M K Stalin
அமெரிக்க பல்கலை தலைவராக தமிழர் தேர்வு: தேமதுரத் தமிழர் புகழ் திக்கெட்டும் பரவட்டும் -முதலமைச்சர் வாழ்த்து
"அமெரிக்க இலினொய் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத் தலைவராகத் தமிழர் ராஜகோபால் ஈச்சம்பாடி பொறுப்பேற்பது தமிழர்களுக்குப் பெருமை!" என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது வாழ்த்துச் செய்தியின் விவரம் பின்வருமாறு:-
“இலினொய் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழரான ராஜகோபால் ஈச்சம்பாடி அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமெரிக்காவில் உள்ள 131 ஆண்டுகள் பழமையானதும், உலகப் புகழ்பெற்றதுமான இந்த தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்கும் முதல் இந்தியர் ராஜகோபால் ஈச்சம்பாடி அவர்கள் என்பதால், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் மட்டுமின்றி இந்திய துணைக்கண்டத்திற்கே உலகளாவிய பெருமையை அவர் பெற்றுத் தந்திருக்கிறார்.
53 வயதாகும் ராஜகோபால் ஈச்சம்பாடி அவர்கள் திருவாரூரில் பிறந்து, சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பையும், அண்ணா பல்கலைக் கழகத்தின் வளாகக் கல்லூரியான கிண்டி பொறியியல் கல்லூரியில் தமது மேல்படிப்பையும் பயின்றவர்.
வரும் ஆகஸ்ட் 16 அன்று இலினொய் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத் தலைவராக பொறுப்பேற்க இருக்கும் ராஜகோபால் ஈச்சம்பாடி அவர்கள், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியில் அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகத் தெரிவித்திருப்பது, பிறந்த மண் மீது அவர் கொண்டுள்ள மதிப்புமிகு பற்றுதலின் வெளிப்பாட்டைக் காட்டுகிறது!
தமிழர்களின் தொழில்நுட்ப அறிவின் உலகளாவிய உயரத்திற்குச் சான்றாக விளங்கும் ராஜகோபால் ஈச்சம்பாடி அவர்களுக்கு, தமிழ்நாட்டு மக்களின் சார்பில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். தேமதுரத் தமிழர் புகழ் திக்கெட்டும் பரவட்டும்!”
எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
புத்தக காதலர்களே தயாராகுங்கள் : ஜன. 8 ஆம் தேதி சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்!
-
சென்னை கடற்கரை பகுதிகளை பாதுகாக்க கடல்சார் உயரடுக்கு பாதுகாப்புப்படை : அதன் சிறப்புகள் என்ன?
-
பெயர் நீக்கம் மட்டுமே பிரச்சனை அல்ல: VBGRAMG சட்டத்தின் ஆபத்து குறித்து பழனிசாமிக்கு பாடம் எடுத்த முரசொலி
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!