M K Stalin

நேற்று தர்மேந்திர பிரதான்.. இன்று பியூஷ் கோயல்... அடுத்தடுத்து ஒன்றிய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் சவால்!

கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (05-04-2026) மாலை, மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மதுரையில் இருக்கும் மதுரை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி, திருப்பரங்குன்றம், சோழவந்தான், திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூர் ஆகிய 10 தொகுதிகளின் வேட்பாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசும்போது, ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு பதிலடி கொடுத்தார். அதன் விவரம் வருமாறு :-

இந்தியாவிலேயே அதிகமான திட்டங்கள் தமிழ்நாட்டில்தான் செயல்படுத்தப்படுகிறது. இது தெரிந்தும் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள், எதுவும் தெரியாத மாதிரி நேற்று பேசியிருக்கிறார். பியூஷ் கோயல் அவர்கள் என்ன பேசினார்? “தமிழ்நாட்டில் எந்தத் திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. அரசின் பணம் எல்லாம் எங்கே போகிறது? கடன்சுமை அதிகரித்துவிட்டது, தமிழ்நாடே திவால் ஆகப் போகிறது” என்று எந்தப் புரிதலும் இல்லாமல் பேசியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் எத்தனை திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்பதை, எங்கள் திட்டங்களுக்கெல்லாம் பெயரை மட்டும் மாற்றி அறிக்கை வெளியிட்டிருக்கும் பழனிசாமியிடம் கேளுங்கள். அவர் சொல்வார்.

தமிழ்நாடு அரசின் பணமெல்லாம் எங்கே போகிறது என்று கேட்கிறீர்களே… எல்லாமே நேரடியாக மக்களுக்குதான் போகிறது. ஒரு மாதம் முன்னால் கூட எல்லோருக்கும் 5 ஆயிரம் போனதே! உங்களுக்கு தெரியாதா? அது இங்கு இருக்கும் பயனாளிகள் எல்லோருக்கும் தெரியும்.

நாங்கள் கேட்பது, தமிழ்நாட்டு மக்கள் ஒன்றிய அரசுக்கு கட்டும் வரிப்பணம் எல்லாம் எங்கே போகிறது? தமிழ்நாட்டிற்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்திருக்கிறோம் என்று அவர் சொல்லியிருக்கிறார்.

ஒன்றிய அமைச்சர் கோயல் அவர்களே, அப்படியே, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற நீங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு எவ்வளவு நிதியை கொடுத்திருக்கிறீர்கள் என்பதையும் சேர்த்து சொல்லுங்கள். அப்போதுதானே, தமிழ்நாட்டை நீங்கள் எந்தளவுக்கு வஞ்சிக்கிறீர்கள் என்று தெளிவாக புரியும்!

தமிழ்நாட்டின் கடன் பற்றி பேசியிருக்கிறீர்களே… நேற்று உங்கள் அமைச்சரவை நண்பர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு ஒரு சவால் விட்டேன். இன்று உங்களுக்கு ஒரு சேலஞ்ச் செய்கிறேன்.

தமிழ்நாடு ஒன்றிய அரசுக்கு கொடுக்கும், ஒரு ரூபாய்க்கு பதிலாக திரும்ப எங்களுக்கு எவ்வளவு கிடைக்கிறது? அதுவே, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு எவ்வளவு கிடைக்கிறது? இந்த கம்ப்பேரிசனை வெளிப்படையாக அறிவிக்க உங்களால் முடியுமா? சொன்னால் உங்கள் குட்டு வெளிப்பட்டுவிடும்.

நான் உண்மையை உடைத்து சொல்லவா? பா.ஜ.க. ஆளும் வடமாநிலங்களுக்கு தரும் அதே அளவு நிதிப் பகிர்வை தமிழ்நாட்டிற்கும் நீங்கள் வழங்கினால், தமிழ்நாட்டுக் கடனே அடைந்து, நமக்கு நிதி நெருக்கடியே இருக்காது. எங்கள் பணத்தையே வாங்கிக்கொண்டு, எங்களிடமே பணம் எங்கே போகிறது? என்று கேட்கிறீர்களே… இது நியாயமா? பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது என்று சொல்லுவார்களே… அது இதுதானா!

பா.ஜ.க.வுக்கு தி.மு.க. மீதான கோபம் மட்டுமல்ல, அவர்களுக்கு தமிழ்நாடு மேலேயே வெறுப்புதான். இத்தனை நிதி நெருக்கடியை கொடுத்தும், பொருளாதார வளர்ச்சியில், ஜி.டி.பி. வளர்ச்சியில், தனிநபர் வருமானத்தில், ஆடை, காலணிகள், மின்னணு பொருள் ஏற்றுமதியில், இப்படி எல்லாவற்றிலும் நாம் நம்பர் ஒன் ஆக இருந்தால் வெறுப்பு வரத்தானே செய்யும்! அதற்காக, இந்தியாவின் மிக முன்னேறிய மாநிலத்தை பார்த்து, திவால் ஆகிவிடுவோம் என்ற ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் சொல்வது ரொம்ப ‘டூ மச்’!

பார்த்துக் கொண்டே இருங்கள். N.D.A.-தான் தமிழ்நாட்டில் திவால் ஆகப் போகிறது! நிதி நிர்வாகம் பற்றி தமிழ்நாட்டுக்கு இவ்வளவு அக்கறையாக பாடம் எடுக்கிறீர்களே… பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இந்தியப் பொருளாதாரத்தின் நிலை என்ன? ஆட்சிக்கு வந்தால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை அப்படியே தூக்கி நிறுத்திவிடுவோம் என்று வாய்கிழிய பேசினீர்களா இல்லையா? இன்று, என்ன நிலைமை? வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு பா.ஜ.க. ஆட்சியில் வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

இன்னும் கொஞ்சம் நாளில் செஞ்சுரி போடப் போகிறது! சென்று முதலில் அதை எப்படி தடுப்பது என்று பாருங்கள். பரீட்சையில் தோல்வி பெற்ற மாணவன் வந்து எல்லா பாடப் பிரிவிலும் டாப்பராக இருக்கும் எங்களுக்கு அட்வைஸ் பண்ணலாமா? முதலில் நீங்கள் ‘பாஸ்-மார்க்’ ஆச்சும் பெற்றுவிட்டு வந்து அதன் பிறகு தமிழ்நாட்டு கதையை பேசுங்கள்.

Also Read: ஒன்றிய அரசிடம் உரிமைகளை விட்டுக்கொடுப்பது அடிமைத்தனத்திற்கு ஒப்பானது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!