M K Stalin
“பாவம், இந்தி பேசும் மக்களை ஏமாற்றலாம்.. ஆனால் தமிழ்நாட்டு மக்களை..” -பாஜகவை வெளுத்து வாங்கிய தயாநிதி MP!
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இன்று, எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது, கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மக்களவையில் கழக நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவரும் கழக விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளருமான தயாநிதி மாறன், எம்.பி, தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறித்து, ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் நோக்கோடு அவசரகதியில் மேற்கொள்ளப்படும் எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக உரையாற்றினார்.
அவர் பேசியதாவது : -
நடுநிலை தேவை. குறிப்பாக, நம்மை தேர்ந்தெடுக்கின்ற, நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்கின்ற, சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க நடத்தப்படுகின்ற தேர்தல்கள், நடுநிலையுடன் நடத்தப்படவேண்டும். அதுதான் தேர்தல் ஆணையத்தின் வேலை. ஆனால், பா.ஜ.க ஆட்சி என்றைக்கு வந்ததோ அன்றுமுதல் தேர்தல் ஆணையம் மீதுள்ள நம்பிக்கை மக்களிடம் குறைந்துவிட்டது. மக்களிடம் மட்டுமல்ல அரசியல்வாதிகளிடமும் தேர்தல் ஆணையம் மீது சந்தேகம் வந்துவிட்டது. இதற்கு உதாரணமாக ஒன்றை சொல்கிறேன்.
2014ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்தது. அப்போது தமிழ்நாட்டில் அதிமுகவுடன் மறைமுக கூட்டணி வைத்தது பாஜக. அப்போது இருந்த அம்மையார், தான் துணை பிரதமராக வரவேண்டும் என்பதற்காக பணப்பட்டுவாடா செய்தார். இதை எதிர்த்து தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தோம். அப்போது அதை தடுக்காத தேர்தல் ஆணையம், 144 தடை உத்தரவு மட்டும் போட்டு பணம் கொடுப்பதை மறைமுகமாக ஆதரித்தது. அப்போது திமுக கூட்டணியிலிருந்து ஒரு வேட்பாளர்கூட மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதுபற்றி ஏற்கனவே இந்த அவையில் சுட்டிக்காட்டியுள்ளேன்.
அதுமட்டுமில்லை. தேர்தல்கள் நியாயமாக நடைபெறுகிறதாம்! எங்கே? 2019 தேர்தலில் பல கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. இறுதிக் கட்ட வாக்குப்பதிவிற்கு முந்தைய இரண்டு நாட்களுக்கு எந்த பிரச்சாரமும் செய்யக்கூடாது. அமைதி காத்திடவேண்டும். ஆனால் பிரதமர் மோடிக்கு மட்டும் கேதர்நாத் சென்று தியானம் செய்ய தேர்தல் ஆணையம் சிறப்பு அனுமதி அளிக்கிறது. அதற்கு பிரதமர் மோடியும் நன்றி சொன்னார். எதற்காக அந்த நன்றி என்றால் அந்த இரண்டு நாட்களும் இந்திய தொலைக்காட்சிகள் அனைத்திலும் பிரதமர் முகமே வந்துகொண்டிருந்தது. பிரச்சாரம் செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டு மறைமுகமாக பிரச்சாரம் செய்ய ஊக்குவித்தது தேர்தல் ஆணையம்தான். கேதர்நாத் தியானத்தை முடித்துக்கொண்டு, 2024ஆம் ஆண்டு தேர்தலின்போது தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடி , கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் சிலையில் அமர்ந்து இரண்டு நாட்கள் தியானம் செய்தார். அப்போதும் இரண்டு நாட்களுக்கு தொலைக்காட்சியில் அவர் முகம்தான் வந்தது. இதுதான் தேர்தல் ஆணையத்தின் நியாயமா?
