M K Stalin
‘ரெஸ்ட்’ இல்லாமல் உழைக்கும் பெண்களுக்கு தரும் ‘ரெஸ்பெக்ட்’ உரிமைத்தொகை : சேலத்தில் முதலமைச்சர் பேச்சு!
கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (15.04.2026) சேலத்தில் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையின் விவரம்:
சேலம் - மலைகளின் மாவட்டம் என்று சொல்வார்கள். இங்கே பார்த்தால், மலைகளை மிஞ்சும் அளவுக்கு முழுக்க முழுக்க மகளிர் படை சூழ்ந்திருக்கிறது. மகளிர் ஒவ்வொருவரும் ஃபயராக இருக்கிறீர்கள்! சேலம் என்றால் ஸ்டீல்தான்! அதேபோன்று, ஸ்டாலின் என்ற பெயருக்கு அர்த்தமும் ஸ்டீல்தான்! ஸ்டீல் சிட்டிக்கு ஸ்டாலின் வந்திருக்கிறேன்!
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்திற்கு தண்ணீர் வழங்கும் மேட்டூர் அணை!
ஆங்கிலேயர்களுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்டுத் தியாக பூமியான, சங்ககிரி கோட்டை அமைந்துள்ள மண், இந்த சேலம் மண்!
குளு குளு காற்று வீசும் ஏற்காடு அமைந்திருக்கும் மாவட்டம்! ஏற்காடு போன்றே, சேலம் மக்களும் ரொம்ப ‘கூல்’ ஆனவர்கள்! சேலத்தில் இன்னொரு முக்கியமான இடம் இருக்கிறது. முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் நட்புக்கு அடித்தளமிட்ட, மாடர்ன் தியேட்டர்ஸ்!
அந்தக் காலத்திலேயே, தென்னிந்திய சினிமாவின் தலைநகரமாக இருந்தது, இந்த சேலம்! அந்த முக்கியத்துவம் இங்கு உரையாற்றிய என் அன்புச் சகோதரர் கலைஞானி கமல்ஹாசன் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
அதுமட்டுமல்ல, நம் நினைவை விட்டு நீங்காத சேலத்துச் சிங்கம் அண்ணன் வீரபாண்டியார் அவர்களின் மண், இந்த சேலம் மண்!.
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற உங்கள் ஆதரவைக் கேட்டு வந்திருக்கிறேன். முதலில், உங்கள் அனுமதியோடு நம்முடைய வெற்றி வேட்பாளர்களை இப்போது அறிமுகம் செய்யலாமா!
முதலில், சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் மாவட்டச் செயலாளர் – அமைச்சர் ராஜேந்திரன். நான் இளைஞரணியைத் தலைமையேற்று நடத்திய காலத்தில் இருந்து, என்னோடு இருப்பவர். சுற்றுலாத் துறையில் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தவர். அவருக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்கினை வழங்கிட வேண்டும்.
அடுத்து, சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் தே.மு.தி.க.வைச் சேர்ந்த ஆர். மோகன்ராஜ் அவர்கள். நினைவில் வாழும் என்னுடைய ஆருயிர் சகோதரர் கேப்டன் விஜயகாந்த் – அன்புச் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரின் ஆதரவு பெற்ற வேட்பாளர். தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராகப் பணியாற்றியவர். அவருக்கு நீங்கள் எல்லாம் முரசு சின்னத்தில் வாக்குகளை அளிக்க வேண்டும்.
அடுத்து, சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் எம். லோகநாதன் அவர்கள். சேலம் மாவட்டக் கழகத்தின் நெசவாளர் அணி அமைப்பாளர். தொகுதி மக்களுக்கு நன்றாக அறிமுகமானவர். அவருக்கு, உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் ஆதரவு தந்திட வேண்டும்.
அடுத்து, கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் கு. சின்னதுரை. சேலம் கிழக்கு மாவட்டத் துணைச் செயலாளர். தலைவாசல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, கெங்கவல்லிக்குப் பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டு வந்தவர். அவருக்கு நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தந்திட வேண்டும்.
