M K Stalin
“என்னிடம் வெள்ளைக் கொடியும் இல்லை, காவிக் கொடியும் இல்லை!” : புதுடெல்லியில் முதலமைச்சர் பேட்டி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (24.05.2025) நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, புதுடெல்லி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து அளித்த பேட்டி பின்வருமாறு,
நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு என்னென்ன செய்யவேண்டும், என்னென்ன பாக்கி இருக்கிறது என்று ஒரு பட்டியிலிட்டு நிதி ஆயோக் கூட்டத்தில் பேசியிருக்கிறேன்.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், பள்ளிக் கல்வித் துறைக்கான தமிழ்நாட்டிற்கு சேரவேண்டிய சமக்ர சிக்ஷா திட்டத்திற்கான நிதியைப் பெறுவது. அதுபோல கோவை, மற்றும் மதுரைக்கான மெட்ரோ திட்டங்கள் - அங்குள்ள விமான நிலையங்களை விரிவாக்குவது - சென்னையில் பறக்கும் இரயில் திட்டத்தை மெட்ரோவிடம் ஒப்படைப்பது என்ற ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறோம்.
அடுத்து, செங்கல்பட்டு, திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை (National Highways) எட்டு வழிச்சாலையாக ஆக்கவேண்டும் என்று ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறோம்.
கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறோம்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் மாண்பை நிலைநிறுத்தக்கூடிய வகையில் அவர்களுடைய சாதிப் பெயர்களின் விதிகளை மாற்றுவது - கிறிஸ்துவர்களாக மாறிய ஆதிதிராவிடர் மக்களை ஆதிதிராவிடர் பட்டியலில் சேர்ப்பது.
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டிருக்கக்கூடிய இந்திய மீனவர்களையும் மற்றும் அவர்களுடைய படகுககளையும் மீட்பது ஆகிய கோரிக்கைகளை எல்லாம் வலியுறுத்தி அங்கு நான் பேசியிருக்கிறேன். நிதி ஆயோக் கூட்டம் முடிந்த பிறகு, மாண்புமிகு பிரதமர் அவர்களை சந்திப்பதற்கு நேரம் கேட்டிருந்தேன்.
ஐந்து நிமிடங்கள் சந்திப்பதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அந்த வாய்ப்பையும் பயன்படுத்தி, இந்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி எடுத்துச் சொல்லியிருக்கிறேன்.
கேள்வி – நீங்கள் பிரதமர் அவர்களை சந்தித்த போது என்ன சொன்னார்?
முதலமைச்சர் அவர்களின் பதில் – என்ன சொல்வார்? செய்ய மாட்டார் என்றா சொல்லப் போகிறார். செய்வேன் என்றுதான் சொல்வார். செய்வாரா, செய்ய மாட்டாரா என்பது போகப்போகத்தான் தெரியும்.
கேள்வி – தொடர்ச்சியாக நீங்கள் கோரிக்கையை வைத்துக் கொண்டு வருகிறீர்கள். அதற்கான சட்டப் போராட்டம் எல்லாம் நடத்தியிருக்கிறீர்கள். உங்களுடைய கோரிக்கையை ஒன்றிய அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?
முதலமைச்சர் அவர்களின் பதில் - ஏற்கனவே மெட்ரோ இரயில் திட்டத்திற்கு வந்து சேரவேண்டிய நிதியை நிறுத்தி வைத்திருந்தார்கள். அப்போது நான் அந்த கோரிக்கையை வலியுறுத்தி சொன்னபோது, அதை உடனே செய்து கொடுத்தார். அதை நினைவுபடுத்தி, நன்றி தெரிவித்த போது, நீங்கள் வந்து சொன்னதால் நான் செய்தேன் என்று சொன்னார்.
அதுபோல, இப்போது இதை சொல்லியிருக்கிறேன் - இதையும் நீங்கள் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்.
கேள்வி – தமிழகத்திற்கு கல்வி நிதி கிடைக்குமா?
முதலமைச்சர் அவர்களின் பதில் – நம்பிக்கையோடு இருப்போம்.
கேள்வி – அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் கடும் கண்டனத்தை முன் வைத்திருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான கடுமையான போக்கை அமலாக்கத்துறையின் மூலமாக ஒன்றிய அரசு எடுத்துக் கொண்டு வருகிறது. இதுகுறித்து தலைமை நீதிபதியின் கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
முதலமைச்சர் அவர்களின் பதில் – நியாயமான கருத்து தான். நீதிபதி சொன்னது நியாயமான கருத்தை தான் சொல்லியிருக்கிறார்.
கேள்வி – பல மாநிலங்களில் அமலாக்கத்துறை தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டை வைத்துக் கொண்டிருக்கிறது – தமிழகத்திலும் அதைச் சொல்லியிருக்கிறார்கள். அதுபற்றி....
முதலமைச்சர் அவர்களின் பதில் – அது எல்லாம் அரசியல்ரீதியாக செய்வது. அதை நாங்கள் சந்திப்போம்......
கேள்வி – எதிர்க்கட்சித் தலைவர் நீங்கள் தில்லி வந்த பயணத்தை விமர்சித்திருந்தார். ஆனால் அதே அதிமுகவின் புகழேந்தி முதல்வர் வெளிப்படைத் தன்மையுடன் சென்று நிதி குறித்த கோரிக்கையை வைத்திருக்கிறார் – மறைமுகமாக அல்ல என்று சொல்லியிருக்கிறார். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
முதலமைச்சர் அவர்களின் பதில் – எடப்பாடி பழனிசாமி என்ன சொல்லியிருக்கிறார் – வெள்ளைக் கொடி காட்டப் போகிறார் என்று சொன்னார். என்னிடம் வெள்ளைக் கொடியும் இல்லை – அவரிடம் இருக்கக்கூடிய காவிக் கொடியும் இல்லை.
கேள்வி – சோனியா காந்தி, ராகுல்காந்தி சந்திப்பு பற்றி….
முதலமைச்சர் அவர்களின் பதில் – அது மரியாதை நிமித்தமான சந்திப்பு – எப்போது தில்லிக்கு வந்தாலும், அவர்களை சந்திக்காமல் நான் செல்வதில்லை. அதன் அடிப்படையில் சந்தித்திருக்கிறேன். தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருப்பேன். அதேநேரத்தில், அரசியலும் பேசினோம், அதை இல்லையென்று சொல்லவில்லை.
கேள்வி – ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை சொல்லியிருக்கிறார்கள். மணல்குவாரிலும் ஐயாயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக ஒரு குற்றச்சாட்டு சொல்லப்பட்டிருக்கிறது. அது பற்றி....
முதலமைச்சர் அவர்களின் பதில் – அது எல்லாம் பித்தலாட்டம், பொய் – தேவையில்லாமல் பொய்யை பரப்பி, பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
கேள்வி – தமிழ்நாடு அரசு இக்குற்றச்சாட்டுகளை மறுக்கிறதா?
முதலமைச்சர் அவர்களின் பதில் – அந்தந்த துறையின் அமைச்சர்கள் அப்போதைக்கப்போது மறுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இருந்தாலும், இதை திட்டமிட்டு செய்கிறார்கள். தேர்தல் நெருங்கும் நேரங்களிலும் அதை செய்வார்கள். நாங்கள் அதையெல்லாம் சந்திப்பதற்கு தயாராக இருக்கிறோம்.
Also Read
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!