எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி பீகார் வரைவு வாக்காளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. ஆனால், மொத்த வாக்காளர் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. தொகுதி வாரியாக வெளியாகி உள்ள பட்டியல் அடிப்படையில் கணிக்கிட்டபோது ஒவ்வொரு மாவட்டத்திலும் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
நடப்பாண்டு இறுதியில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 65 முதல் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவுக்கு ஆதரவாக இந்த நீக்கம் நடத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதனிடையே பிகார் எதிர்கட்சித் தலைவரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "என்னுடைய பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. அப்புறம் எப்படி நான் தேர்தலில் போட்டியிட முடியும்?"என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும், நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர், பூத் எண் மற்றும் வாக்காளர் எண் போன்ற விபரங்களை கொடுக்காததால், நீக்கப்பட்டவர்களின் விபரங்களை கண்டறிய முடியவில்லை" என்றும் அவர் விமர்சித்துள்ளார்.