அடுத்து, ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த எஸ்.கே. அர்த்தநாரி. சுதந்திரப் போராட்டத் தியாகி சுப்பிரமணி அவர்களின் அன்புப் பேரன். மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர். அவருக்கு, கை சின்னத்தில் உங்கள் ஆதரவை தந்திட வேண்டும்.
அடுத்து, ஏற்காடு சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் டி.எம். ரேவதி மாதேஸ்வரன். ஆசிரியர். சேலம் கிழக்கு மாவட்ட மகளிர் அணித் துணைச் செயலாளர். அவருக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்கினை வழங்கிட வேண்டும்.
அடுத்து, மேட்டூர் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் மிதுன் சக்கரவர்த்தி. கொளத்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர். உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி, பாலமலைக்குத் தார் சாலை அமைக்க ஆணை பெற்று வந்தவர். அவருக்கு, நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தந்திட வேண்டும்.
அடுத்து, சங்ககிரி சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் மு. மணிகண்டன். சேலம் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர். தம்பி மணிகண்டனுக்கு, உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தந்திட வேண்டும்.
அடுத்து, வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் டாக்டர் ஏ.கே. தருண் அவர்கள். சேலத்துச் சிங்கம் அண்ணன் வீரபாண்டியார் குடும்பத்தைச் சேர்ந்தவர். என் அருமைத் தோழன் மறைந்த செழியனின் மருமகன். தி.மு.க. ஐ.டி.விங் மாநிலத் துணைச் செயலாளர். அவருக்கு, உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தந்திட வேண்டும்.
அடுத்து, எடப்பாடி சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் சி. காசி. கழகத் தொழிலாளர் அணி மாநிலத் துணைச் செயலாளர். ஜலகண்டபுரம் பேரூராட்சியில் மூன்று முறை தலைவராக இருந்தவர். அவருக்கு எடப்பாடி மக்கள் உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தந்திட வேண்டும்.
அடுத்து, ஓமலூர் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் தே.மு.தி.க.வைச் சார்ந்த ஏ.ஆர். இளங்கோவன். என்னுடைய ஆருயிர் சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தீவிர விசுவாசி! தே.மு.தி.க.வில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். அவருக்கு முரசு சின்னத்தில் வாக்கினை வழங்கிட வேண்டும்.
இந்த 11 பேரின் வெற்றி உறுதியா? உறுதி (மக்கள்). நன்றி! வேட்பாளர்கள் இப்போது உட்காரலாம்! பெண்களே சொல்லிட்டார்கள். இனி எந்த சக்தியாலும் உங்கள் வெற்றியைத் தடுக்க முடியாது! சீட்டு கன்ஃபார்ம்!
தலைவர் கலைஞர் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தபோதுதான் – சேலம் உருக்காலை, சேலம் ரயில்வே கோட்டம், பெரியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பெரிய சாதனைகள் சேலம் மாவட்டத்திற்கு வந்திருக்கிறது! அந்த வழியில் கடந்த 5 ஆண்டுகளில் நம்முடைய திராவிட மாடல் அரசு, சேலத்திற்காகச் செய்த ஒரு சிலவற்றை மட்டும் மிகவும் சுருக்கமாகச் சொல்கிறேன். நேரம் ஆகிவிட்டது.
129 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம்,
வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்களுக்கான உற்பத்தி மையம்,
கருப்பூரில் மினி டைடல் பூங்கா,
சேலம், மேட்டூர், ஆத்தூரில் அறிவுசார் மையங்கள்,
அம்மாபேட்டையில் அரசு புறநகர் மருத்துவமனை,
எடப்பாடி, மேட்டூரில் புதிய பேருந்து நிலையங்கள்,
கருப்பூர் பல்நோக்கு விளையாட்டு அரங்கம்,
மேட்டூர், எடப்பாடி மற்றும் சங்ககிரியில் மினி ஸ்டேடியம் அமைக்கப்பட்டு வருகிறது.
