murasoli thalayangam

“அஜய் மிஸ்ரா விவகாரம்.. பிரதமர் சொன்னது உண்மை என்றால், அதனை நிரூபிக்க வேண்டிய நேரம் இதுதான்” : முரசொலி!

ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் போராடி வருகின்றன. அத்தனைக்கும் அசைந்து கொடுக்காமல் இருந்து வருகிறது ஒன்றிய அரசு!

லக்கிம்பூர் கேரி என்னுமிடத்தில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தெனியின் கார், போராடும் விவசாயிகளின் பேரணிக்குள் புகுந்து எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்திய வரலாற்றில் இதற்கு முன் ஏற்படாத கொடூரமாக, கடந்த அக்டோபர் மாதம் இந்தக் கொடூரம் நடந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சம்பரான் விவசாயிகள் மீது ஏவிய ஒடுக்குமுறைகளை நினைவுபடுத்தும் வகையில் இந்தச் சம்பவம் நடந்தது.

விவசாயிகள் அமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் சார்பில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தெனியின் மகன் அஷிஷ் மிஸ்ரா தெனி மீது பகிரங்கமாக புகார் சொல்லப்பட்டது. மூன்று வாகனங்களில் வந்து, பேரணி முடிந்து திரும்பிச் சென்று கொண்டிருந்த விவசாயிகள் மீது காரை ஏற்றினார் என்றும், விவசாயிகள் மீது காரை ஏற்றிவிட்டு, பின்னர் எஸ்.கே.எம். தலைவர் தஜிந்தர் சிங் விர்க் அவர்களையும் நேரடியாகத் தாக்கியதாகவும், அவர்மீது வாகனத்தை ஏற்ற முயற்சித்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்கள்.

இவை கற்பனைக் காட்சிகள் அல்ல. அந்தக் கொடூரக் காட்சிகள் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகின. உ.பி. அரசும், ஒன்றிய அரசும் இதனை முதலில் மறைக்க நினைத்தன. காட்சிகள் வெளியான நிலையில், அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகனின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தச்சம்பவத்தில், அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தெனி உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதற்கும் பா.ஜ.க. தலைமை அசைந்து கொடுக்கவில்லை. இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றமும் உன்னிப்பாகக் கவனித்தது. இதில் யார் யாரெல்லாம் குற்றவாளிகள், யார் மீதெல்லாம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தாக்குதலில் காயம் அடைந்தவர்களுக்கு உடனே மருத்துவ உதவிகளை வழங்கவேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உத்தரப்பிரதேச அரசு விரிவான அறிக்கை தர உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

‘நடந்த விஷயம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எப்.ஐ.ஆர். பதியப்பட்டு நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது' என நீதிமன்றத்தில் உத்தரப்பிரதேச அரசு தெரிவித்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஓய்வுபெற்ற பஞ்சாப். ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதி ராகேஷ் குமார் ஜெயினை, லக்கிம்பூர் வழக்கு விசாரணையின் கண்காணிப்பாளராக நியமித்து உத்தரவிட்டது. வன்முறை குறித்து விசாரிக்கும் சிறப்பு விசாரணைக்குழுவில் மூன்று மூத்த அதிகாரிகளையும் சேர்த்து உத்தரவிட்டதோடு, இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதும் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு விசாரணைக் குழுவினர், லக்கிம்பூர் மாவட்ட நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில், விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்டது அலட்சியத்தால் நிகழ்ந்தது அல்ல என்றும், அந்தச் சம்பவத்தின் பின்னால் திட்டமிடப்பட்ட சதி இருந்ததாகவும் கூறியுள்ள சிறப்பு விசாரணைக் குழு, கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது கொலை முயற்சி, ஆபத்தான ஆயுதங்களால் தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும், அலட்சியமாக வாகனம் ஓட்டுதல், கடுமையான காயத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஏற்கனவே பதியப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறது.

விவசாயிகள் மீது கார் ஏறிச்செல்லும் காட்சிகளை வீடியோ எடுத்த பத்திரிகையாளர் ராமு காஷ்யப்பை சுட்டுக் கொலை செய்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். விவசாயிகள் மீது கார் ஏறிய வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். அதில் துப்பாக்கித் தோட்டாக்கள் இருந்துள்ளன. அதை போலீசார் பறிமுதல் செய்து அது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை, கலவரம், கொடிய ஆயுதங்களுடன் கூடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பதியப்பட்ட வழக்கில், அரசியல் சட்டத்தின் மீது பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட ஒருவரது பெயர் இணைக்கப்படுகிறது என்றால், முதலில் உணர்ச்சி அந்த ஒன்றிய அமைச்சருக்குத்தான் வந்திருக்க வேண்டும். அவராக முன்வந்து பதவி விலகி இருக்க வேண்டும்.

அவர் பதவி விலக முன்வராத நிலையில், அவரை பிரதமர் பதவி விலக வைத்திருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் இத்தனை நாட்கள் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வரும் நிலையிலாவது பதவி விலக்கி இருக்க வேண்டும். 700 விவசாயிகள் உயிரைக் கொடுத்து, ஓராண்டு காலம் வீடு வாசல் குடும்பங்களை விட்டு தலைநகருக்கு வந்து போராடியபிறகு மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றதைப் போல - இன்னும் என்ன எல்லாம் நடந்த பிறகு ஒன்றிய அமைச்சரைப் பதவி விலக வைப்பார்களோ எனத் தெரியவில்லை.

‘எனக்கு இந்தியாவின் அரசியல் சட்டப் புத்தகம்தான் வேதப்புத்தகம்' என்று பிரதமர் சொன்னது உண்மையாக இருக்குமானால் - நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தபோது விழுந்து வணங்கியது உண்மையாக இருக்குமானால் - அதனை நிரூபிக்க வேண்டிய நேரமும் சூழலும் சம்பவமும் இதுதான்!

Also Read: திருமண நிதி உதவிக்காக சகோதரியை கல்யாணம் செய்து கொண்ட சகோதரன்... உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!