ஒவ்வொரு முறையும் தேர்தல் நடக்கும்போது பணப் பட்டுவாடா நடப்பதாக மற்ற கட்சிகளை குறிவைத்து பணப் பறிமுதல் செய்யும் தேர்தல் ஆணையம், பாஜக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை கண்டுகொள்வதேயில்லை. தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு நாங்களும் துணை நிற்கிறோம். ஆனால் உண்மையான வாக்காளர்கள் பட்டியல் திருத்தம் வேண்டும். இரண்டு இடங்களில் பதிவாகியிருக்கும் வாக்காளர் பெயர் வேண்டாம். இறந்தவர்களின் பெயர்களை நீக்குங்கள். இதில் எங்களுக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டுக்கு வந்து ஒரு தொகுதியில் 7 ஆயிரம் வாக்குகள் போலி வாக்குகள் உள்ளது என்று சொல்கிறார். ஆடு நனைகிறது என்று ஓநாய் அழலாமா? உங்களுக்கு ஏன் அந்த அக்கறை? நீங்களும் தேர்தல் ஆணையமும் தெரிந்துதானே வேலை செய்கிறீர்கள். இத்தனை ஆண்டுகளாக கும்பகர்ணனை போல தூங்கிக்கொண்டு இருந்த தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை மூன்று மாதங்களில் செய்து முடிக்க நினைப்பது ஏன்? ஆறு மாத காலம் எடுத்துக்கொண்டால் என்ன? அவசரம் காட்டுவதன் காரணம் என்ன?
இதை பார்க்கும்போது எங்களுக்கு அச்சம் வருகிறது. அது என்னவென்றால்… 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ந்தேதி தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் மோடி , இனி ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அதேபோல்தான் கடந்த நவம்பர் 4ந் தேதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை புதிதாக பதிவு செய்தால் மட்டுமே வாக்களிக்கும் உரிமை உண்டு என்றார். இப்படி வாக்குரிமையை இரவோடு இரவாக பிடுங்கிக்கொண்டால் எங்களுக்கு அச்சம் வராதா? இதுபோன்ற சிந்தனையெல்லாம் பிரதமர் மோடிக்கு மட்டும்தான் வரும். இதனால் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்.. எஸ்.ஐ.ஆர் பணியில் ஈடுபட்ட பணியாளர்களில் 29 நாட்களில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். நீங்கள் எடுத்த ஒவ்வொரு முடிவுகளால் ஏழை மக்கள்தானே உயிரிழக்கின்றனர்?
தேர்தல் ஆணையம் நியாயமாக நடக்கவேண்டும் என்று நினைத்தால் முதலில் சில தொகுதிகளிலோ அல்லது ஒரு மாநிலத்திலோ செயல்படுத்தி அதில் வெற்றியாகும் நிலையில் பிற மாநிலங்களில் அதனை நடைமுறைப்படுத்தலாம். பீகார் தேர்தலில்போது எத்தனை லட்சம் போலி வாக்காளர்கள் இருந்தார்கள்? அதை சரி செய்தீர்களா? மணலை கயிறாக திரிப்போம் என்று சொன்னீர்களே என்னவாயிற்று? தன் கடமையிலிருந்து தவறிய தேர்தல் ஆணையம் மக்கள் மீது தேவையற்ற சுமையை ஏற்றுகிறது.
திருமணம் செய்துகொள்ள, விவாகரத்து செய்ய, வாகனம் ஓட்ட, கல்லூரியில் படிக்க, வங்கியில் கணக்கு துவங்க, அரசு வேலைக்குச் செல்ல எல்லாவற்றுக்கும் மேலாக இறந்தால்கூட பிணத்தை அடக்கம் செய்ய என்று எல்லாவற்றுக்கும் ஆதார் தேவைப்படும்போது தேர்தல் ஆணையம் ஆதாரை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து உச்சநீதிமன்றம் மூலம் ஆதாரை கொண்டு வந்தோம். ஆதாரை இணைத்தால் மக்கள் கணக்கெடுப்புக்கூட தேவையில்லை. ஆனால் எதற்காக பாஜக அரசு பயப்படுகிறது? அதனால்தான் எங்களுக்கு அச்சம் எழுகின்றது! உங்கள் உள் நோக்கம் திருட்டு வழியிலே ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதுதான்.
