M K Stalin
கே.ஆர்.நாராயணனின் சமூகநீதி தீபத்தை கையில் ஏந்தி செல்லவேண்டிய காலகட்டமிது - நினைவுக்கூர்ந்த மு.க.ஸ்டாலின்
"முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் விட்டுச்சென்ற சமூகநீதி தீபத்தை, வீறுகொண்ட விவேகத்துடன் களத்தில் கையில் ஏந்தி முன்னெடுத்துச் செல்ல வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோம்" என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் கே.ஆர்.நாராயணனின் பிறந்த நாள் நூற்றாண்டு இன்று! இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில், முத்தமிழறிஞர் கலைஞரால் முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, நாட்டின் பத்தாவது குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றவர்.
அவர் குடியரசுத் தலைவரான போது "நமது ஜனநாயகத்தில் நலிந்த பிரிவினரின் வெற்றிச் சரித்திரத்தையும், சமூகநீதியின் புதிய சகாப்தத்தையும் தொடங்கி வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று முத்தமிழறிஞர் கலைஞர் மனமார வாழ்த்தியது, இன்றும் என் செவிகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.
அவரை அழைத்து வந்து, தமிழ்நாட்டில் கழக ஆட்சியில் துவங்கப்பட்ட சட்டப் பல்கலைக் கழகத்திற்கு இந்தியாவிலேயே முதன்முறையாக “அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்” எனப் பெயர் சூட்டி, திறந்திடவும் செய்தார் கலைஞர். பிறகு திராவிட இயக்கத்தின் வரலாற்றுச் சுவடுகள் நிரம்பியிருக்கும் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருவூலத்தையும் மரியாதைக்குரிய கே.ஆர்.நாராயணன் தான் திறந்து வைத்தார்.
மறைந்த குடியரசுத் தலைவருக்கும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கும் மிக நெருக்கமான, உணர்வுபூர்வமான, ஆழமான நட்புறவு மிளிர்ந்து கொண்டிருந்ததை நானறிவேன். கே.ஆர்.நாராயணன் விட்டுச்சென்ற சமூகநீதி தீபத்தை, வீறுகொண்ட விவேகத்துடன் களத்தில் கையில் ஏந்தி முன்னெடுத்துச் செல்ல வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். அவருடைய கனவுகள் நிறைவேற, தொடர்ந்து பாடுபடுவோம்! அந்த வெற்றிச் சரித்திரம் மீண்டும் திரும்ப, சபதம் ஏற்போம்!!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
"கலைஞர் என் மேல் வைத்த அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்" - இளையராஜா நெகிழ்ச்சி !
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !
-
"லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் உருவாக விதை போட்டது கலைஞர்" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!