இன்னும் நிறைய இருக்கிறது. சொல்ல நேரம்தான் இல்லை. இங்கு இத்தனை பெண்கள் இருக்கிறீர்கள். நீங்கள் அனைவருமே விடியல் பேருந்தில் பயணித்திருப்பீர்கள். ஆட்சிக்கு வந்த முதல் நாள் நான் போட்ட முதல் கையெழுத்தே, இந்தத் திட்டத்திற்குத்தான்! எவ்வளவோ திட்டங்கள் இருந்தாலும், முதல் திட்டமாக இதை ஏன் செலக்ட் பண்ணினேன் தெரியுமா? “திராவிட மாடல் ஆட்சியே மகளிருக்கான ஆட்சியாகத்தான் இருக்கப் போகிறது!” என்ற என்னுடைய மெசேஜ் அனைத்துப் பெண்களுக்கும் போய்ச் சேர வேண்டும் என்று நினைத்தேன்!
நான் போடும் முதல் கையெழுத்திலேயே, “ஸ்டாலின் ஆட்சியில் விடியல் வந்தது” என்ற மெசேஜ், சென்னை சிட்டியில் இருந்து, சின்ன கிராமம் வரை போய்ச் சேர வேண்டும் என்றுதான் அந்த முடிவை எடுத்தேன்! தமிழ்நாட்டுப் பெண்களுக்காக, குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன் என்று நான் கொடுத்த பவர்ஃபுல் சிக்னல் அது!
இன்றைக்கு 900 கோடி முறை விடியல் பேருந்துகளில் பெண்கள் பயணித்திருக்கிறார்கள். இந்தத் திட்டத்தைப் பற்றிச் சர்வே எடுக்கச் சொன்னேன். அதன் ரிசல்ட் பார்த்து, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! மாதம் 800 ரூபாயிலிருந்து 900 ரூபாய் வரை பெண்களுக்கு இதனால் காசு மிச்சமாகிறது என்று அதில் சொல்லியிருந்தார்கள். அது எதிர்பார்த்ததுதான்!
ஆனால், நான் எதிர்பார்க்காத இன்னொன்றும் அந்த சர்வேயில் தெரிய வந்தது. இப்படி மிச்சமாகும் பணத்தில், பெண்கள் தாங்கள் விரும்பிய உணவை, வாங்கிச் சாப்பிடுவதாகச் சொல்லி இருக்கிறார்கள். அதைப் பார்த்து அவ்வளவு மகிழ்ச்சி!.
வீட்டில் இருக்கும் நம்முடைய பெண்கள் எப்போதுமே, தான் சாப்பிடவில்லை என்றாலும், மற்றவர்கள் சாப்பிட்டாலே போதும் என்று நினைப்பார்கள். ஞாயிற்றுக்கிழமை கறி வாங்கினால்கூட, கணவர், பிள்ளைகள் சாப்பிடட்டும் என்று நினைப்பார்கள். யதார்த்தத்தைச் சொல்கிறேன்.
ஆனால், அப்படி இருக்காதீர்கள். நீங்களும் நன்றாகச் சாப்பிட்டு ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும். பெண்களான நீங்கள் ஸ்ட்ராங்காக இருந்தால்தான், நம்முடைய தமிழ்நாடும் ஸ்ட்ராங்காக இருக்கும்.
அதுமட்டுமல்லாமல், பெண்கள் பேருந்தில் பயணிப்பதும் இதனால் அதிகரித்திருக்கிறது. புள்ளிவிவரத்தோடு சொல்ல வேண்டும் என்றால், விடியல் பயணம் திட்டம் வந்த பிறகு, பேருந்துகளில் பெண்கள் பயணிப்பது, 40 விழுக்காட்டிலிருந்து 70 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. நினைத்தால் நினைத்த இடத்திற்கு, யாரையும் எதிர்பார்க்காமல் என் சகோதரிகள் பயணிக்கிறார்கள்.
அதிகாரிகள் கூடுதல் செலவினம் என்று சொன்னார்கள். நான் சொன்னேன். இது செலவினம் இல்லை. நமக்குக் பிடித்தவர்களுக்காக நாம் பண்ணும் எதையும் செலவாக – சுமையாக கருதக் கூடாது! நம்முடைய சகோதரிகள், நம்முடைய மகள்கள் சுதந்திரமாகப் பயணிக்க வேண்டும்; நன்றாகப் படிக்க வேண்டும்; வேலைகளுக்குப் போக வேண்டும்; கை நிறையச் சம்பாதிக்க வேண்டும். அதற்கு நாம் செய்யும் முதலீடு இது. இதற்காக எத்தனை ஆயிரம் கோடி ஆனாலும் பரவாயில்லை என்று நான் சொல்லிவிட்டேன்.
