murasoli thalayangam

7 பேர் விடுதலை.. குடியரசுத் தலைவர் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் - முரசொலி!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் முன்னாள் பிரதமர் இராஜீவ் வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேர் விடுதலையைக் குறித்து குடியரசுத் தலைவருக்குக் கடிதம் ஒன்று எழுதப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே தமிழக அரசால் 2018 ஆம் ஆண்டு நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அதன் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் பங்கேற்றுக் குடியரசுத் தலைவருக்கு இக்கடிதம் எழுதப்பட்டு இருக்கிறது. இக்கடிதத்தினை நாடாளுமன்றக்கழகக் குழுவின் தலைவரும், கழகப் பொருளாளருமான டி.ஆர்.பாலு குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் கடந்த மே 20ஆம் தேதி சேர்ப்பித்து இருக்கிறார்.

7 பேரை விடுதலை செய்வதற்குரிய அதிகாரம் ஆளுநருக்கு உண்டு. ஆனால், சி.பி.ஐ.யில் வழக்கு விசாரணையில் இருப்பதால் அவர் விடுதலை செய்ய முடியாது என்றும், அந்த அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே இருப்பதாகக் கூறி சம்பந்தப்பட்ட ஆவணங்களை அனுப்பி வைத்துவிட்டார். இப்போது குடியரசுத் தலைவரிடம் அதற்கான பணி நிலுவையில் இருக்கிறது. ஆகவே, நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேர் விடுதலையைக் குறித்து கடிதம் எழுதி இருக்கிறார். இது குறித்து உச்சநீதிமன்றம் ஒரு வழிகாட்டுதலை ஏற்கனவே வழங்கி இருந்தது. அதுபற்றியும் மு.க.ஸ்டாலின் தமது கருத்தைப் பதிவு செய்து இருக்கிறார்.

பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு 2020 நவம்பர் 3ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை நீதிபதிகள் எஸ்.நாகேஸ்வரராவ், அஜய் ரஸ்தோகி, ஹேமந்த் குப்தா ஆகியோர் விசாரித்தனர். அப்போது பேரறிவாளன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன் தனது வாதத்தில், ‘உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் இந்த வழக்கில் எந்த முடிவும் தெரியாமல் இருக்கிறது. எனவேதான் மீண்டும் நீதிமன்றத்தை நாடுகிறோம். இதைத் தவிர வேறு வழி இல்லை’ என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர்தான் முடிவு எடுக்க வேண்டும். அவர் உத்தரவிட வேண்டும் என்று விரும்புகின்றோம்.

இந்த நீதிமன்றத்திற்கு இருக்கிற பிரத்தியேக அதிகாரத்தைப் பயன்படுத்த விரும்பவில்லை. அதேநேரம் 7 பேர் விடுதலை தொடர்பாகத் தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது ஆளுநர் கடந்த 2 ஆண்டுகளாக எந்தவொரு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. ஆளுநர் எதற்காகக் காலம் தாழ்த்துகிறார்?’ என்று தமிழக ஆளுநரை நோக்கி உச்சநீதிமன்றம் வினா எழுப்பி இருந்தது.

உச்சநீதிமன்றம் கருத்து கூறிய அன்று நமது கழகத் தலைவர் முகநூலில் தமது கருத்தை வெளியிட்டார், அதோடு அவர், ஆளுநர் டெல்லி பயணத்தில் இருக்கும் போதும் அவருக்கு, ‘முடிவு எடுப்பதில் காலதாமதங்களைத் தவிர்க்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி 7 பேரை உடனே விடுதலை செய்ய உத்தர விடுக’ என்று ஒரு கடிதம் எழுதினார். இப்படி 7 பேர் விடுதலையில் நமக்கு ஓர் தொடர் நடவடிக்கைகள் இருந்து வந்துள்ளன.

