M K Stalin
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (15.12.2025) சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் முத்தமிழ்ப் பேரவை அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற முத்தமிழ்ப் பேரவையின் இசைவிழாவில் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி, ஆற்றிய உரை.
உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்!
ஒவ்வொரு ஆண்டும் முத்தமிழ்ப் பேரவை விருது வழங்கும் விழாவை நான் தவறவிடவே மாட்டேன். தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன். நம்முடைய மதிப்பிற்குரிய நாசர் அவர்கள் கூட, குறிப்பிட்டுச் சொன்னார்; அடுத்தாண்டு முதல்வராக வந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற வேண்டும் என்று சொன்னார். நான் அடக்கத்தோடு சொல்கிறேன்; முதல்வராக வருவேனோ இல்லையோ, முதல் நபராக நான் நிச்சயம் வருவேன்.
தலைவர் கலைஞர் அவர்களும் அப்படித்தான்! அவர் உருவாக்கிய வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன் என்று நான் எண்ணுகிறேன்.
அதுவும், இந்த நிகழ்ச்சியை விடாமல் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய இயக்குநர் அமிர்தம் அவர்கள் அழைத்தால், நான் மறுக்க முடியுமா! சிறு வயதிலிருந்து, என்னுடைய வளர்ச்சியை படிப்படியாக பார்த்தவர் மட்டுமல்ல! அடித்துத் திருத்தியவர்!
நான் அடிக்கடி அடித்து, அடித்து என்று சொல்கிறேனே, அடிக்கடி அடிக்கவில்லை, ஒருமுறை தான் அடித்திருக்கிறார். என்னை வளர்த்து எடுத்து இருக்கக்கூடியவர்களில் ஒரு முக்கியமானவராக நம்முடைய அமிர்தம் அவர்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு கோபாலபுரத்தின் தலைப்பிள்ளையாக இருந்து எங்களை எல்லாம் அவர் வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.
இந்த முத்தமிழ்ப் பேரவை என்பது நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு! அப்படிப்பட்ட இந்த அமைப்பு நடத்தக்கூடிய இந்த விழாவிற்கு நான் வருவது உள்ளடியே எனக்குப் பெருமைதான்! எந்த அமைப்பையும் தொடங்குகின்ற போது சிறப்பாக இருக்கும்; எழுச்சியோடு நடைபெறும்; பெருமையாக இருக்கும்;
தொடக்க விழா முடிந்ததும், முடிந்துபோன அமைப்புகள் எல்லாம் நாட்டில் உண்டு. ஆனால், தொடங்கிய காலத்திலிருந்து இந்நாள் வரையில் தொடர்ந்து 50 ஆண்டுகளைக் கண்டு, இன்றைக்கு 51-ஆம் ஆண்டு விழாவை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதே உற்சாகத்துடன், அதே ஆக்டிவாக, அந்த அமைப்பு இருப்பதற்கு முழு காரணம் நம்முடைய இயக்குநர் அமிர்தம் அவர்கள் என்பதை இங்கு நான் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன்.
இங்கே எல்லோரும் குறிப்பிட்டுச் சொன்னார்கள்; இசையுலகத்தின் முடிசூடா மன்னராக திகழ்ந்த ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் பெயரால் அமைந்திருக்கக்கூடிய கலையரங்கத்தில் இந்த விழா நடைபெறுகிறது. அத்தகைய ராஜரத்தினம் பிள்ளை பெயரில் ராஜரத்னா விருது வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டவரே நம்முடைய முத்தமிழறியஞர் தலைவர் கலைஞர் அவர்கள் தான்!
அதேபோல, கலைத்துறையில் பெரும் சாதனைகளை படைத்த காரணத்தால், அவரை நாம் கலைஞர் என்று சொல்கிறோம், என்று கருத வேண்டிய அவசியம் இல்லை! கலைகளை, கலைஞர்களை மதித்த காரணத்தால்தான் அவர் கலைஞராக விளங்கினார்! அத்தகைய கலைஞர் பெயரிலும் விருது வழங்க வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்தேன். அந்த கோரிக்கையை ஏற்று, கடந்த ஆண்டு புரட்சித் தமிழன் சத்யராஜ் அவர்களுக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது!
இந்த ஆண்டு நம்முடைய மதிப்பிற்குரிய திரைப்பட நாயகர் நாசர் அவர்களுக்கு கலைஞர் விருது வழங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவரே குறிப்பிட்டுச் சொன்னார்; கனல் தெறிக்கக்கூடிய கலைஞருடைய வசனங்களை பேசி நடித்தவர் நம்முடைய நாசர் அவர்கள். அப்படி பேசி நடித்தவர்கள் சிலர், பிற்காலத்தில் அதை மறந்துவிடுவார்கள்.
