M K Stalin
“எஃகு போன்ற உறுதியுடன் என் இலக்குகளில் வெற்றி பெறுவேன்!” : ஓசூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (11.9.2025) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற “தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2025 - ஓசூர்”-இல் (TN INVESTMENT CONCLAVE 2025 - HOSUR) ஆற்றிய உரை.
ஜெர்மனி மற்றும் இலண்டன் ஆகிய ஐரோப்பிய பயணத்தை முடித்துவிட்டு 15 ஆயிரத்து 516 கோடி ரூபாய் முதலீட்டுடன் தமிழ்நாட்டிற்குத் திரும்பிய மூன்று நாளில், இந்த முதலீட்டாளர் மாநாடு மூலமாக உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்!
அதாவது நான் சென்றுவந்த பயணத்தில், 15 ஆயிரத்து 516 கோடி ரூபாய் முதலீடு என்றால், இன்றைக்கு இங்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் கையெழுத்தாகியிருக்கிறது! நம்முடைய ரெக்கார்டை நாம்தான் பீட் செய்கிறோம்!
அதுமட்டுமல்ல, 8 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய 1210 கோடி ரூபாய் முதலீட்டில், 4 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். ஓசூர் – திறமையும், புதுமையும் சந்திக்கும் நகரமாக இருக்கிறது!
தமிழ்நாட்டின் தொழில் வரைபடத்தில் தனித்த அடையாளம் பெற்ற நகரம் ஓசூர்! வளர்ச்சியின் முகம்! இந்தியாவைக் கடந்து, உலக அளவில் கவனத்தை ஈர்க்கும் நகரமாக ஓசூர் ஒளிவீசுகிறது. அப்படிப்பட்ட ஓசூரில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்க வேண்டும் என்று நாங்கள் விடுத்த அழைப்பை ஏற்று, இந்த மாநாட்டிற்கு வருகை தந்திருக்கும் முதலீட்டாளர்கள் எல்லோரையும் தொழில்துறை அமைச்சர் வரவேற்றிருந்தாலும் நானும் உங்களை அன்புடன் வருக... வருக... என்று வரவேற்கிறேன்.
தமிழ்நாடு தொழில்துறையில் இவ்வளவு வேகமாக செயல்படுகிறது என்றால், அதற்கு முக்கிய காரணம் - துடிப்பான – இளமையான அமைச்சராக இருக்கக்கூடிய தொழில் துறை அமைச்சர் தம்பி டி.ஆர்.பி.ராஜா அவர்கள்.
சென்ற மாதம், தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தை தொடங்கி வைத்து, முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துகொண்டேன். இன்றைக்கு, ஓசூரில் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு, மாலை, டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் நியூ டெல்டா ஸ்மார்ட் மேனுஃபேக்ட்சரிங் லைனை திறந்து வைத்து அங்கு உரையாற்ற இருக்கிறேன்.
அடுத்தடுத்த மாதங்களுக்கும் Target கொடுத்திருக்கிறேன். அமைச்சர் மற்றும் தொழில்துறை அதிகாரிகளின் வேகம் மட்டுமல்ல - முதலீட்டாளர்களான உங்களின் ஆர்வமும்தான் என்னை இங்கு வரவைத்திருக்கிறது. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடனே – நாங்கள் set செய்த Goal 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி!
மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டும் என்றால், அதற்கு தொழில் வளர்ச்சிதான் அடிப்படை! அதனால்தான் அதற்கான கட்டமைப்புகளை மிகவும் சிறப்பான வகையில் உருவாக்கி அவற்றை மேலும், மேலும் மேம்படுத்தி அதன்மூலமாக தொழில் செய்யும் சூழலை வலுப்படுத்துகிறோம்!
அதனால்தான், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இந்தியாவில் எங்கும் இல்லாத அளவில் 11.19 விழுக்காடை தொட்டிருக்கிறது. இந்த வளர்ச்சியை இன்னும் அதிகரிக்கத்தான், முதலீட்டாளர்கள் மாநாடுகளையும், முதலீட்டாளர்களுடனான சந்திப்புகளையும் நாம் தொடர்ச்சியாக நடத்தி வருகிறோம். திராவிட மாடல் ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டை பற்றி தெரிந்துகொண்டு, முதலீட்டாளர்கள் ஆர்வமாக வருகிறார்கள்.
ஒவ்வொரு முறையும் தொழில்துறைக்கான அமைச்சரையும் – அதிகாரிகளையும் சந்திக்கும்போது, நான் சொல்வது ஒன்றுதான்… அது என்னவென்றால், “M.o.U எல்லாம் செயல்பாட்டிற்கு வர வேண்டும். அந்த Conversion-இல் Focus செய்யுங்கள்!
அந்த Process நம்முடைய அரசாங்கத்தில் வேகமாக நடக்க வேண்டும் என்று சொல்வேன். மகிழ்ச்சியுடன் உங்களிடம் சொல்கிறேன்… நாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 77 சதவீதம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்திருக்கிறது!
எங்களுடைய குறிக்கோள் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த வேண்டும்! அதைத்தான் செய்து காட்டிக்கொண்டு இருக்கிறோம்.
