M K Stalin

பிரான்ஸின் வால் டி லாயர் மாகாண சுற்றுலாத்துறையுடன் தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஒப்பந்தம்! - விவரம் என்ன?

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் இன்று (16.09.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசின் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மற்றும் பிரான்ஸ் நாட்டின் - வால் டி லாயர் (Centre-Val De Loire) மாகாணத்துடன் கலாச்சார பரிமாற்றம் மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பிரான்ஸ் நாட்டின் - வால் டி லாயர் மாகாணத்தின் கலாச்சாரம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு துணை தலைவர் திருமதி டெல்ஃபைன் பெனாசி ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐந்து ஆண்டு காலம் நடைமுறையில் இருக்கும்.

தமிழ்நாடு அரசு, சுற்றுலாத்துறையில் வேலைவாய்ப்புகளை வழங்குவதில் ஒரு முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழவும். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும் புதிய சுற்றுலா கொள்கையை 26.09.2023 அன்று வெளியிடப்பட்டது. இக்கொள்கையானது சுற்றுலாவிற்கு தொழில்துறை தகுதிநிலை வழங்குவதிலும், சலுகைகள் ஊக்கத்தொகைகள், தனியார் முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் தனியரை சுற்றுலாத் தொழிலில் பங்குகொள்ள செய்வதிலும் முக்கிய பங்காற்றும் வகையில் உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக்கு நிலையான சூழலை ஏற்படுத்துவதுடன், பாதுகாப்பான மற்றும் தரமான சுற்றுலா சேவைகளை வழங்குவதற்கும், சுற்றுலா முதலீடுகளை ஈர்ப்பதற்கும் உகந்த சூழலை உருவாக்குதே இக்கொள்கையின் இலக்காகும். மேலும் சுற்றுலா துறையால் பல்வேறு மாவட்டகளில் மேற்கொள்ளப்படும் சுற்றுலா மேம்பாட்டு பணிகளால் 2023 ஆம் ஆண்டில் 28.71 கோடியாக இருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 2024 ஆம் ஆண்டில் 30.80 கோடியாக அதிகரித்தது. 2024 ஆம் ஆண்டு உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் தமிழ்நாடு இந்தியாவில் 2வது இடத்தில் உள்ளது.

இதன் தொடர் நடவடிக்கையாக, இன்றையதினம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தமானது, பிரான்ஸ் மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையில் கூட்டாண்மையின் அடிப்படையில் கலாச்சார பரிமாற்றத்தில் நல்ல அனுபவங்கள் மற்றும் நடைமுறைகளை வகுக்கும். மேலும், பிரான்ஸ் மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையே கலைஞர்களின் பரிமாற்றத்தை எளிதாக்கி கலைஞர்கள், கலை நிறுவனங்கள், கலாச்சார நிறுவனங்களுக்கு இடையே ஒத்துழைப்பு மற்றும் கலாச்சார ஒருங்கிணைந்த திட்டங்களை செயல்படுத்தும். அத்துடன் கலாச்சார பயிற்சி நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை எளிதாக்கி, ஊக்குவிக்க இந்த ஒப்பந்தம் துணை புரியும்.

மேலும், இந்த ஒப்பந்தம் சுற்றுலாத் துறையில் பொதுக் கொள்கைகள், அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்வது; கலாச்சாரம், வரலாற்று மற்றும் இயற்கை பாரம்பரியத்தைப் பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது; சுற்றுலா நிபுணர்களுக்குப் பயிற்சி அளிப்பது; பாரம்பரிய கலைஞர்களின் திறன் மற்றும் நிபுணத்துவ பரிமாற்றத்தை எளிதாக்குவது; சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரப் பண்பாடு, தொல்லியல், பாரம்பரிய பாதுகாப்பு மற்றும் அருங்காட்சியகத் துறை ஆகிய பயிற்சி நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஊக்குவிப்பது மற்றும் எளிதாக்குவது ஆகியவற்றை மேம்படுத்தும். அத்துடன் சுற்றுலாத் துறையில் குறுகிய கால பயிற்சித் திட்டங்களில் மாணவர்களின் பரிமாற்றத்தை எளிதாக்கி கண்காட்சிகள், வர்த்தக நிகழ்ச்சிகள் போன்ற கூட்டு நடவடிக்கைகளை எற்பாடு செய்யவும் துணை புரியும்.

Also Read: தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!