சிலர் சொல்லிக்கொள்ள மாட்டார்கள். ஆனால், "கலைஞரின் வசனங்களைத்தான் பேச்சுப் போட்டி, நாடகப் போட்டி, இப்படி பல போட்டிகளில் பங்கேற்று, உரையாற்றி பரிசு வாங்கினேன்" என்றும், "1984-ஆம் ஆண்டு சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்து பல சினிமா கம்பெனிகளில், கலைஞரின் பராசக்தி வசனத்தை பேசித்தான் நடிகனாகும் வாய்ப்பு கிடைத்தது" என்றும் பல மேடைகளில் சொன்னவர் நம்முடைய நாசர் அவர்கள். நவரச நடிகர் மட்டுமல்ல, நன்றி மறவாத மனிதராகவும் நாசர் இருக்கிறார்.
1989-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்களின் கதை வசனத்தில் நியாயத் தராசு படத்தில் நடித்தார். நாசர் அவர்கள் பெரிய நடிகராக வளர்ந்த பிறகு, அவரே குறிப்பிட்டுச் சொன்னார்; தென்பாண்டிச் சிங்கம், எங்கள் தொலைக்காட்சித் தொடரில் நடிக்க வேண்டும் என்று கலைஞர் அவர்கள் அழைப்பு விடுத்தபோது, பொதுவாக, சினிமாவில் பிசியாக இருக்கும்போது, டிவி சீரியலில் நடிக்க விரும்பமாட்டார்கள்; வர மாட்டார்கள்.
ஆனால், துணிச்சலாக வந்து தொலைக்காட்சித் தொடரிலும் நடித்தவர்தான் நம்முடைய நாசர் அவர்கள். அதேபோல, கலைஞரின் கதை வசனத்தில் இளைஞன், பாசப்பறவைகள், பொன்னர் சங்கர் என்று பல படங்களில் நடித்த அவர் இன்று கலைஞர் விருதைப் பெறுவது மிகமிகப் பொருத்தம் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தகுதி உண்டா? என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னார்; நிச்சயமாக சொல்கிறேன்; உங்களுக்கு அனைத்துத் தகுதிகளும் உண்டு என்பதை நான் அழுத்தந்திருத்தமாக சொல்கிறேன்.
அதேபோல, ராஜரத்னா விருதை வடுவூர் எஸ்.என்.ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பெற்றிருக்கிறார். 60 ஆண்டுகளாக, 10 ஆயிரம் மேடைகளில் பங்கெடுத்த கலைமாமணி இவர். இங்கு மட்டுமல்ல, பல உலக நாடுகளிலும் இவரின் இசை ஒலித்துகொண்டு இருக்கிறது.
அதேபோல, இயல்செல்வம் விருது பெறும் திருவாரூர் புலவர் சண்முகவடிவேலன் அவர்களை இந்த அரங்கிற்கு நான் அறிமுகம் செய்யத் தேவையில்லை. யூடியுப் திறந்தாலே அவரை பார்க்காமல் இருக்க முடியாது; நான் கூட இரவில் தூங்கும்பொழுது, அவருடைய பட்டிமன்றத்தை கேட்டுவிட்டு, அவருடைய நகைச்சுவை, கருத்துக்களை கேட்டுவிட்டு தான் சில நேரங்களில் தூங்குவது உண்டு.
36 ஆண்டுகள் திருவாரூரில் பள்ளி ஆசிரியராக இருந்தவர் இன்றைக்கு அந்த விருதை பெற்றிருக்கிறார். அவரின் பேச்சுப் பாடத்தை உலகமே கேட்டுக்கொண்டிருக்கிறது. நாநயமும், நகைச்சுவையும் கலந்த நல்ல தமிழ்ப் பேச்சாளர். நாடு முழுவதும் தமிழ் மேடைகளில் வலம் வந்து கொண்டிருக்கக் கூடியவர். அவர் இந்த பெறுவதை உள்ளபடியே பாராட்டுக்குரிய ஒன்று.
இசைச் செல்வம் விருதை காயத்திரி வேங்கடராகவன் அவர்கள் பெற்றிருக்கிறார். தனது குரலால் அனைவர் மனதையும் ஈர்க்கும் இசைக் கலைஞராக இசையுலகத்தில் தனக்கென தனியிடம் பிடித்திருப்பவர் காயத்திரி வேங்கடராகவன் அவர்கள் இந்த விருதை பெற்றிருப்பது உள்ளபடியே மகிழ்ச்சிக்குரியது.
நாட்டியச் செல்வம் விருதை அனிதாகுஹா பெற்றிருக்கிறார். சென்னையில் இருக்கும் மிகப் பிரபலமான பரதநாட்டிய ஆசிரியர்களில் ஒருவராக இருக்கக்கூடியவர். இளம் பருவத்தில் இருந்தே ஆடற்கலையில் தேர்ந்த இவர், நடன நாட்டியங்களின் மூலமாக புகழ்பெற்றிருக்கிறார். ராதா, ராவணன், வள்ளி போன்ற வேடங்களின் மூலமாக பலரின் மனதிலும் இடம்பிடித்தவர்.