அடுத்து, அமையவிருக்கும் நம்முடைய ஆட்சியில் இன்னும் கூடுதலாக பேருந்துகளை நாம் வாங்குவதற்கு திட்டமிட்டு, அதை விரிவுபடுத்தப் போகிறோம். அடுத்து, முக்கியமானத் திட்டம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்! 2021-இல் நாம் பெற்ற மாபெரும் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது இந்தத் திட்டம்! ஆகவே, இந்தத் திட்டத்தைப் பற்றி நான் அதிகம் உங்களிடத்தில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதை நிறைவேற்றவே முடியாது என்று நிறைய பேர் சொன்னார்கள். சவால் விட்டார்கள். நான் நிறைவேற்றிக் காட்டினேன்! நிறைவேற்றிக் காட்டியது மட்டுமல்ல, திராவிட மாடல் 2.0-வில் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப் போகிறேன்.
இந்தப் பணத்தை உதவித்தொகை என்று சொல்லாமல், உரிமைத்தொகை என்று மிகவும் பர்ட்டிகுலராக நான் அந்தப் பெயரைச் செலக்ட் பண்ணினேன்! ஏனென்றால், பெண்களின் உழைப்பு இல்லாமல், மனிதச் சமூகம் இல்லை! அதுவும், இந்தியா போன்ற விவசாயம் நிறைந்த நாட்டில், பெண்கள்தான் அந்த விவசாய வேலையில் அதிகமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.
அதுவும், வீட்டில் நம்முடைய பெண்கள் உழைக்கும் உழைப்பு, சாதாரண உழைப்பு இல்லை! எல்லோருக்கும் முன்னால் யார் எழுந்திருக்கிறார்கள்? பெண்கள்தான் காலையில் எழுதிருக்கிறார்கள். வீட்டைப் பெருக்கி, தெருவில் தண்ணீர் தெளித்துச் சுத்தம் செய்கிறார்கள். குளித்துவிட்டு, டீயோ, காபியோ போட வேண்டும், குழந்தைகளை ஸ்கூலுக்கு ரெடி பண்ணி அனுப்ப வேண்டும், சமைக்க வேண்டும், சமைப்பதை விடப் பெரிய தொல்லை - என்ன சமைப்பது என்று ஒவ்வொரு வேளையும் யோசிப்பது, அடுத்த தொல்லை, பாத்திரம் கழுவுவது. அப்படியே பாத்திரத்தை போட்டு வைக்காமல் கழுவி, அதை கவிழ்த்து, சாய்த்து வைத்தால்தான் பல பெண்களுக்கு நிம்மதி. சரிதானே?
இது முடிந்ததும், துணியைத் துவைத்து, காயப் போட்டு, மடித்து வைக்க வேண்டும். மழைக்காலம் என்றால் இன்னும் கஷ்டம். அதில்கூட வீட்டில் இருக்கும் ஆண்கள் சட்டை, பேண்ட் எல்லாம் அப்படியே போட்டுவிடுவார்கள். பாக்கெட்டில் எதாவது இருக்கிறதா என்று பெண்கள்தான் செக் பண்ணிவிட்டு பிறகு துவைக்க வேண்டியிருக்கும். வீட்டில் பெரியவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை எல்லாம் வாங்க வேண்டும். எந்தக் காய்கறி, எவ்வளவு விலை விற்கிறது என்று பார்த்து, குடும்ப பட்ஜெட்டுக்கு ஏற்ற மாதிரி அனைத்தையும் வாங்க வேண்டும்.
மாவு அரைத்து வைக்க வேண்டும், மிளகாய் காய வைக்க வேண்டும், தண்ணீர் பிடித்து வைக்க வேண்டும், பிள்ளைகளை ஹோம் வொர்க் பண்ண வைக்க வேண்டும். அடேங்கப்பா… இதையெல்லாம் சொல்லும்போதே எனக்கே டயர்டாகிவிட்டது. அப்போது இதையெல்லாம் செய்வது எவ்வளவு கஷ்டம்!