கடந்த 4 ஆண்டுகளில், இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு பெரும் தொழில் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் ஓசூர் பார்த்து வருகிறது. ஓசூர் உட்பட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏராளமான புதிய தொழிற்சாலைகள் இந்த நான்காண்டு காலத்தில் கொண்டுவந்திருக்கிறோம். ஒரு காலத்தில், “சிறிய
தொழில் நகரம்” என்று சொல்லப்பட்ட ஓசூர், இன்று பல கம்பெனிகளுக்கு ‘Favourite Destination’-ஆக உருவெடுத்திருக்கிறது. இந்த கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும் – ஓசூருக்கும் தமிழ்நாடு அரசு என்னென்ன செய்திருக்கிறது என்று சொல்ல வேண்டும் என்றால்,
முதலில் - இந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1 இலட்சம் M.S.M.E. நிறுவனங்கள் இயங்கி வருகிறது. ஓசூர் தொழில் வளர்ச்சிக்காக நாம் செய்ததில் முக்கியமானது சிப்காட் தொழில் பூங்கா.
2 ஆயிரத்து 92 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கும் ஓசூர் சிப்காட்டில், 371 தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றிருக்கிறார்கள்.
இரண்டாவது - சிறப்பான உள்கட்டமைப்புகளுடன்
அமைக்கப்பட்டிருக்கும் இந்த தொழிற் பூங்காவில், தடையில்லாமல் நீர் வழங்க T.T.R.O. நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மூன்றாவது - சிப்காட் நிறுவனம் FORT இன்குபேட்டர்கள் அமைத்திருக்கிறது. இந்த இன்குபேட்டர், தொழில்துறை மாற்றத்தை விரைவுபடுத்தும் நோக்கில் செயல்படுகிறது.
நான்காவது - சூளகிரி பகுதியில் 689 ஏக்கர் பரப்பளவில் ஒரு தொழில் பூங்கா.
ஐந்தாவது - பர்கூரில் ஆயிரத்து 379 ஏக்கர் பரப்பளவில் சிறப்பு பொருளாதார மண்டலத்துடன் கூடிய தொழில் பூங்கா.
ஆறாவது - குருபரப்பள்ளியில் 150 ஏக்கரில் தொழில் பூங்கா ஆகிய தொழில் பூங்காக்களை சிப்காட் நிறுவனம் நிறுவி இருக்கிறது.
அடுத்து, ஏழாவதாக – இன்றைக்கு திறந்திருக்கும் ஃபியூச்சர் மொபிலிட்டி பார்க்! 210 கோடி ரூபாய் மதிப்பில், 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த பூங்காவில், இதுவரை, 22 நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
2 ஆயிரத்து 728 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடு பெறப்பட்டிருக்கிறது. 6 ஆயிரத்து 682 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட இருக்கிறது.
எட்டாவது - தேன்கணிக்கோட்டை வட்டம், நாகமங்கலம் கிராமத்தில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் டிட்கோவுடன் இணைந்து, விடியல் ரெசிடென்சி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் மூலமாக பணியாளர்கள் தங்க, 64 ஏக்கரில் தொழிலாளர் குடியிருப்பு கட்டிவருகிறார்கள்.
முதற்கட்டமாக 6 ஆயிரம் பேர் தங்கும் வகையில் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டில் இருக்கிறது. இதன் மூலமாக, பணிபுரியும் மகளிர் பாதுகாப்பும் வசதியும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பணிபுரியும் மகளிர் எண்ணிக்கையும் இதனால் வெகுவாக அதிகரிக்கும்.
அடுத்து ஒன்பதாவதாக - G.C.C.-கள், I.T. நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர்தர ஆராய்ச்சி மையங்கள் ஆகியவற்றிற்கான மையமாக ஓசூரை உருவாக்க ஓசூர் ‘Knowledge Corridor’ உருவாக்கப் போகிறோம். கிருஷ்ணகிரி - பாகலூர் புறவழிச்சாலை, வெளிவட்ட சாலை மற்றும் சாட்டிலைட் டவுன் ரிங் ரோடு வடக்குப் பகுதி ஆகிய சாலைகளின் இரு புறங்களிலும் இந்த அறிவுசார் வழித்தடத் திட்டத்தை செயல்படுத்தப் போகிறோம்.
இதன்மூலமாக, அறிவுசார் பொருளாதாரம் பெருமளவில் அதிகரிக்கும், இந்த மாவட்டத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி நன்கு மேம்படும்.
பத்தாவதாக - ஓசூரில், 5 இலட்சம் சதுர அடியில், 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில், டைடல் பார்க் நிறுவப்படுகிறது. உலகத்தரம் வாய்ந்த இந்த I.T. பார்க்கில், I.T. நிறுவனங்கள், GCC-கள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் ஈர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட 6 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.
