M K Stalin

மத்திய பட்ஜெட் முழுக்க முழுக்க கார்ப்பரேட்டுகளுக்கானது - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகளின் சார்பில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி சட்டங்களுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் இன்று முதல் பிப்ரவரி 8ம் தேதி வரை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.

அதன் முதல் பகுதியாக தனது சட்டமன்றத் தொகுதியான சென்னை கொளத்தூரில் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். அதன் பிறகு வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றார்.

அப்போது, மக்கள் முன்னிலையில் பேசிய மு.க.ஸ்டாலின், மத்திய பட்ஜெட்டில் புதிய வேலை வாய்ப்புகள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. அரசுத் துறைகளை தனியார் மயமாக்கும் அறிவிப்புகளே பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது என குற்றஞ்சாட்டினார்.

பெரும் பணக்காரர்களுக்கும், மிட்டா மிராசுதாரர்களுக்கும் பயன்பெறும் வகையிலேயே மத்திய பட்ஜெட் அமைந்திருக்கிறது. 2.42 மணிநேரம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை வாசித்திருக்கிறார். அதில், எள்ளளவும் நாட்டு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இல்லாதது வேதனையை தருகிறது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், குடியுரிமை சட்டம் , தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் நிறைவேற முக்கிய காரணமாக இருந்தது தமிழகத்தில் உள்ள அ.தி.மு.கவும், பா.ம.கவும்தான் என குற்றஞ்சாட்டினார். இவ்விரு கட்சிகளாலேயே நாட்டில் பல்வேறு இடங்களில் வன்முறைகள் நிகழ்ந்து வருகின்றன எனவும் சாடினார்.

இவ்வளவு போராட்டங்கள் நடைபெற்றும் மத்திய பா.ஜ.க. அரசு ஆணவத்தோடும், சர்வாதிகாரத்தோடும் செயல்பட்டு வருகிறது. ஆகையால், இந்த குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நடைபெறும் கையெழுத்து இயக்கம் மாபெரும் வெற்றி பெரும் என தெரிவித்த மு.க.ஸ்டாலின், இந்த சட்டங்களால் நிகழும் பாதிப்புகளை எடுத்துச் சொல்லி வீடு வீடாகச் சென்று கையெழுத்து பெருவோம் என்றும் கூறினார்.