murasoli thalayangam
அதிமுகவின் திட்டங்கள் கசிந்துவிட்டதா? இதுதான் கட்சி நடத்தும் ஒழுங்கு லட்சணமா? - முரசொலி தலையங்கம் சாடல்!
தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு முன்பாகவே தி.மு.க. தேர்தல் களப்பணியைத் தொடங்கிவிட்டது. இப்போது வேட்பாளர் அறிவிப்பில் முடிந்து இருக்கிறது. தி.மு.க. அணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, வி.சி.க., முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, அகில இந்திய பார்வர்டுபிளாக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலைக் கட்சி என 12 கட்சிகள் இடம் பெற்று இருக்கின்றன.
இவர்களுக்கு தொகுதிகள் இத்தனை என்றுவிவாதித்து பிரித்துக் கொடுக்கப்பட்டு தொகுதிகளின் தேர்வுகள் முடிந்து இன்று வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கலாம். தி.மு.க.வின் அணுகு முறையும் உடன்பாடு காண வந்த கட்சிகளின் நேரிய பண்பும், ஊடகத்தினரை வியக்க வைத்திருக்கிறது. இந்திய மாநிலங்களில் எங்கும் நடைபெற்றிராத வியப்பு இது! இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட இருக்கிறார்கள்.
அதற்கு முன்பாக‘கொள்கைப் பிரகடனம்’ ஒன்று 7 புள்ளிகளை கொண்டதாக பத்தாண்டு திட்டமாகத் திருச்சியில் வெளியிடப்பட்டது. தலைமைக் கழகத்தின் முதன்மைச் செயலாளர், கே.என்.நேரு திருச்சியில் புத்தொளி வீசும் ஒரு நகரத்தையே படைத்துக் காட்டினார். திருச்சி - சிறுகனூர் - பெருகனூர் ஆயிற்று. 400+300=700 ஏக்கர் பரப்பளவில் ஒளி வெள்ளத்தில் மனிதர்கள் மிதந்து வந்ததைப் பார்த்தோம்.
அந்த ஒளி வெள்ள மக்கள் கடலின் திரட்சியில் ‘இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் நமது கழக அரசு அமைந்தால் ஆயிரம் ரூபாய் தரப்படும்’ என்ற அறிவிப்பை மகிழ்ச்சியோடு கழகத் தலைவர் ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். தொலைக்காட்சிகளிலும், நாளேடுகளிலும் அந்தச் செய்திமுக்கிய இடம் பெற்றது. தமிழ்நாடெங்கும் அது 24 மணி நேரத்தில் பெருஞ்செய்தி ஆயிற்று. இதைக் கண்டு நமது அரசியல் எதிரிகளான அ.இ.அ.தி.மு.க.வினர் கலங்கிப் போனார்கள்.
திருச்சி சிறுகனூர் அவர்களை பெரும்பாடுபடுத்திவிட்டது. அதை அவர்கள் எப்படி வெளிக்காட்டிக்கொள்வார்கள்? எடப்பாடி பழனிசாமியைப் பார்த்து, ‘திருச்சியில் நடந்த தி.மு.க.வின் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?’ என்று செய்தியாளர்கள் கேட்கிறார்கள். அவரின் பதில்: ‘சமீபத்தில் தலைவாசலில் மகளிர் குழுக் கூட்டம் நடத்தினேன். 4 சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து சுமார் 40 ஆயிரம் பேர் வந்து இருந்தார்கள்.
ஆனால், தமிழகம் முழுவதும் தி.மு.க. நடத்திய பொதுக்கூட்டத்தில் ஒரு இலட்சம் பேர் தான் கலந்துள்ளனர். போட்ட நாற்காலிகள் கூட 56 ஆயிரம் தான்! எண்ணிக்கை குறித்த எல்லா தகவல்களும் இருக்கிறது. இதிலேயே கட்சியின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம்.’எடப்பாடி பழனிசாமியின் பதிலிலிருந்து அவர் உள்ளத்தில் பள்ளம் இருக்கிறது என்பதை நாம் நன்றாக உணர்ந்து கொள்ளலாம்.
