murasoli thalayangam
"தலிபானிய அச்சம், இன்று உலகளாவியதாக மாறிவிட்டது" - முரசொலி தலையங்கம்
அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டு இருபது ஆண்டுகள் கடந்துவிட்டது. 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் நாள் அமெரிக்காவின் அடையாளமாகக் கருதப்பட்ட உலக வர்த்தக மையத்தின் வடக்குக் கட்டடம், இரட்டைக் கோபுரங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. உலகமே செப்டம்பர் 11க்கு முன் -பின் என பகுத்துப் பார்க்கப்படும் சூழலை அந்தச் சம்பவம் வரலாற்றை மாற்றி எழுதியது.
அத்தகைய அச்சுறுத்தும் சூழல், இன்றைக்கு மாறிவிட்டதா என்ற கேள்விக்கு விடை காண முயற்சித்தால் ஏக்கமும் வருத்தமுமே மிச்சமாகும்! ‘அல் கொய்தா’ என்ற பயங்கரவாத அமைப்பினரால் நான்கு விமானங்கள் கடத்தப்பட்டது. முதல் விமானம், உலக வர்த்தக மையத்தின் வடக்குக் கட்டடத்தைத் தகர்த்தது. இரண்டாவது விமானம், இரட்டைக் கோபுரத்தின் தெற்குக் கட்டடத்தைத் தகர்த்தது. இரட்டைக் கோபுரமே தீப்பற்றி எரிந்தது. இரண்டு நிமிட நேரத்தில் 100 அடுக்கு கட்டடம் இடிந்து நொறுங்கியது.
மூன்றாவது விமானம், அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் மீது தாக்குதல் நடத்தியது. நான்காவது விமானம், ஒரு வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. நாடாளுமன்றக் கட்டடத்தின் மீது இது மோதத் திட்டமிட்டிருந்த விமானம் எனச் சொல்லப் படுகிறது. இந்த துயரச் சம்பவத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள். பல்லாயிரக்கணக்கானவர்கள் காயம் அடைந்தார்கள். அமெரிக்காவை நிலைகுலைய வைப்பதற்காக பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலாக இருந்தாலும், அது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்துவதாக, அச்சத்தில் ஆழ்த்துவதாக அமைந்துவிட்டது.
பின்லேடனின் பின்னணியோடு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா உறுதி செய்தது. அதுமுதல் பின்லேடன் மீதான வேட்டை நடந்தது. பின்லேடனின் களமாக இருந்த ஆப்கானிஸ்தான், அமெரிக்காவின் குறியாக மாறியது. இறுதியாக பாகிஸ்தானில் இருந்த பின்லேடன், 2011 மே 2 அன்று கொல்லப்பட்டார். பயங்கரவாதிகளை ஒழிக்கப் போகிறோம் என்று ஆப்கானிஸ்தானத்தில் தனது படைகளை அமெரிக்கா நிறுத்தி வைத்தது. பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட்டார்களா ஆப்கானிஸ்தானத்தில் என்பது உறுதியாகாத நிலையில், அமெரிக்கா தனது நிலையில் இருந்து பின்வாங்கியது. ஆப்கனில் தங்கியிருந்த அமெரிக்கப் படைகள், நாடு திரும்பத் தொடங்கியது. நேற்றைய தினத்தோடு அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கனில் இருந்து வெளியேறிவிட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
Also Read: “உலகை உலுக்கிய இரட்டை கோபுர தாக்குதல்.. இன்றோடு 20 வருடம் ஆகிறது” : 9/11 தாக்குதலில் என்ன நடந்தது?
நேற்றைய தினம், இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டதன் 20ஆவது நினைவு தினத்தை அமெரிக்கா கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. ஆப்கானிஸ்தானமோ, தலிபான்கள் வசம் போய்விட்டது. இன்றைய அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடனும், முன்னாள் குடியரசுத் தலைவர்களான ஒபாமாவும், பில் கிளிண்டனும் இணைந்து ஒன்றாக நின்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள். அஞ்சலியோடு அவர்கள் நிம்மதி அடைய முடியுமா எனத் தெரியவில்லை.
