M K Stalin
பெண்கள் பாதுகாப்பு... போதைப்பொருள்.. - மோடியின் விமர்சனத்துக்கு முதலமைச்சரின் பதிலடி என்ன?
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் ஆண்டுதோறும் ஜன.25-ம் தேதி அனுசரிக்கப்படும் நிலையில், இன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில் காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சியுரை சுருக்கம் வருமாறு :-
பிரதமர் மோடி அவர்களே... தமிழ்நாட்டை அழிக்கும் உங்கள் எண்ணம் பலிக்காது. பக்தர்கள் மனம் மகிழும் ஆட்சியை நடத்துகிறோம். காஞ்சிபுரம், கோயில்கள் நிறைந்த நகரம். இங்குக் குழப்பம் ஏற்படுத்த நினைத்தால், அந்த எண்ணம் நிறைவேறாது. நாடும், நாட்டு மக்களும் அமைதியாக வாழும் இந்த நிலை, சிலருக்கு பிடிக்கவில்லை. நாட்டின் பிரதமரே இந்த நோக்கம் கொண்டவராக இருப்பது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
தமிழ்நாட்டில் போதை மருந்து நடமாட்டம் அதிகமாகிவிட்டது என்று பொத்தாம் பொதுவாகப் பிரதமர் பதவியில் இருந்து அவர் பேசிவிட்டுச் செல்வது சரியல்ல! நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் துறைமுகங்கள் வழியாக கடத்தப்பட்ட 11 ஆயிரத்தி 311 கோடி ரூபாய் அளவிலான போதைப் பொருள் பிடிபட்டிருக்கிறது என்று ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது. அதில் பெரும்பாலானவை குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநில துறைமுகங்களில்தான் சிக்கியிருக்கிறது.
இந்த மாநிலங்களில் யார் ஆட்சி செய்கிறார்கள்? தி.மு.க.வா? இல்லையே! உங்கள் ஆட்சிதானே நடக்கிறது? டபுள் எஞ்சின் என்று சொல்லும், டப்பா எஞ்சின்-தானே அங்கு ஓடுகிறது? இந்தியாவுக்குள் போதைப் பொருள் நுழைவதைத் தடுக்க வேண்டியது, பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும்தான். இந்த ஸ்டாலின் இல்லை. மகாராஷ்டிரா சென்று பேச வேண்டியதை, மதுராந்தகத்திற்கு வந்து பேசிவிட்டுச் செல்வது நியாயமா?
அடுத்து, தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று வேறு பிரதமர் அவர்கள் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். புதுமைப்பெண், விடியல் பயணம், உரிமைத்தொகை, தோழி விடுதி என்று பெண்களுக்காக நாங்கள் செயல்படுத்தும் திட்டங்களால் பெண்களின் சமூகப் பங்களிப்பு தமிழ்நாட்டில்தான் அதிகமாக இருக்கிறது! அதிகமான மாணவிகள் கல்லூரிகளுக்குப் படிக்க வருவது தமிழ்நாட்டில்தான்! இந்தியாவிலேயே அதிகமான பெண்கள் தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பது தமிழ்நாட்டில்தான். இது எதுவும் தெரியாமல், ஆளுநர் ரவி போன்றே பிரதமர் அவர்களும் பேசுவது மிகமிக கண்டனத்துக்குரியது.
ஐந்து மாத கர்ப்பிணிப் பெண்ணான பில்கிஸ் பானு அவர்களைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது உங்கள் குஜராத் அரசுதானே? உலகமே அதிர்ச்சி அடைந்தார்களே! உச்சநீதிமன்றமே அதை இரத்து செய்ததே! நீங்கள் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசலாமா? அதுவும், பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என்று சட்டமன்றத்தில் தடைச்சட்டம் நிறைவேற்றி இருக்கும் இந்த ஸ்டாலின் அரசைப் பற்றி நீங்கள் பேசுவதற்கு உங்களுக்கு யோக்கியதை இருக்கிறதா? அருகதை இருக்கிறதா? குற்றங்கள் அதிகமாக நடக்கிறது என்று பிரதமர் அவர்கள் பேச நினைத்தால், பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசம் சென்றுதான் பேச வேண்டும்! மணிப்பூரில் சென்று கூட பேசுங்கள்!
இன்னொரு கூத்து என்ன என்றால், அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் குற்றமே நடக்கவில்லை என்று சொல்லி அ.தி.மு.க. தொண்டர்களையும் பிரதமர் ஏமாற்றப் பார்த்திருக்கிறார். குஜராத் மோடியா? இந்த லேடியா? என்று தமிழ்நாட்டில் ஊர் ஊராகச் சென்று அம்மையார் ஜெயலலிதா கேட்டார்கள் தெரியுமா? அதெல்லாம் மறந்துவிட்டதா?
“இந்தியாவிலேயே அ.தி.மு.க அரசுதான் ஊழல் அதிகம் நடக்கும் அரசு” என்று நீங்களும் - உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களும் பேசியதாவது ஞாபகம் இருக்கிறதா? இது அனைத்தையும் நீங்கள் மறந்திருக்கலாம், தமிழ்நாட்டு மக்கள் மறக்க மாட்டார்கள். வழக்கம் போன்று, இந்தத் தேர்தலிலும் பா.ஜ.க.விற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதைச் சிறப்பாகச் செய்து அனுப்பத்தான் போகிறார்கள்!
Also Read
-
அடம்பிடித்த வங்கதேசம்! அதிரடி காட்டிய ஐசிசி! டி20 உலகக்கோப்பையில் இருந்து நீக்கப்பட்ட வங்கதேச அணி
-
“உங்களுக்குலாம் அருகதை இருக்குதா?“ - மோடி.. பழனிசாமி.. அமித்ஷா... அடுத்தடுத்து கிழித்தெறிந்த முதலமைச்சர்!
-
தமிழ்மொழித் தியாகிகள் தாளமுத்து - நடராசன் திருவுருவச் சிலைகள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“வீட்டுக்கொரு சோலார்“ திட்ட பரப்புரை! : அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்!
-
“அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!