இதைப் பற்றி ஏடுகளில் வராத செய்தியை தந்தி டி.வி.யில் நாம் பார்க்க நேர்ந்தது. அ.இ.அ.தி.மு.க.வின் தலைமை நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள், ரூ.1000 அறிவிப்பைப் பற்றி கேட்கிறார்கள். ‘நான்தான் ரூ.1500 என்று சொல்லிவிட்டேனே’ என்கிறார். ‘அவர்கள் அறிவித்ததைத் தான் நீங்கள் அதன் பிறகு அறிவித்திருக்கிறீர்கள் என்பதாகாதா’ என்று அந்தச் செய்தியாளர் கேட்கிறார். அதற்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதிலிலிருந்துதான் அவர் கட்சி நிர்வாகத்தைப் பற்றியும், அவரின் நிர்வாகத்தைப் பற்றியும் நாடே புரிந்துகொள்ளும்படியான வாய்ப்பை உருவாக்கி தந்து இருக்கிறார்.
அப்படி என்ன அந்தப் பதிவில் இருக்கிறது என்றால் ரூ.1000 அறிவிப்பு திட்டம் பற்றி அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரித்து வருவதாகவும், அந்த அறிக்கையில் அந்தத் திட்டம் உள்ளது என்றும், அது எப்படியோ கசிந்து தி.மு.க.வுக்குச் சென்று விட்டது என்றும், அதனால் அவர்கள் அறிவிக்க ஏதுவாயிற்று என்ற பொருள்படி கூறினார். இதை எடப்பாடி சிரித்துக் கொண்டே கூறுகிறார்.
Also Read: “தாழ்ந்த தமிழகத்தை தலைநிமிர வைக்க புறப்பட்டுவிட்டார் ஒரு தலைவர்” - முரசொலி தலையங்கம் புகழாரம்!
கே.பி.முனுசாமி உட்பட அவருடைய குழாத்தினரும் சிரிக்கிறார்கள். இதன் பொருள் என்ன? பச்சைப்பொய் சொல்கிறார்கள். ஒரு செய்தி உங்கள் கட்சியில் கசிகிறது. அது தி.மு.க.வுக்குச் செல்கிறது என்றால் நீங்கள் கட்சியை நடத்தும் ஒழுங்கு இலட்சணம் வெளிப்படுகிறது. நீங்கள் சொல்வது பொய் என்று அப்பட்ட மாகத்தெரிவதால் உங்களிடம் சரக்கு இல்லை என்று இன்னொரு பொருளும் அதற்கு உண்டு.
ஆக, அ.இ.அ.தி.மு.க.வினரை கழகத்தின் ரூ.1000 அறிவிப்பு ஒரு கலக்கு கலக்கி இருக்கிறது. நமது கழகத் தலைவர் ஸ்டாலின், இல்லத்தரசிகளின் திட்டத்தை அறிவித்தவுடன் இன்னும் சில கட்சிகள் அது எங்கள் திட்டம் ‘நாங்கள் அதனை அப்படிச் சொல்லியுள்ளோம். இவர்கள் இப்படிச் சொல்கிறார்கள்’ என்று விளக்கம் அளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
வாதத்திற்கு நீங்கள் எல்லாம் சொன்னதை எழுத்துக்கு எழுத்து கழகத் தலைவர் ஸ்டாலின் சொன்னதாக வைத்துக் கொண்டாலும், அது ஏன் அப்போது மக்களால் பேசப்படவில்லை என்பதை நாடு அறியாமல் இல்லை. ‘சுழற்ற வேண்டியவர்கள் வாளை சுழற்ற வேண்டுமே தவிர, வாளைப் பிடிக்கவே தெரியாதவர்கள் எப்படி அதனை சுழற்ற முடியும்’ என்றே நமக்கு இந்தப் பிரச்சினையில் கேட்கத் தோன்றுகிறது. தி.மு.க.வின் அணுகுமுறைகள் அதன் அணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பண்பும், அன்பும் நாட்டு அரசியல் சூழலும் அவற்றை அவர்கள் உணர்ந்த பரிபக்குவமும் அவர்களின் பெரும் பொறுப்பை வெளிக்காட்டிநிற்கின்றன.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது இங்கே அமைந்த கூட்டணியின் நெருக்கம் போல் இந்தியா முழுமையும் அமைந்து இருந்தால் பா.ஜ.க.வின் வெற்றி நிச்சயமாக நிகழ்ந்திருக்க முடியாது என்று அப்போது பேசப்பட்டது. அதைப் போலவே ஏப்.6-இல் நடைபெற இருக்கிற தமிழகச் சட்டமன்றத் தேர்தலின் போதும், கூட்டணி மேலும் பலமாக அமைந்து இருப்பது வெற்றியை நோக்கிய தி.மு.க.வின் அணுகுமுறையே என்று அரசியல் பார்வையாளர்கள் நிச்சயமாக பாராட்டுவார்கள்.
Also Read
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!