"தலிபான்கள் அமைத்துள்ள புதிய அரசில் அனைத்துத் தரப்பினருக்கும் இடம் அளிக்கப்படவில்லை. அரசில் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்ட சிலரது பின்னணி கவலை அளிப்பதாக உள்ளது. புதிய தலிபான் அரசு எந்த வகையில் இருக்க வேண்டும் என்று உலக சமுதாயம் எதிர்பார்த்ததோ அந்த வகையில் அரசு அமையவில்லை" என்று அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். அங்கு பெண்கள் கல்வி பெறும் வாய்ப்பு மறுக்கப்பட வாய்ப்புள்ளதாக ஐ.நா. கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான ‘யுனெஸ்கோ’ சொல்லி இருக்கிறது. உயர்கல்வியில் பெண்கள் சேர்வது பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக யுனெஸ்கோ’கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தானத்துக்கு ஆறுதல் அளிப்பது போல பாகிஸ்தான் நடித்துக்கொண்டு இருக்கிறது. "தலிபான்களின் தலைமையிலான ஆப்கானிஸ்தானத்தை உலக நாடுகள் தனிமைப்படுத்தினால் மோசமான பின்விளைவுகள் ஏற்படும்’’ என்று பாசாங்கு காட்டத் தொடங்கி இருக்கிறது பாகிஸ்தான். அதே நேரத்தில், பெண்கள் மற்றும் மாணவிகள், சட்டத்துக்கு உட்பட்டு வேலைக்கும் பள்ளிக்கும் செல்லலாம் என்று தலிபான்கள் சொல்லி இருப்பது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. ஆனாலும், பெண்கள் அமைச்சர்கள் ஆக முடியாது என்றும், பெண்கள், குழந்தைகள் பெறுவதற்காக மட்டும் தான் என்றும் தலிபான் செய்தித் தொடர்பாளர் சொல்லி இருப்பது, அவர்கள் மாறுவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம் என்பதையே உணர்த்துகிறது.
அடிப்படைவாதமானது பயங்கரவாதமாக எந்தச் சூழலிலும் மாறிவிடக்கூடும் என்பதே அனைவரது அச்சத்துக்கும் காரணமாகும். இந்தியா - ஆஸ்திரேலியா நாடுகளின் வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை அமைச்சர்களின் மாநாடு இரண்டு நாட்களுக்கு முன் நடந்துள்ளது. இந்தோ -பசிபிக் பாதுகாப்பு குறித்து இதில் பேசப்பட்டுள்ளது. "பயங்கரவாதத்தை எந்தவித அச்சமுமின்றி, சமரசமின்றி சர்வதேச நாடுகள் ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும்'' என்று இக்கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நிலவரம் இதில் ஆலோசனை செய்யப்பட்டது. "ஆப்கானிஸ்தான் நாடானது அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் பயங்கர வாதத்தின் தளமாக எக்காரணத்தைக் கொண்டும் பயன்பட்டுவிடக்கூடாது. பயங்கரவாதிகளின் புகலிடமாகவும் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் தளமாகவும் அந்த நாடு மாறிவிடக் கூடாது" என்று இந்திய - ஆஸ்திரேலிய அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்திக்கும் போது கூறியுள்ளார்கள்.
இதுதான் இன்றைய நிலைமையாக உள்ளது. தலிபானிய அச்சம், இன்று உலகளாவியதாக மாறிவிட்டது. இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிந்தைய உலகம் என்பது பயங்கரவாதிகளுக்கு எதிரான உலகமாக ஒரு பக்கமும், பயங்கரவாதிகளை உற்பத்தி செய்யும் உலகமாக இன்னொரு பக்கமும் மாறி இருக்கிறது. எல்லாப் போர்களின் நியதிகளும் இப்படித்தான் ஆகி இருக்கின்றன. அது ஒரு பக்க நிம்மதியையும், இன்னொரு பக்க நிம்மதியின்மையையும் கொடுப்பதாகவே அமையும். வெற்றி பெற்றதாகச் சொல்லிக் கொண்ட இலங்கை, இன்று நிர்கதியாகிக்கொண்டு இருக்கிறது. நிதி மற்றும் உணவு நெருக்கடியால் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டு சீனாவின் காலனியாதிக்க நாடாக மாறிக் கொண்டு இருக்கிறது.
அந்த நாட்டின் அரசு சொத்துக்கள், வேறொரு நாட்டின் சொத்துக்களாக மாறிக்கொண்டு இருக்கின்றன. அதனால்தான் புத்தர் சொன்னார்; ‘போரில் தோற்றவர்களை விட வென்றவர்கள் நிம்மதியாக இருக்க முடியாது’ என்று! இரட்டைக் கோபுரம் இடிந்து நொறுங்கியதைப் போல, அமைதி இடிந்து நொறுங்கியது. அமைதியை எல்லாத் தரப்பும் சேர்ந்தேதான் கட்டி எழுப்ப முடியும். இன்று உலகம் தனித்தீவாக இல்லை. ஒன்று, இன்னொன்றை சார்ந்துதான் இருக்கமுடியும் என்பதே நிலைமை. வானமும் பூமியும் அனைவர்க்கும் ஒன்றுதான், கால் ஊன்றி நிற்கும் இடம் வேறாக இருந்தாலும். இதனை உலக நாடுகள் உணராத வரை கோபுரங்கள் இடிந்து விழும் சப்தம், காதுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கும்!
Also Read
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!