ஒரு மாநிலத்தில் தேர்தல் வருகிறது என்றால் 6 மாதங்களுக்கு முன்பு அங்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்துவிடுவார். வருவாய் துறை, சிபிஐ வருகிறது என மிரட்ட ஆரம்பித்துவிடுவார். இதற்கு ஒரு டீமே வைத்திருக்கிறார்கள். இதை கண்டுகொள்ளாத, கண்டிக்காத தேர்தல் ஆணையம், மக்களை புண்படுத்தும் வேலையை செய்கிறது.
எங்கள் தமிழ்நாடு அமைதிப்பூங்கா. அதை கெடுக்க என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள். அயோத்தியில் செய்த வேலையை திருப்பரங்குன்றத்தில் செய்யப் பார்க்கிறார்கள். திராவிட முதல்வர், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும்வரை உங்கள் பாச்சா பலிக்காது. உங்களை ஒருபோதும் உள்ளே வர விடமாட்டோம்!
அய்யா! எங்களுக்கோர் பெரிய அச்சம் இருக்கிறது! தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறது? மூன்று கட்டங்களாக வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை திருப்பி பெறலாம் என்கிறது. அதாவது..1987 ஜூலை மாதத்திற்கு முன்பு பிறந்திருந்தால் இரண்டு ஆவணங்களில் ஏதாவது ஒன்றையும் 1987 ஜுலை முதல் 2004ஆம் ஆண்டுக்குள் பிறந்தவர்கள் மூன்று ஆவணங்களில் ஏதாவது ஒன்றையும் 2004 ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் வாக்குரிமையை திரும்பப் பெற 13 ஆவணங்களில் ஏதாவது ஒன்றையும் தரலாம் என்று சொல்கிறது. அதில் 13வது ஆவணமாக குறிப்பிட்டுள்ளதில், “பீகார் வாக்காளர் திருத்த பட்டியலில் பெயர் முறையாக சேர்க்கப்பட்டிருப்பவர்கள் எந்த மாநில தேர்தலிலும் வாக்களிக்கலாம்” என்று உள்ளது. இது என்ன நியாயம் ?..
பீகார் தேர்தல் நடந்து ஒரு மாதம்கூட ஆகவில்லை. தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் மாதம் தேர்தல் நடக்கவுள்ளது. அப்படி இருக்கும்போது பீகாரில் வாக்களித்தவர் தமிழ்நாட்டில் வாக்களிக்கலாமா? வந்தாரை வாழவைக்கும் தமிழகத்திற்கு வந்த சோதனை இது. ஒருகோடி பீகார் மக்கள் எங்கள் தமிழ்நாட்டில் நல்ல முறையிலே வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் பாஜக ஆளும் எந்த மாநிலத்திலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. அவர்களுக்கு வேறெங்கும் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்கள் வாழ்வாதாரம் நல்ல முறையில் முன்னேற வேண்டும் என்று அவர்கள் எங்கள் திராவிட மாடல் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள்.
அந்த ஒருகோடி வாக்குகள் தமிழ்நாட்டு தேர்தலில் சேர்க்கப்படும் என்றால் எங்களுக்கு அச்சம் வராதா? பின்னர் எதற்கு தேர்தல் ஆணையம்? நீங்கள் நியாயமாக நடந்துகொள்கிறீர்களா? இல்லை மறைமுகமாக பாஜாக-விற்கு வேலைசெய்கிறீர்களா? ஒருகோடி பேரை எதற்காக பீகாரிலும் வாக்களிக்கலாம், அதே வாக்குச்சீட்டை எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டிலும் வாக்களிக்கலாம் என்றால் உங்கள் உள்நோக்கம் வெளிப்படையாக தெரிகிறது. நீங்கள் என்னதான் பின்வாசல்வழியில் தமிழ்நாட்டை கைப்பற்ற நினைத்தாலும், தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் உங்களை விடமாட்டார்கள்.
