஒற்றை அரசு அல்ல, பல்வேறு மாநில அரசுகளின் ஒன்றியம்தான் இந்திய அரசு. இந்தியாவைக் காப்பாற்ற வேண்டுமானால் இந்திய ஒன்றியத்துக்குள் உள்ளடங்கி உள்ள அனைத்து மாநிலங்களையும் காப்பாற்ற வேண்டும். ஒற்றை மொழியை ஒற்றை மதத்தை ஒற்றை கலாச்சாரத்தை திணிக்க நினைப்பவர்கள் இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்க நினைக்கிறார்கள். இந்த சக்திகளுக்கு யாரும் இடமளிக்கக் கூடாது” என்று கேட்டுக் கொண்டார்கள்.
‘’வலுவான மாநிலங்கள்தான் கூட்டாட்சியின் அடிப்படை ஆகும். வலிமையான அதிகாரம் பொருந்திய தன்னிறைவு பெற்றவையாக மாநிலங்கள் இருப்பது இந்தியாவுக்கு வலிமைதானே தவிர பலவீனமல்ல.
வலிமையான வசதியான தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலங்களால் இந்தியாவுக்கு பயன்தானே தவிர, பலவீனமல்ல” என்று சொல்லி இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு எந்த வகையில் எல்லாம் பயனுறு மாநிலமாக அமைந்துள்ளது என்பதையும் பட்டியலிட்டார் முதலமைச்சர் அவர்கள்.
இதற்கு மாறாக இன்றைய பா.ஜ.க. ஆட்சி செயல்படுவதை முதலமைச்சர் அவர்கள் பட்டியலிட்டுள்ளார்கள்.
இந்தியா, இந்தியா என்று பேசுவதாலோ, பாரத தேசம் என்றும் இழுத்துச் சொல்வதாலோ, ‘பாரத் மாதாகீ ஜே’ என்று குரல் எழுப்புவதாலோ இந்தியாவை வளர்த்து விட முடியாது. இந்தியாவை வளர்க்க மக்களை வளமுள்ளவர்களாக மாற்ற வேண்டும். மக்களை வளமுள்ளவர்களாக மாற்றும் கடமையும் பொறுப்பும் மாநில அரசுகளிடம் இருக்கிறது. அத்தகைய மாநில அரசுகளை மதிக்க வேண்டும். அவர்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். உதவிகள் செய்யப்பட வேண்டும். அதை விடுத்து மாநிலங்களை அடிமைகளாக நடத்தும் பாணி என்பது இந்தியாவை வளர்க்காது என்பதை முதலமைச்சரின் திருச்சூர் உரை தெளிவுபடுத்துகிறது.
இந்தியா முழுமைக்கும் ஆளும் பா.ஜ.க. கட்சியானது எதில் அக்கறை செலுத்த வேண்டுமோ அதில் அக்கறை செலுத்தவில்லை. எதிலிருந்து விலகி இருக்க வேண்டுமோ அதில் உரசிக் கொண்டு கிடக்கிறது. அது தான் இன்றைய அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் ஆகும்.
இந்திய நாட்டின் ஒட்டுமொத்த நிலைமை குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் சமீபத்தில் சொன்ன கருத்து கவலை அளிப்பதாக இருக்கிறது. ‘1991 ஆம் ஆண்டை விட மிகவும் மோசமான அல்லது ஆபத்தான நிலையை நாடு எதிர்நோக்கி உள்ளது’ என்று மன்மோகன் சிங் சொல்லி இருக்கிறார்.
இந்தியாவுக்கு பொருளாதார தாராளமயக் கொள்கையை 1991 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் நாள் அறிவித்தவர் அவர். ( அதன் சாதக பாதங்கள் குறித்து இங்கு நாம் விமர்சிக்கப் போவதில்லை!) அதன் முப்பது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஒரு அறிக்கையை மன்மோகன் சிங் வெளியிட்டுள்ளார். அதில், ‘’ இது மகிழ்ச்சிக்கான நேரம் அல்ல, ஆனால் சுயபரிசோதனை மற்றும் சிந்திக்க வேண்டிய நேரம். முன்னோக்கிச் செல்லும் பாதையானது, 1991 நெருக்கடியின் போது இருந்ததை விட மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது. ஒவ்வொரு இந்தி யனுக்கும் ஆரோக்கியமான மற்றும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்காக ஒரு தேசமாக நமது முன்னுரிமைகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒற்றைத் தன்மைக் கோட்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுப்பதை விடுத்து பன்மைத் தன்மைகளை ஏற்றுச் செயல்படும் ஆட்சியாக ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி செயல்பட வேண்டும் என்பதையே ஜனநாயக சக்திகளின் கோரிக்கையாக இருக்கிறது.
வெவ்வேறு மாநிலங்களுக்குச் செல்லும் போது அந்தந்த மாநில மக்களின் உடைகளை பிரதமர் அணிவது வரவேற்கத்தக்கது. பன்மைத்துவத்தை அவரது உடை ஏற்கிறது. உள்ளம் ஏற்க வலியுறுத்துகிறது திருச்சூர் தீர்ப்பு!
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!