முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (16.9.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சார்பில் பொருளாதார தடையினால் உயர்கல்வியினை தொடர இயலாத இஸ்லாமிய மாணவ மாணவியர்கள் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பினை தொடர கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, இஸ்லாமிய மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகையினை வழங்கினார்.
இஸ்லாமிய பெருமக்களின் நல்வாழ்விற்காக தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சார்பில் உலமாக்களுக்கு மாதம் ரூ.3,000/- ஓய்வூதியம், உலமா ஓய்வூதியதாரர் இறப்பின் அவரது வாரிசுதாருக்கு உலமா குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
மேலும், தமிழ்நாட்டில் பணிபுரியும் மாவட்ட காஜிகளுக்கு மாதம் ரூ.20,000/- மதிப்பூதியம் வழங்கப்படுவதோடு, 1 முதல் 8 –ஆம் வகுப்பு வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் முஸ்லிம் மாணவியர்களுக்கு ஒரு மாணவிக்கு ரூ.1,000/- வீதம் கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
மசூதிகள், தர்காக்கள் மற்றும் இதர வக்பு நிறுவனங்களில் பெரிய அளவிலான பழுதுபார்ப்பதற்கும் மற்றும் புனரமைப்பதற்கும் அரசு மானியம் வழங்கப்படுகிறது. இந்த நிதியாண்டு (2025-26) தொன்மையான 10 வக்பு நிறுவனங்களை பழுதுபார்த்து சீரமைக்க ரூ.10 கோடி மற்றும் பெரு மராமத்து மற்றும் பழுதுபார்ப்பு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
மசூதிகள் மற்றும் தர்காக்கள் போன்ற வக்பு நிறுவனங்களில் ஏற்படும் சிறிய அளவிலான பழுது மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.3 கோடியில் தொகுப்பு நிதியும் வழங்கப்படுகிறது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் போற்றத்தக்க திறமை இருந்தும் பொருளாதார தடையினால் உயர்கல்வியினை தொடர இயலாத இஸ்லாமிய சிறுபான்மையின மாணவ மாணவியர்கள் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பினை தொடர ஏதுவாக தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சார்பில் 2,000 மாணவ மாணவியருக்கு தலா ரூ.10,000/- வீதம் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் தொடக்கமாக 10 மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகையினை வழங்கினார்.