M K Stalin

“138 மீனவர்களை விடுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்”- ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் 13-12-2023 அன்று 6 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (14-12-2023) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள், IND-TN-08-MM-26 என்ற பதிவு எண் கொண்ட இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், அவர்களது அவர்களது மீன்பிடிப் படகுடன் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், கடந்த ஒரு வாரத்தில் இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவது இது மூன்றாவது சம்பவம் என கவலைபடத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை மீறும் வகையில் இதுபோன்று கைது நடவடிக்கையில் ஈடுபடுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படுவதுடன், மீனவர்களின் வாழ்வில் பெருத்த அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், இந்த ஆறு மீனவர்கள் தவிர்த்து, ஏற்கெனவே 39 மீனவர்களும், 137 படகுகளும் இலங்கைவசம் காவலில் உள்ளதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, இலங்கை வசமுள்ள 45 மீனவர்கள் மற்றும் 138 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திடத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Also Read: குறு,சிறு நிறுவனங்களின் கடன் செலுத்தும் காலத்தை நீட்டிக்க வேண்டும் - ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!