M K Stalin

”பா.ஜ.க வீழ்த்தப்படும்; 2024ல் புதிய இந்தியா உருவாகும்”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!

கர்நாடகா மாநிலம், பெங்களூரில் நடைபெற்ற மதச்சார்பற்ற கட்சிகளின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:-

கேள்வி : பெங்களூரு பயணம் எப்படி இருந்தது?

முதலமைச்சர் பதில்: மிகவும் சிறப்பாக இருந்தது. வெற்றிகரமாக அமைந்தது. உங்களுடைய வாழ்த்துகளுடன் மிகவும் சிறப்பாக நடந்தது கூட்டம். அந்தக் கூட்டத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால்,

இந்தியாவினுடைய ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டம், மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி, ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படக்கூடிய நலன், இதையெல்லாம் இன்றைக்கு மிகப்பெரிய இந்தியாவை பொறுத்தவரைக்கும், மிகப் பெரிய நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. சர்வாதிகாரம், ஒற்றைத் தன்மை எதேச்சதிகாரம், அதிகார குவியல் இதில் சிக்கி, இன்றைக்கு இந்த நாடு சிதையுண்டு போய்க்கொண்டிருக்கிறது.

அதனால், அப்படிப்பட்ட மத்தியில் இருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக வருகிற 2024-ஐ மையமாக வைத்து பாராளுமன்றத்தில் அந்த வெற்றியை பெறவேண்டும் என்பதற்காக இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு மாநிலத்தைச் சார்ந்த எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிறது. அதனுடைய முதல் கூட்டம் பாட்னாவில் நடந்தபோது,

16 கட்சிகளினுடைய தலைவர்கள் கலந்து கொண்டார்கள். நேற்றும், இன்றும் பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் 26 கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு பேசியிருக்கிறோம். தமிழ்நாட்டில் எப்படி கூட்டணி அமைத்து வெற்றியை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கிறோமோ, அதேபோல், இந்தியா முழுமையும், இதுபோன்ற ஒரு கூட்டணி அமைந்து அந்த வெற்றியை காணுவதற்கான வியூகங்கள் எல்லாம் வகுக்கப்பட்டிருக்கிறது.

அகில இந்திய அளவில், கொள்கை கூட்டணியாக மாநில அளவில் தேர்தல் கூட்டணியாக இது அமையக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கிறது. பாட்னாவிலும், அதைத் தொடர்ந்து பெங்களூரிலும் நடந்திருக்கக்கூடிய இந்தக் கூட்டத்தைப் பொறுத்தவரைக்கும், என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு பெரிய மகிழ்ச்சி எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த மகிழ்ச்சி எனக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் நிச்சயமாக நம்பிக்கைத் தரக்கூடிய மகிழ்ச்சியாக அமையும் என்ற நம்பிக்கை நாடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்ட ஒன்றிணைந்திருக்கக்கூடிய கூட்டணிக்கு என்ன பெயர் சூட்டப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். INDIA அதாவது, Indian National Developmental Inclusive Alliance என்ற அடிப்படையில் அந்தப் பெயர் அமைக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கூட்டத்தைப் பொறுத்தவரைக்கும், மும்பையில் நடத்துவதாக முடிவெடுத்திருக்கிறோம். அப்படி நடக்கக்கூடிய அந்தக் கூட்டத்தில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அதில் பேசப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே, 2024-ஐ பொறுத்தவரைக்கும் ஒரு புதிய இந்தியாவாக உருவாகும். அப்படிப்பட்ட ஆண்டாக அது அமையும். அதற்கு உங்களுடைய ஆதரவும், ஒத்துழைப்பும் தொடர்ந்து இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி : இன்று உதயமாகியிருக்கக்கூடிய இந்தியா எதிர்காலத் இந்தியாவிற்கு ஒரு மாற்றத்தை உருவாக்குமா?

முதலமைச்சர் பதில்: அதை தான் நான் முன்பே குறிப்பிட்டேனே. கடைசியில் முடிக்கும் போது என்ன குறிப்பிட்டேன். புதிய இந்தியாவாக 2024 அமையும். அதில் எல்லாம் அடக்கம்.

கேள்வி : கடந்த தேர்தலில் ராகுல் காந்தியை நீங்கள் பிரதமர் வேட்பாளராக அறிவித்து தேர்தலை சந்தித்தீர்கள். இந்த முறை அதற்கான வாய்ப்பு இருக்கிறதா?

முதலமைச்சர் பதில் : அன்றைக்கு இருந்த சூழ்நிலையை பொறுத்தவரை நான் அப்படி குறிப்பிட்டேன். ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய சூழ்நிலை பொறுத்தவரைக்கும் யார் ஆட்சியில் இருக்கக்கூடாது என்பதுதான் எங்களுடைய கொள்கை. அதைத்தான் இன்றைக்கு பேசிக்கொண்டிருக்கிறோம்.

கேள்வி: மிகப்பெரிய நெருக்கடிக்கு திமுக தள்ளப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்த அமலாக்கத்துறையுடைய நெருக்கடிகளை திமுக எப்படி சமாளிக்கப் போகிறது?

முதலமைச்சர் பதில்: இது எல்லாம் எதிர்ப்பாத்த ஒன்று தான். இன்னும் போகப்போக இன்னும் பல கொடுமைகள் நடக்கும். அதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். அதிலும் நிச்சயம் வெற்றி காண்போம். எல்லாவற்றையும் நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்பதற்கு தயாராக இருக்கிறோம்.

கேள்வி : தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய அமலாக்கத்துறை நடவடிக்கைகள் நியாயமானதானது தான் என்று பிரதமர் சொல்லியிருக்கிறாரே?

முதலமைச்சர் பதில் : அதாவது, அமலாக்கத்துறையினர் பாஜக கூட்டணியில் இருப்பவர்களின் வழக்குகளை பற்றி கண்டும் காணாமல் இருக்கிறார்கள் அல்லவா அதுதான் நியாயமானது. அவரை பொறுத்தவரைக்கும்.

கேள்வி : திமுக ஒரு ஊழல் கட்சி, எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறாரே பிரதமர்?

முதலமைச்சர் பதில் : இன்றைக்கு நடந்த கூட்டத்தில் பக்கத்தில் யார் யாரை எல்லாம் உட்கார வைத்திருந்தார்கள். பார்த்தீர்களா. அவரால் குற்றஞ்சாட்டப்பட்ட, அவரால் ஊழல்வாதிகள் என்று சொல்லப்பட்டவர்கள் எல்லாம் இன்றைக்கு அந்த கூட்டணியில் இடம்பெற்றிருக்கிறார்கள். அவர்களை அவர் அரவணைத்து கொண்டிருக்கிறார். அவர் இதை சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.