பதினொன்றாவதாக – இவை எல்லாவற்றிற்கும், ஓசூர் விமான நிலையத்தை உருவாக்க முக்கியத்துவம் தருகிறோம். ஓசூரில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் உலகத்தரம் வாய்ந்த அதிநவீன கட்டமைப்பு வசதிகளுடன் ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று ஏற்கனவே நான் அறிவித்திருந்தேன்.
இந்த புதிய விமான நிலையத்தை அமைக்க, ஓசூர் பகுதியை சுற்றியிருக்கும் பொருத்தமான நிலப் பகுதி அடையாளம் காணப்பட்டு, அதை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை டிட்கோ நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த பன்னாட்டு விமான நிலையம், மற்றுமொரு புதிய வளர்ச்சிப் பாதையில் ஓசூரை பயணிக்க வைக்கும்.
இப்போது நான் பட்டியலிட்ட பதினொன்று மட்டுமல்ல. இன்னும் பல தொழில்துறை சார்ந்து மட்டுமே, இவ்வளவு வேலைகளை கிருஷ்ணகிரிக்காக அதுவும் ஓசூருக்காக செய்து வருகிறோம். அதனால்தான் மற்ற மாநிலங்களை Challenge செய்யும் நகரமாக ஓசூர் இன்றைக்கு Develop ஆகியிருக்கிறது.
சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கும், தன்னம்பிக்கையோடு முன்னேறும் மகளிருக்கும், ஒரு வலுவான மேடையை வழங்கி வருகிறோம்.
தொழிற்சாலைகள், ஓசூரை நோக்கி தொடர்ந்து சாரைசாரையாக வருகிறார்கள்!
இன்று, இ-ஸ்கூட்டர் உற்பத்தியின் தலைநகராகவும் ஓசூர்தான் இருக்கிறது! இதன் தொடர்ச்சியாக இந்த மாநாடு, ஓசூரின் அடுத்தகட்ட உயர்வுக்கான கதவுகளைத் திறக்கும்! நான் அதை தொடர்ந்து கண்காணிப்பேன். ஸ்டாலின் என்ற பெயருக்கு ‘Man of Steel’-என்று பொருள்!
உறுதியோடு சொல்கிறேன். எஃகு போன்ற உறுதியுடன் என்னுடைய இலக்குகளில் வெற்றி பெறுவேன்! எங்கள் அரசு மேல் நீங்கள் நம்பிக்கை வைத்து, முதலீடு செய்ய வந்திருக்கும் உங்களுக்குத் தேவையான ஒத்துழைப்பை நிச்சயமாக நாங்கள் வழங்க காத்திருக்கிறோம். வழங்குவோம்.
தமிழ்நாட்டுடன் இணைந்து பயணம் செய்தால் கண்டிப்பாக வெற்றி தான்! அதனால் எப்போதும் உங்கள் முதலீடுகளை நம்முடைய தமிழ்நாட்டிலேயே மேற்கொள்ளுங்கள்! கடந்த மாநாட்டிலும் நான் சொன்னேன்… Tamil Nadu Rising மட்டுமல்ல. Tamil Nadu will keep on Rising- என்று சொன்னேன்.
நாளைய தமிழ்நாடு, வளர்ச்சிக்கு நல்லுதாரணமாக உலகத்திற்கு தன்னை வெளிப்படுத்தியிருக்கும் இந்த சிறப்பான மேடையில் இருந்து ஒரு அறிவிப்பை செய்ய நினைக்கிறேன்.
MSME துறை சார்பில், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், அக்டோபர் 9 மற்றும் 10-ஆம் தேதிகளில், கோயம்புத்தூரில் ஒரு உலக புத்தொழில் மாநாட்டை நடத்த இருக்கிறது. இந்த மாநாடு உலகம்
முழுவதுமிருந்து தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள், இன்குபேட்டர்கள், புத்தொழில் முனைவோர் ஆகியோரை ஒருங்கிணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமையும்.
ஸ்டார்ட்-அப் செக்டாரில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை இந்த மாநாடு உலகிற்கு பறைசாற்றும்! அந்த நிகழ்விற்கும் உங்களை எல்லாம் நான் வரவேற்க காத்திருக்கிறேன்.
தமிழ்நாட்டின் முன்னேற்றம் நிச்சயம்! தமிழ்நாடு முன்னேற உங்கள் பங்களிப்பு எந்நாளும் அவசியம்! என்று கூறி உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.
Also Read
-
‘ஓரணியில் தமிழ்நாடு’ : “தன்னுடைய இயலாமையால் விமர்சிக்கிறார் பழனிசாமி” - ஆர்.எஸ்.பாரதி தாக்கு!
-
'முதலில் வருபவருக்கே முன்னுரிமை'... புறநகர் ரயில்களில் செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தெற்கு ரயில்வே!
-
தமிழ்நாட்டில் இனி ‘நோயாளிகள்’ இல்லை! ‘மருத்துவப் பயனாளர்கள்’ தான்! : விரைவில் அரசாணை!
-
ஓசூரில் ரூ.1,100 கோடி முதலீட்டில் புதிய உற்பத்தி திட்டம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
ரூ.24,307 கோடி முதலீடு - 49,353 நபர்களுக்கு வேலைவாய்ப்பு : 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!