ஆளுநரோ கடந்த ஆட்சியின் இறுதிக் காலத்தில் 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் தமக்கு இல்லை என்றும், சி.பி.ஐ. வழக்கை விசாரித்து வருவதாலும் விடுதலை செய்கிற அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே இருக்கிறது என்று கூறி பிரச்சினைக்கு அவர் தரப்பில் ஒரு முற்றுப் புள்ளியை வைத்துவிட்டார். ஆனால் 7 பேர் விடுதலை கோரிக்கையை நாம் விட்டு விட முடியாது. எனவே இதுகுறித்து முதல்வர் என்ற முறையில் குடியரசுத் தலைவருக்கு, ‘7 பேரை உடனடியாக விடுதலை செய்வீர்’ எனக் கேட்டு கடிதம் எழுதி இருக்கிறார் முதல்வர்.

ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மற்றும் சி.பி.ஐ இது தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கும், விடுதலை செய்வதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்கிற கருத்தைத் தெரிவித்துள்ளன. ஆகவே 7 பேர் விடுதலை செய்வதற்கு எந்தத் தடையும் இருக்க முடியாது. மேலும், கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் வாடிக் கொண்டு இருக்கிறார்கள். தமிழக சட்டமன்றத்தில் இவர்கள் விடுதலை தொடர்பாக இரண்டு முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. காங்கிரஸ் தவிர அனைத்துக் கட்சிகளும் இவர்களின் விடுதலையை வரவேற்கின்றன. இந்நிலையில் தான் முதல்வர் அவர்கள் 7 பேரை ஆயுள் தண்டனையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்கிற கடிதத்தை குடியரசுத் தலைவர் அவர்களுக்கு எழுதி இருக்கிறார்.

முதல்வர் தமது கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறபடி கொரோனா பாதிப்பினால் சிறைக்குள் இருக்கும் கைதிகளும் குறைக்கப்பட வேண்டும் என்கிற நீதிமன்றங்களின் பரிந்துரையையும் குடியரசுத் தலைவருக்குச் சுட்டியுள்ளார் முதல்வர்!

(1) 7 பேர் 30 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார்கள்.

(2) இவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்கிற முழக்கம் தமிழ்நாட்டின் முழக்கமாக இருந்து வருகிறது.

(3) தமிழகச் சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.

(4) எல்லாக் கட்சிகளும் 7 பேர் விடுதலையை வரவேற்று இருக்கின்றன.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அதில் தனக்கு உடன்பாடு இல்லை என்ற கருத்தைத் தெரிவித்து இருக்கிறது. அது அவர்களின் கட்சி கருத்து ஆகும். நாமோ சட்டமன்றத் தீர்மானத்தை நிறைவேற்றி அரசியல் உரிமையைக் காப்பாற்ற வேண்டியவர்களாக இருக்கின்றோம். மேலும் முன்னாள் பிரதமர் இராஜீவ் குடும்பத்தினர் 7 பேர் விடுதலை தொடர்பாக எந்த ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை. வரவேற்கவே செய்து இருக்கிறார்கள் என்பது இதில் குறிப்பிடத்தகுந்த அம்சமாகும்.

மனிதநேயமும், அரசியல் உரிமையும் பின்னிப்பிணைந்திருக்கிற ஒரு பிரச்சினைக்குத் தீர்வு வேண்டியதாக இருக்கிறது. இது வெறும் சட்டப் பிரச்சினை மட்டுமல்ல; ஒரு தலைமுறைக்கு மேல் பேசப்பட்டு வருகிற பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 7 பேர் விடுதலையை வேண்டி ஒரு கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து இருக்கிறார். முதல்வரின் இந்தக் கனிவான கடிதத்தைப் பரிசீலனைச் செய்து குடியரசுத் தலைவர் நல்ல முடிவு எடுத்து அவர்களின் விடுதலைக்கான உத்தரவை அறிவிப்பார் என்று நாம் திடமாக நம்புகிறோம்.

Also Read: “நீட்.. 7 பேர் விடுதலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவை எடுப்பார்”: அமைச்சர் ரகுபதி பேச்சு