வளர்ந்த நாடுகள் யாருமே பயன்படுத்தாத ஒரு தொழில்நுட்பத்தை வைத்து நிலவுக்கு செயற்கைகோளை அனுப்பியதற்காக இந்தியாவை உலகமே பாராட்டியது. அப்போது இஸ்ரோவில் பணியாற்றியவர்கள் பகுத்தறிவு மாநிலத்திலிருந்து வந்தவர்கள். ஆனால் மின்னணு வாக்கு இயந்திரத்தை பார்த்தாலே எங்களுக்கு அச்சமாகவுள்ளது. அதன் உரிமையாளர் யார்? அதற்குள் என்ன இருக்கிறது என்று யாருக்குமே தெரியாது. யாருக்கு ஓட்டு போட்டாலும் பாஜகவுக்குதான் விழுகிறது என்கிறார்கள்.
அமெரிக்காவில், ஜப்பானில், ஜெர்மணி போன்ற வளர்ந்த நாடுகளில்கூட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இல்லாதபோது நீங்கள் மட்டும் ஏன் அதை தலையில் வைத்துக்கொண்டு ஆடுகிறீர்கள்? வாக்குச் சீட்டை பார்த்து நீங்கள் அச்சப்படுவதை பார்த்தால் நீங்கள் ஏதோ தவறு செய்கிறீர்கள் என்று எங்களுக்கு சந்தேகம் வரத்தானே செய்யும்?
வாக்குப்பதிவு முறையில் தயவு செய்து நீங்கள் வளர்ந்த நாடுகளை பின்பற்றுங்கள். எங்களுக்கு தேவை நியாயமான தேர்தல்; நியாயமான தேர்தல் ஆணையம். அனைத்து துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ் ஆட்கள்தான் இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும்போது நடுநிலையுடன் இருக்கவேண்டிய அரசு துறைகள் நடுநிலையுடன் நடக்குமா? தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை சீர்செய்ய நினைக்கிறது. ஆனால் தேர்தல் ஆணையம் எப்போது சீர் செய்யப்படப்போகிறது? இது என்னுடைய கேள்வி மட்டுமில்லை; இந்திய மக்களின் கேள்வியும் இதுதான். நியாயன முறையில் தேர்தல் நடக்க அவசரகதி வேண்டாம்.
தயவு செய்து எஸ்.ஐ.ஆரை நிறுத்துங்கள். எஸ். ஐ.ஆரே தேவையில்லை. அனைத்து குளறுபடிகளையும் சரிசெய்துவிட்டு 6 மாதங்கள் அவகாசம் எடுத்து நல்ல முறையில் சீர்திருத்தங்களை நடத்துங்கள்.
பாவம், இந்தி பேசும் மக்களை பாஜக ஏமாற்றலாம். ஆனால் தமிழ்நாடு மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது, திராவிட மக்கள் ஒருபோதும் ஏமாறவும் மாட்டார்கள்!
Also Read
-
உலக மனித உரிமைகள் நாள் : சுயமரியாதையைப் பாதுகாத்திட உறுதி ஏற்போம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வெல்லும் தமிழ்ப் பெண்கள் : மகளிர் உரிமைத் திட்டத்தின் 2-வது கட்ட விரிவாக்கம்.. எப்போது தொடக்கம்? -விவரம்!
-
4 ஆண்டுகள் - ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு : இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!
-
மதுரை கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிப்பு ஏன்? : மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய கனிமொழி NVN சோமு MP!
-
‘வந்தே மாதரம்’, ‘ஜெய்ஹிந்த்’, ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ அனைத்தும் சமம் தான்!” : சு.வெங்கடேசன் எம்.பி பேச்சு!