இதெல்லாம் செய்துவிட்டு ஆபிசுக்கோ, தொழிற்சாலைகளுக்கோ, வேறு வேலைக்களுக்குச் செல்லும் பெண்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். சமூகத்தில் கூலித் தொழிலாளராக இருந்தாலும், டீச்சராக இருந்தாலும், அரசு ஊழியராக, I.T. ஊழியராக இருந்தாலும் நான் இப்போது சொன்ன வீட்டு வேலைகளில் இருந்து பெண்களுக்கு ரெஸ்ட் இருக்காது. இவர்கள் அனைவரும் ஒரே ஒரு நாள் ஸ்டிரைக் பண்ணால்கூட, பல குடும்பங்கள் இயங்காது! எந்த ஆணாலும் நிம்மதியாகத் தன்னுடைய வேலையைச் செய்ய முடியாது!
ஆனால், “உங்க மனைவி என்ன பண்றாங்க?” என்று கேட்டால், பல பேர் மிகவும் சாதாரணமாக “வீட்டுல சும்மாதான் இருக்காங்க” என்று சொல்லிவிடுவார்கள். இதை மாற்ற வேண்டும், பெண்கள் இந்தச் சமூகத்திற்கும் - குடும்பங்களுக்கும் செய்யும் பங்களிப்பை அங்கீகரிக்க வேண்டும் என்று கொண்டு வரப்பட்டதுதான் உரிமைத்தொகை என்று நான் அழுத்தம் திருத்தமாக குறிப்பிடுகிறேன்!
ஆயிரம், இரண்டாயிரம் என்பதைத் கடந்து, ‘ரெஸ்ட்’ இல்லாமல் உழைக்கும் நம்முடைய பெண்களுக்கு இந்த அரசு தரும் ‘ரெஸ்பெக்ட்’தான் உரிமைத்தொகை! முடியவே முடியாது என்று சொன்ன திட்டம், இன்றைக்கு ஒரு கோடியே 31 இலட்சம் பெண்களுக்குக் கிடைக்கிறது!
அடுத்து அமையும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில், ஆயிரம் ரூபாய் என்பது 2 ஆயிரம் ரூபாயாக உயரப் போகிறது. தேவைப்படக்கூடிய பயனாளிகளின் எண்ணிக்கையும் கண்டிப்பாக உயரும்!
இதேபோன்று, மற்றுமொரு புரட்சித் திட்டம் புதுமைப்பெண் திட்டம்! பெண்கள் உயர்கல்வியில் சேர்வது, அதுவும், கிராமப்புற - அரசுப் பள்ளி மாணவிகள் கல்லூரியில் சேர்வது குறைந்து கொண்டே வந்தது. படிப்புக்குப் பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று உருவாக்கிய திட்டம்தான், இந்தத் திட்டம்!
இந்தத் திட்டம் வந்த பிறகு, பெண்கள் கல்லூரியில் சேருவது 34 விழுக்காடு அதிகரித்திருப்பதாக ஆய்வு முடிவுகள் வந்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு படிப்பை முடித்த பெண்கள்கூட, இந்தத் திட்டத்தால் திரும்பப் படிக்க வந்திருக்கிறார்கள்.
’கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில், இதுபோன்று திருமணத்திற்குப் பிறகு திரும்பப் படிக்க வந்த ஒரு பெண், இந்தத் திட்டத்தின் பயனை உணர்ச்சி பொங்க பேசினார். மேத்ஸ் டீச்சர் ஆக வேண்டும் என்று இதன் மூலமாக படித்து முன்னேறிய பிறகு அந்த பெண் பேசினார். நான் அந்த அன்பு மகளை அழைத்து, உச்சிமுகர்ந்து பாராட்டி, உச்சந்தலையில் முத்தம் கொடுத்து, என்னுடைய பேனாவை எடுத்து அன்பளிப்பாகக் கொடுத்தேன். அந்தக் காட்சி தமிழ்நாட்டு மக்கள் நெஞ்சத்தில் நீங்காமல் பதிந்துவிட்டது. இதுதான் புதுமைப்பெண் திட்டத்தின் வெற்றிக்குச் சான்று! பெண்களுக்குக் கணவனைவிட, கல்விதான் பெருந்துணை என காட்டியிருக்கும் திட்டம்தான், புதுமைப்பெண் திட்டம்!