நாதஸ்வரச் செல்வம் விருதை திருமெய்ஞானம் சகோதரர்களான ஐயப்பன், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் பெற்றிருக்கிறார்கள். இவர்கள் குடும்பமே ஒரு இசைக்குடும்பம். தந்தையார் டி.கே.ராமசாமி மிகப்பெரிய நாதஸ்வர மேதை. குருவை மிஞ்சிய சிஷ்யர்களாகவும் இருக்கிறார்கள். தங்களைப் போலவே மேலும் பல திறமைசாலிகளை உருவாக்கியும் வருகிறார்கள்.
தவில் செல்வம் விருதை நாங்கூர் என்.கே.செல்வகணபதி அவர்கள் பெற்றிருக்கிறார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இசை கற்று, அங்கேயே 22 ஆண்டுகளாக தவில் பேராசிரியராக இயங்கி வரும் சிறப்புக்குரியவர் செல்வகணபதி அவர்கள். உலகக் கோயில்கள் எல்லாவற்றிற்கும் சென்று தன்னுடைய தவில் கலையை பதிவு செய்து வருகிறார்.
மிருதங்கச் செல்வம் விருதை தஞ்சாவூர் கே.முருகபூபதி அவர்கள் பெற்றிருக்கிறார். பல தலைமுறைகளாக இசைத் தொண்டாற்றும் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். உலகப் புகழ்பெற்ற மிருதங்கக் கலைஞர்! வட இந்திய இசை மேடைகளிலும் நுழைந்து கலக்கிக்கொண்டு இருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். பெறாத விருதுகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு விருதுகளை பெற்று குவித்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக, விருது பெற்றிருக்கக்கூடிய அனைவரையும் நான் வாழ்த்துகிறேன்! பாராட்டுகிறேன்!
நீங்கள் எத்தனையோ விருதுகளை, பட்டங்களைப் பெற்றிருக்கலாம். இனியும் பெறலாம். ஆனால், முத்தமிழ்ப் பேரவை வழங்கக்கூடிய பட்டம் என்பது மிக மிகச் சிறப்பானது. காரணம், இந்தப் பேரவையை முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் உருவாக்கியிருக்கிறார்.
அரை நூற்றாண்டு காலமாக இயங்கும் ஒரு அமைப்பு தரும் பட்டம் இது. பெரிய பெரிய ஜாம்பவான்கள் பெற்ற பட்டம் இது! இனியும் உங்கள் கலைத் தொண்டு தொடர வேண்டும் என்று அதற்காக தான் இது வழங்கப்படுகிறது.
முந்தைய ஆட்சிக் காலத்தில், பத்து ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த திரைப்பட விருதுகளையும், சின்னத்திரை விருதுகளையும், நாம் ஆட்சிக்கு வந்த பிறகு, 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற விழாவில்தான் தரப்பட்டது. அதிலிருந்து, தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் தொடங்கி வைத்த சின்னத்திரைக் கலைஞர்களுக்கான விருதையும் நிறுத்தி வைத்திருந்தார்கள். 2022-ஆம் ஆண்டுதான் 15 ஆண்டுகளுக்கான விருதுகளை மொத்தமாக வழங்கியிருக்கிறோம். இந்த ஆண்டுக்கான விழா இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கிறது.
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகளும் விரைவில் வழங்கப்பட இருக்கிறது.
கதை, வசனகர்த்தா ஆரூர்தாஸ், கவிஞர் மு.மேத்தா, பாடகி பி.சுசீலா ஆகியோருக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது எனும் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியிருக்கிறோம். டி.எம்.சௌந்தரராஜன் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடி இருக்கிறோம். ‘பாடும் நிலா’ எஸ்.பி.பி, சின்ன கலைவாணர் நடிகர் விவேக், ஜெய்சங்கர் ஆகியோர் நினைவாக தெருக்களுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்திருக்கிறோம்.
சிம்பொனி தமிழர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு உலகமே வியக்கக்கூடிய வகையில் பாராட்டு விழா அரசின் சார்பில் நடத்தியிருக்கிறோம். கலைமாமணி விருதுகள் சரியாக தகுதியான நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளுக்கு ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்ல, நம்முடைய ஆட்சியில், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் மிக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அண்மையில் கூட பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நடிப்பிலும், பேச்சிலும் சிறந்த மார்கண்டேயராக விளங்கக்கூடிய சிவக்குமார் அவர்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. சங்கமம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.
இப்படி, திரைக் கலைஞர்கள், சின்னத்திரைக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், இலக்கியவாதிகள் என்று கலைஞர்களை போற்றும் அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. எதிர்காலத் தலைமுறையை பண்பாடு கொண்ட தலைமுறையாக வளர்க்க கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகள்தான் மிகமிக முக்கியம்! கலைஞர்களாகிய நீங்கள், உங்கள் பங்களிப்பை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று கேட்டு, விருது பெற்றிருக்கக்கூடிய அனைவரையும் மீண்டும் ஒரு முறை மனதார வாழ்த்தி, விடைபெறுகிறேன்.
Also Read
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!
-
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!
-
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தை சிதைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!