M K Stalin
மீனவர்கள் விவகாரம்: “இந்தியா-இலங்கை கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தை கூட்டுக!” - முதலமைச்சர் கடிதம்!
தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 மீனவர்கள் உட்பட 15 மீனவர்கள், இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு இன்று (15-3-2024) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், இந்திய மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் அடிக்கடி கைது செய்யப்படுவது குறித்து தான் ஏற்கெனவே பலமுறை கடிதம் எழுதியுள்ளதாகவும், கடந்த வாரம் எழுதியிருந்த கடிதத்தில் இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டிருந்த 22 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க தான் கோரியிருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் அவர்கள், இன்று (15.03.2024) தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் உட்பட 15 மீனவர்களும், அவர்களது மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்று மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் மீனவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைவதுடன், மாநிலத்தில் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவ சமூகத்தினரிடையே பெருத்த கொந்தளிப்பும், விரக்தியும் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், இப்பிரச்சனைக்குத் தூதரக நடவடிக்கையின் மூலம் தீர்வு காண வேண்டியது மிக அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
எனவே இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, அதன்மூலம் இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இலங்கை அதிகாரிகளை வலியுறுத்த வேண்டுமென்றும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒன்றிய வெளியுறவுத் துறை டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
Also Read
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!