அடுத்து, திராவிட மாடல் 2.0-ஆட்சியில் இனி மாதம் ஆயிரத்து 500 ரூபாயாக, உயரப் போகிறது! அடுத்து, என் மனதிற்கு நெருக்கமான திட்டம். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்! 19 இலட்சம் குழந்தைகளுக்குக் காலையில் சுவையான, சத்தான உணவை வழங்கும் திட்டம்! 19 இலட்சம் தாய்மார்களின் சமையல் சுமையைக் குறைக்கும் திட்டமாக இது அமைந்திருக்கிறது! இதனால், காலையில் அரக்கப் பரக்க எழுந்து சமைக்கத் தேவையில்லாமல், ஒரு அரைமணி நேரம் அவர்கள் கூடுதலாகத் தூங்குவதற்கு இந்தத் திட்டம் பயன்படுகிறது! மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள்… இது உண்மையா… இல்லையா? ஆமாம் (மகளிர்). “ஸ்டாலின் அண்ணனே ஸ்கூலில் சாப்பாடு போடுகிறார்” என அவர்கள் நிம்மதியாகப் பிள்ளைகளை அனுப்புகிறார்கள். இதைவிட எனக்கு வேறு என்ன மகிழ்ச்சி வேண்டும்?
அதேபோன்று, வெளியூர்களில் வேலைகளுக்குச் செல்லும் பெண்கள், அங்கே பாதுகாப்பாக வசதியுடன் தங்குவதற்காக நாம் தொடங்கியிருக்கும் தோழி விடுதிகள்! 19 மாவட்டத்தில் திறந்துவிட்டோம். திராவிட மாடல் 2.0 ஆட்சியில் அனைத்து மாவட்டத்திலும் திறக்கப் போகிறோம். ஒன்றிய அரசே இந்தத் திட்டத்தைப் பாராட்டி, அவர்களும் செயல்படுத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இதுதான் இதன் மிகப்பெரிய வெற்றி!
இதுபோக, தமிழ்நாட்டில் எந்தக் கம்பெனி தொழில் தொடங்கினாலும், பெண்களுக்கு இதனால் எவ்வளவு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றுதான் நான் முதலில் கேட்பேன். பெண்களுக்கு அதிக வேலைகள் கொடுத்தால் அந்தக் கம்பெனிகளுக்கு அரசு சார்பாகக் கூடுதல் சலுகையும் கொடுக்கிறோம்.
இந்தியாவிலேயே முதல் மாநிலமாகப் பெண்களுக்குச் சொத்துரிமை கொடுத்து, பெரியார், அம்பேத்கர் கனவை நிறைவேற்றிய ஆட்சி தி.மு.க. ஆட்சி; அதைச் செய்தவர் கலைஞர். அவர் வழியில், பெண்கள் பெயரில் சொத்துப் பதிவு செய்தால் அதற்கும் கட்டணச் சலுகை அறிவித்திருக்கிறோம்.
அதுமட்டுமல்ல, இப்போது இந்தியா முழுவதும் பேசுபொருளாக இருக்கும் இன்னுமொரு திட்டம்; 14 வயதிற்குட்பட்ட பெண் பிள்ளைகளுக்குக் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டம். 28 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தடுப்பூசிகளை என் மகள்களுக்காகக் கட்டணமில்லாமல் வழங்கச் சொல்லிவிட்டேன்.
இப்படி, முழுக்க முழுக்கப் பெண்களுக்காகவே - பெண்களின் உரிமைகளுக்காகவே செயல்படும் நம்முடைய அரசு. நான் உறுதியாக சொல்கிறேன். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி எப்போதும் பெண்களின் நலனுக்கான ஆட்சி.
நம்மைப் பார்த்து, “பெண்களுக்கான இட ஒதுக்கீடு வரும் நேரத்தில் ஏதோ சதி செய்கிறார்கள். தி.மு.க.வுக்குப் பிடிக்கவில்லை” எனப் பழனிசாமி பேசியிருக்கிறார்.
33 பர்செண்ட் இட ஒதுக்கீடு என்றால் என்ன என்பது, பழனிசாமிக்குத் தெரியும் முன்பே, உள்ளாட்சிகளில் அதைச் செயல்படுத்தியவர் நம்முடைய தலைவர் கலைஞர்! இப்போது அதை 50 விழுக்காடாக நடைமுறைப்படுத்தியவன்தான், உங்கள் முன்னால் நிற்கும் இந்த ஸ்டாலின்!
சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 விழுக்காடு வேண்டும் என்று பல ஆண்டுகாலமாகத் தி.மு.க. போராடி வருகிறது. பா.ஜ.க. நினைத்தால் அதை எப்போதோ கொண்டு வந்திருக்கலாம். நாங்களும் அதைத்தான் கேட்கிறோம். ஆனால், தேவையே இல்லாமல் சென்சஸ், தொகுதி மறுவரையறை என, சம்பந்தம் இல்லாத விஷயங்களோடு அதை முடிச்சுப் போட்டு, அது நிறைவேறக் கூடாது என்று பா.ஜ.க. நினைக்கிறது.
மிஸ்டர் பழனிசாமி! முதலில் புரிந்து கொள்ளுங்கள். இங்கே பிரச்சினை பெண்கள் இட ஒதுக்கீடு அல்ல! அதை அனைவருமே வரவேற்கிறோம்! தொகுதி மறுவரையறைதான் இங்கே பிரச்சினை! தமிழ்நாடே கொதித்துப் போயிருக்கிறது. நாளைக்கு அனைவர் வீட்டிலும் கருப்புக் கொடி ஏற்றப் போகிறோம்! பெண்கள் எல்லாம் பா.ஜ.க.வின் இந்த அலங்கோலச் சட்டத்திற்கு காலையில் வீட்டின் வாசலில் கோலம் மூலமாகவே எதிர்ப்புத் தெரிவிக்கப் போகிறீர்களா? இல்லையா? ஆமாம் (பெண்கள்)! இதில் அரசியல் வேறுபாடுகளுக்கு இடமே இல்லை. ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் ஆபத்து சூழ்ந்திருக்கிறது.
எடப்பாடி அவர்களே… கடைசி வரை கோழையாக – அடிமையாக இருந்தால், தமிழ்நாட்டின் களங்கமாகத்தான் வரலாற்றில் நீங்கள் நினைவுகூரப்படுவீர்கள்! இது வரலாறு உங்களுக்குக் கொடுத்திருக்கும் கடைசி வாய்ப்பு! ஒரு முறை - ஒரே ஒரு முறையாவது பா.ஜ.க.வை எதிர்த்துத் தைரியமாகப் பேசுங்கள். உறுதியான எஃகுக்கு பெயர் பெற்ற ஊர் இந்த சேலம்! இப்படிப்பட்ட பெருமைமிகு ஊரில் பிறந்துவிட்டு, ஏன் டெல்லிக்கு முதுகு வளைந்தே இருக்கிறீர்கள்? வெட்கமாக இல்லையா? பக்கத்தில் இருக்கும் கேரளா, தெலங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்கள்கூட அவர்கள் மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கிறார்கள்.
கட்சி வேறுபாடுகளை மறந்து ஒரே குரலில் பேசுகிறார்கள். நீங்கள் தமிழன்தானே? தமிழனாக இருந்துவிட்டுத் தமிழ்நாட்டுக்கு இப்படித் துரோகம் செய்யலாமா? உங்கள் துரோகங்களுக்குத் தண்டனை மே 4 அன்று கிடைக்கத்தான் போகிறது! ஒட்டுமொத்தப் பெண்களின் ஆதரவோடு தி.மு.க. மீண்டும் ஆட்சியமைக்கத்தான் போகிறது! அதற்கான ஒத்திகைதான் நான் வெளியிட்டிருக்கும் தி.மு.க. தேர்தல் அறிக்கை! இந்தத் தேர்தலின் சூப்பர்ஸ்டார் இதுதான்! இப்போது நம்முடைய சூப்பர்ஸ்டாரின் சூப்பர் ஹிட் அறிவிப்புகளைச் சொல்லவா?
முதலில், இல்லத்தரசி திட்டம்! இந்த ஒரு அறிவிப்பிலேயே நம்முடைய எதிரிகள் எல்லாம் க்ளோஸ் ஆகிவிட்டார்கள். எட்டாயிரம் ரூபாய்க்கு நாம் தரப்போகும் இந்தக் கூப்பனை வைத்து, உங்களுக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருளை வாங்கிக் கொள்ளலாம்! வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்டர், மிக்சி, மைக்ரோ-வேவ் அவன், இண்டக்ஷன் ஸ்டவ் - இவற்றில் எதை வாங்கலாம் என்று இப்போதே பெண்கள் எல்லாம் டிஸ்கஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். வீட்டுக்காரரிடம் எல்லாம் கேட்காதீர்கள். அவர்கள் உங்களை குழப்பிவிடுவார்கள். எதாவது பிரச்சினை என்றால், “அண்ணனிடம் சொல்லிவிடுவேன்” என்று சொல்லிவிடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன். இது முழுக்க முழுக்க உங்களுக்காக கொண்டு வந்திருக்கும் திட்டம்! பெண்கள்தான் டிசைட் பண்ண வேண்டும்! பெண்களின் வீட்டு வேலைச் சுமையைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவே நான் அறிவித்திருக்கும் திட்டம் இது!
இப்போதே பெண்கள் அனைவரும் கணக்குப் போட ஆரம்பித்துவிட்டார்கள். என்ன கணக்கு? பொங்கலுக்கு முன்பு, சொல்லிவிட்டு 3 ஆயிரம்! பிப்ரவரியில், சொல்லாமலேயே 5 ஆயிரம்! ஆகமொத்தம் 8 ஆயிரம்! அடுத்து, இல்லத்தரசி கூப்பனிலும் ஸ்டாலின் அண்ணன் 8 ஆயிரம் கொடுக்கிறார். ஆகமொத்தத்தில், “எட்டு + எட்டு! உதயசூரியனுக்குத்தான் எங்க ஓட்டு” என முடிவெடுத்துவிட்டார்கள்.
இதுமட்டுமல்லாமல், பெண்கள் வேலைக்கு செல்வதை எளிதாக்க ஆயிரம் குழந்தைகள் காப்பகம் உருவாக்கப் போகிறோம். மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்ட மகளிருக்கான திட்டங்கள் பெருமளவு தேர்தல் அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இப்போது சொல்லுங்கள்? பெண்கள் அனைவரும் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குத்தானே வாக்களிப்பீர்கள்? சத்தமாக! எடப்பாடி வரை கேட்க வேண்டும்! கடந்த சட்டமன்றத் தேர்தலில், சேலத்தில் நான் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. அதில் மறைக்க எதுவும் இல்லை! அதற்காக, ஒன்றிய பா.ஜ.க. அரசு போன்று, திராவிட மாடல் அரசு சேலத்தைப் புறக்கணிக்கவில்லை. திட்டங்களை வாரித் தந்தோம். அதனால்தான், 2024 நாடாளுமன்றத் தேர்தலில், மிகப்பெரிய வெற்றியைச் சேலம் மக்களான நீங்கள் வழங்கினீர்கள்.
அது 2026-இலும் தொடர வேண்டும்! அதற்கு இங்கே மேடையில் இருக்கும் 11 வேட்பாளர்களுக்கும் அவரவருக்குரிய சின்னத்தில் நீங்கள் வாக்களிக்க வேண்டும்! தமிழ்நாடா? டெல்லியா? என்ற இந்த ஜனநாயகப் போரில், தமிழ்நாடு அணிதான் வெல்ல வேண்டும்! தமிழ்நாட்டைக் காக்கக் கழகம்தான் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும். நாடு நலம் பெற - நல்லாட்சி தொடர்ந்திட, ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக!
Also Read
-
#Delimitation : தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொகுதி மறுவரையறை மசோதா.. வடக்கில் வென்று ஆட்சியை பிடிக்கலாம் என்ற நினைப்பு” : முரசொலி விமர்சனம்!
-
தொகுதி மறுவரையறை : திமிரெடுத்த பாஜகவை அடங்கியே ஆக வேண்டும்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
“தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாளை (ஏப்.16) கருப்புக்கொடிப் போராட்டம்!” : முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!
-
தொகுதி மறுவரையறை : வடக்கிற்கு ஆதாயம்... தெற்கிற்கு இழப்பு... தமிழ்நாடு சந்திக்கவிருக்கும் பேராபத்து என்ன?